சாலைகளில் வாகனங்கள் அதிகரிக்க, அதிகரிக்க காற்று மாசும் அதிகரிக்கிறது. இந்த காற்று மாசால் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. காற்றில் கலந்துள்ள பி.எம்.2.5 எனும் மெல்லிய துகள் காரணமாக ஆஸ்துமா, நுரையீரல் அடைப்பு நோய், மூச்சுக் குழாய் அழற்சி, நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருளில் இயக்கப்படும் வாகனங்கள், 2.5 மெல்லிய துகள்கள் காற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ளன.
காற்றில் மாசு ஏற்படுவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கப்பதற்கான முயற்சியிலும் ‘யூலு’ (Yulu) என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் நிறுவனர் அமித் குப்தா(43) கூறுகையில், “நாங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காற்று மாசுவிற்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு காணவேண்டும் என்று கருதுகின்றோம். இதற்கு மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள்தான் சிறந்த தீர்வு. இதனால் காற்றில் மாசு ஏற்படாது. பெரிய நகரங்களுக்கு எங்கள் மின்சார வாகனங்கள் சிறந்த உதாரணமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
யூலு நிறுவனம் இரண்டு விதமான இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. யூலு மூவ் என்பது நவீன சைக்கிள். யூலு மிரேசில் என்பது மின்சாரத்தால் இயங்கும் பைக் அதை இ-பைக் எனலாம். இந்த மின்சார பைக் லித்தியம் அயன் பேட்டரியில் இயங்குகிறது. சென்ற மார்ச் மாதம், புதிதாக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், அதிகபட்சம் மணிக்கு 25 கி.மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்தால் 60 கி.மீட்டர் வரை செல்லலாம்.
Also read: பிரவுசிங் சென்டர்களில் இவற்றையும் செய்யலாம்!
யூலு சைக்கிள், மின்சாரத்தால் இயங்கும் இ-பைக், சைக்கிள் பயன்படுத்த வாடகை கட்டணம் செலுத்த வேண்டும். முதன் முறை ஆப் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு டெபாசிட்டாக ரூ.250 செலுத்த வேண்டும். இந்த டெபாசிட்டை திரும்ப வாங்கிக் கொள்ளலாம். இ-பைக்கிற்கு முதலில் ரூ.10 கட்டணம் வசூலிக்கின்றனர். அடுத்து ஒவ்வொரு 10 நிமிட பயன்பாட்டிற்கும் கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். சைக்கிளுக்கு முதல் 30 நிமிடத்திற்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ரூ.5 கட்டணம் விதிக்கப்படுகிறது. இதை புறப்பட்ட இடம் என்று இல்லாமல் எந்த இடத்திலும் விட்டுச் செல்லலாம். இரவு வைத்துக் கொள்ள வேண்டும் எனில் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
சென்ற ஆண்டு 2018 ஜனவரி முதல் யூலு நிறுவனம் சைக்கிள், இ-பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் பயன்பாட்டால் 935 டன் கரியமில வாயு காற்றில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. யூலு வாகனங்கள் ஓடிய மொத்த தூரத்தை கணக்கிட்டு, அதே தூரம் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளால் வாகனங்கள் ஓடி இருந்தால், ஏற்படும் காற்று மாசுவை கணக்கிட்டுள்ளது.
யூலு நிறுவனத்தை தொடங்கிய அமித் குப்தா, 2000ல் கான்பூர் ஐ.ஐ.டி யில் மெக்கானிகல் பட்டம் பெற்றவர். “இப்போதுதான் நான் படித்த படிப்பு பயன்படுகிறது” என்கிறார் அமித் குப்தா. இவர் மொபைல் போன் ஆப் போன்றவைகளையும், புதிய கண்டுபிடிப்புகள் சேவைகளை உருவாக்கும் இன்மொப் என்ற நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவர். இவர் 2017ல் யூலு நிறுவனத்தை தொடங்குவதற்காக, அதில் இருந்து விலகினார். யூலு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சைக்கிள், இ-பைக் எவ்வாறு மக்களுக்கு பயன்படுகிறது என்று பார்ப்போம்.
பெங்களூரைச் சேர்ந்தவர் ரோகன் மிட்டல் நண்பர்களுடன் காபி சாப்பிட்டு பேசிக் கொண்டிருந்தார். அவர் வாடகை காருக்காக நீண்ட நேரம் காத்திருந்தார். ஆனால் கார் வரவில்லை. அப்போதுதான் முதன் முறையாக யூலு சைக்கிள், இ-பைக் பற்றி கேள்விப்பட்டார். அதில் இருந்து கடந்த எட்டு மாதங்களாக யூலு சைக்கிளைதான் பயன்படுத்துகிறார். தினசரி 20 கி.மீட்டர் பயணம் செய்யும் ரோகன் மிட்டல், நீங்கள் எப்போதாவது யூலு சைக்கிளை ஓட்டி இருக்கிறீர்களா? இது மிக நன்றாக உள்ளது என்கிறார். இவர் யூலு சைக்கிளை விரும்ப மற்றொரு காரணம், இதன் வடிவமைப்பு என்கின்றார். யூலு நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களின் கருத்து அறிந்து, நவீனப்படுத்திக் கொண்டே உள்ளனர். சொந்தமாக சைக்கிளை வாங்குவதைவிட, யூலு சைக்கிள் பயன்படுத்தவே விரும்புகின்றேன். உங்களுக்கு பிடித்த சைக்கிள் கிடைப்பது கடினம் மட்டுமல்ல, அதை பராமரிக்க வேண்டும் என்கின்றார் ரோகன் மிட்டல்.
Also read: நிலக்கரி சாம்பல் மொத்த விற்பனையில் அசத்தும், நஜ்முன்னிசா
நாங்கள் முதன் முதலில் சைக்கிள், இ-பைக் அறிமுகப்படுத்தும் போது, இதை பற்றி அரசிடம் சரியான கொள்கை இல்லை. தற்போது மத்திய அரசு காற்று மாசுவை குறைக்கவும், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தவும் கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹைப்ரிட் வாகனங்கள், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கான கொள்கைளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வாகனங்கள் இயக்குவதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து, அவைகளுக்கு தீர்வு காண யூலு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு இ-பைக் அறிமுகப்படுத்திய பிறகு, இதை சார்ஜ் செய்ய போதிய சார்ஜ் ஸ்டேஷன்கள் இல்லை என்பதை உணர்ந்தனர். எனவே, சிறிய சார்ஜ் ஸ்டேஷன்களை வடிவமைத்து, டெக் பார்க், வண்டிகள் நிறுத்துமிடம், மற்ற கடைகள் ஆகியவற்றின் அருகில் நிறுவியுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு உதவ 160 ஊழியர்களும் உள்ளனர். பேட்டரியை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைத்துள்ளனர்.
2018ல் பெங்களூரில் யூலு நிறுவனம் சைக்கிள், இ-பைக் வாடகைக்கு விட தொடங்கியது. பூனா, மும்பாய், புவனேஷ்வர் ஆகிய நகரங்களிலும் சேவையை தொடங்கி உள்ளது. இதன் சேவையை 15 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். தற்போது, இந்தியாவில் யூலு நிறுவனம் மிக அதிக அளவு சைக்கிள், இ-பைக் வாடகைக்கு விடும் நிறுவனமாக உள்ளது. இது 8,500 சைக்கிள், 2,500 இ-பைக் வாடகைக்கு விடுகின்றது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 50 நகரங்களில் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
“எங்கள் சேவையை பெரிய நகரங்களிலும், சுமார்ட் சிட்டிகளிலும் அறிமுகப்படுத்துவதே எங்கள் இலக்கு. 2022க்குள் பத்து லட்சம் இ-பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். தகுந்த கூட்டு நிறுவனத்துடன் இணைந்து வெளிநாடுகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்” என்று அமித் குப்தா தெரிவித்தார்.
– த. செந்தமிழ்ச் செல்வன்