நாம் இந்த உலகத்தில் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ பொருள் தேவைப்படுகின்றது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது வள்ளுவர் வாக்கு.
பொருள் – வருவாய் வேண்டும் என்பதற்காக நாம் விரும்பி, தேடி, முயன்று ஏதாவது ஒரு தொழில், வேலை செய்கின்றோம். செய்யும் தொழில்கள், வேலைகள் வேறுபடலாம். வருவாயில் ஏற்றத்தாழ்வு இருக்கலாம். ஆனால் நோக்கம் ஒன்றுதான். வருவாய் கிடைக்க வேண்டும்.
ஆனால், அதோடு மனம் நிறைவு அடைவது இல்லை. செய்யும் தொழிலோ, வேலையோ உள்ளத்திற்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் மனம் எதிர்பார்க்கிறது.
சொந்தமாக தொழில், வணிகம் செய்பவராக இருந்தாலும், வேலை பார்ப்பவராக இருந்தாலும் தாம் செய்யும் பணி பற்றி ஒரு தெளிவு இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களால்தான் வெற்றி பெற முடியும். வாழ்க்கையில் முன்னேற முடியும்.
Also read: எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?
இரண்டு அகக்காரணிகள்:
எந்த ஒரு பணியைச் செய்தாலும், அதனை எவ்வளவு உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செய்கின்றோமா என்பதை இரண்டு அகக்காரணிகள் தீர்மானிக்கின்றன.
ஒன்று – அப்பணியில் நமக்கு இருக்கும் விழைவு, அதாவது ஈடுபாடு(Aptitude).
இரண்டு – அதனைப் பற்றிய நமது கண்ணோட்டம்(Attitude).
இந்த இரண்டு காரணிகளும் நாம் செய்கின்ற தொழிலில், நாம் பெறுகின்ற முன்னேற்றத்தை (வெற்றியை) மட்டுமின்றி நமது ஆளுமையையும் தீர்மானிக்கின்றன.
வாழும் வாழ்க்கையும், செய்யும் பணியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக – பிரிக்க முடியாத பகுதிகள் என எண்ணலாம்.
ஈர்க்கும் ஈடுபாடு:
இரண்டு பேர்கள் ஒரே வேலையை, சான்றாக தச்சு வேலை செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு பேரும் ஆறு மணி நேரத்தில் ஆளுக்கு ஒரு நாற்காலி செய்வதாக வைத்துக் கொள்வோம். கடைசியில் பார்த்தால் இரண்டு நாற்காலிகளின் தரமும் ஒன்று போல இருக்காது.
ஒருவருக்கு தான் செய்யும் தொழிலில் ஈடுபாடு, மனமகிழ்ச்சி இருக்கின்றது. அவர் செய்த நாற்காலியின் தரமும் அழகும் கூடுதலாக இருக்கிறது. இன்னொருவர் தனக்குக் கிடைக்கும் கூலிக்காக மட்டும் செய்பவர். அவர் செய்த நாற்காலி சாதாரணமாக இருக்கும்
தொழில் செய்வதில் ஒரு மகிழ்ச்சி இருக்கின்றது. செய்யும் தொழிலில் இன்பம் காணத் தொடங்கி விட்டால், அதனை நேசிப்போம். தொழிலை நாம் காதலித்தால் தொழில் நம்மைக் காதலிக்கும். இது ஒரு தொழில் ரகசியம்.
சில வேளைகளில் சூழ்நிலை காரணமாகவோ, தான் விரும்பும் தொழில் அல்லது வேலை அமையாததாலோ, கிடைத்த வேலையை அல்லது தொழிலை செய்ய நேரலாம். முதலில் அந்த தொழிலில் அல்லது வேலையில் வெறுப்பு கூட ஏற்படலாம். அப்படி வெறுப்பு ஏற்படும் சூழ்நிலை என்றால் அந்த தொழிலை விட்டு வேறு தொழிலை தேடிக்கொள்ள வேண்டும்.
அப்படி இல்லாமல் அந்த தொழிலைத்தான் செய்ய வேண்டிய கட்டாய நிலை இருந்தால், அந்த தொழிலில் ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த தொழில் தொடர்பான நுட்பங்களை அறிய வேண்டும்.
Also read: ஆர்வம் இருக்கிறது; படித்துக் கொண்டே தொழில் செய்கிறேன்
அதுதான் நமது தொழில் என்று தீர்மானித்து விட்டால் அதில் விருப்பத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்ணோட்டம்:
நாம் செய்யும் தொழில் பற்றிய நமது கண்ணோட்டம் மிகவும் முதன்மையானது. சொந்த தொழில் செய்பவராக இருந்தாலும், ஊதியத்திற்கு வேலை செய்பவராக இருந்தாலும், செய்யும் தொழில் அல்லது வேலையின் மேம்பாட்டை உணர்ந்திருக்க வேண்டும். அதில் அவருக்கு பெருமை இருக்க வேண்டும். அந்த பெருமையை அவர் உணர்ந்து விட்டால், அவரது செயல்பாட்டில் தனி ஆற்றல் பிறக்கும்.
– மாபா