அந்த சாலையோர மாலைநேர உணவகத்தில் இரண்டு சகோதரர்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். அண்ணன் சிற்றுண்டிகளை தயார் செய்து கொண்டிருந்தார். தம்பி பரிமாறும் பணியை செய்து கொண்டிருந்தார்.
அன்று நான்தான் முதல் ஆளாக அந்த உணவகத்திற்கு சென்று எனக்கான சிற்றுண்டியை கொண்டு வருமாறு கூறினேன். உடன் தம்பி நான் கேட்ட சிற்றுண்டியை கொண்டு வந்து பரிமாறினார். அவரிடம் ஏதாவது பேசலாம் என்று எண்ணி முதலில் “தம்பி நீ படிக்கின்றாயா?” என்ற ஒரு எளிய கேள்வியை கேட்டேன்.
உடன் அவர், “நான் அருகில் உள்ள கல்லூரியில் இளங்கலை வேதியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றேன். நாளை காலை வேதியியல் செயல்முறை பயிற்சி தேர்வு இருக்கின்றது. அது முடிந்து மாலை கால்பந்து போட்டி இருக்கின்றது. அதிலும் நான் கலந்து கொண்டு விளையாட வேண்டும்.
Also read: வணிகக் கதை: புலி தொடங்கிய தொழிற்சாலை!
அது முடிந்ததும் இந்த உணவகத்தில் இரவு 11 மணி வரை பரிமாற வேண்டும். அதற்குப் பிறகு வீட்டிற்கு செல்வேன். விடியற் காலை நான்கு மணிக்கு எழுந்து அன்றன்றைய பாடத்தை படித்து விடுவேன்” என தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி கூறினார். இடையே அண்ணன் “என்னுடைய தம்பி சிறந்த கால்பந்து வீரராக பிரபலமாகி விட்டதால் அவருடைய கல்லூரி நண்பர்கள் அனைவரும் அவரை ரொனால்டோ என்றே சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர்” என பெருமையுடன் கூறினார்.
நான் “கல்லூரிப் படிப்பு, கால்பந்து விளையாட்டு, இந்த சிற்றுண்டி உணவகத்தில் வேலை என ஒரே குழப்பமாக இருக்காதா உனக்கு?” என் அடுத்த கேள்வி தொடர்ந்தது.
“இதில் குழப்பம் ஏன்? வருகின்றது ஐயா! எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கல்லூரியில் பயின்று வருகின்றேன்; பொழுதுபோக்கிற்காக கால்பந்து விளையாடி வருகின்றேன்; வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான உணவு போன்ற அனைத்து பொருட்களையும் பெறுவதற்காக மாலையில் இந்த சிற்றுண்டியகத்தில் பணிபுரிந்து வருகின்றேன்; அந்தந்த நேரத்தில், அந்தந்த பணிகளை மட்டும் மனநிறைவோடும், மகிழ்ச்சியாகவும் செய்து வருகின்றேன். மேலும் என்னுடைய அண்ணன், கால்பந்து விளையாடுவதற்குத் தேவையான விலை அதிகம் உள்ள முழுக்காலணியை பரிசாக எனக்கு வழங்கியுள்ளார்” என மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார். இந்த மாணவன் எவ்வளவு தெளிவாக இருக்கிறான் என்ற வியப்புடன் அவனைப் பாராட்டினேன்.
முனைவர். குப்பன்