ஓட்ஸ் தானிய உணவை தம் வீட்டார்களுக்கு பழக்கப் படுத்திய திருமதி. கவுரி குப்தா, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் இந்த உணவு வகைகளை விரும்பவே, அவர்களுக்கும் தயாரித்துக் கொடுக்கத் தொடங்கினார். இப்போது அதுவே அவருக்கு மிகச் சிறந்த வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் ஆகி விட்டது. தன்னிடம் இருந்த ஓட்ஸ் தானிய உணவுகள், நொறுவைகளை தயாரிக்கும் திறமையை அருமையான தொழில் ஆக்கி விட்டார்.
மும்பை மத்திய தொழிற்சாலைப் பகுதியில், ஓட்ஸ் மற்றும் சிறு தானியங்களை கலந்து வகை வகையான உணவுகளையும், சில பேக்கரி பொருட்களையும் சுவையாக தயாரித்து விற்பனை செய்து கொண்டு இருக்கும் திருமதி. கவுரி குப்தா, தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு ஆகத் திகழ்கிறார்.
Also read: தொழில் ஆலோசனை: சத்து மிக்க, தீங்கு அற்ற இடை உணவுகளுக்கு வாய்ப்பு
சிறு வயது முதலே விதம் விதமான உணவு வகைகளை தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டியருந்தார். விடுமுறை நாட்களில், தமது வீட்டில் இருப்பவர்களுக்கு சிற்சில ஓட்ஸ் பிஸ்கட்களையும் , வேறு நொறுவைகளையும், தேநீருடன் உண்ணக் கொடுப்பார். இப்படி கோதுமை கலக்காத பேக்கரி பொருட்களையும் செய்து கொடுத்து மகிழ வைப்பார்.
இன்றைக்கு சுமார் நான்காயிரத்து ஐநூறு வாடிக்கையாளர்களை நிலையாகப் பெற்று இருக்கும் திருமதி. கவுரி குப்தா, வரும் அனைவருக்கும் அன்பான ஆன்டியாக திகழ்கிறார்.
சுவையான ஓட்ஸ் மற்ற தானிய தின்பண்டங்களை சுவைத்தவர்கள், தங்கள் உறவினர்கள், நண்பர்களிடமும் இந்த விற்பனையகம் பற்றி எடுத்துக் கூறுவதன் வாயிலாகவே பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. வாடிக்கை யாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அந்த குறையை நீக்குவதிலும் திருமதி. கவுரி முனைப்பு காட்டுகிறார்.
தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தேவை ஏற்பட்டால் ஊட்டச் சத்து பற்றிய ஆலோசனைகளையும் எடுத்துக் கூறுகிறார். அவர்களுக்கு, புரதம் நிறைந்த தின்பண்டங்கள் தேவை என்றால் அதற்கேற்ப தனியாக தயாரித்து வழங்குகிறார்.
அயல் நாட்டில் இருந்து விடுமுறைகளில் வரும் தனது மகன், மருமகளை, பேரக் குழந்தைகளை இந்த பண்டங்களின் சுவையை எடுத்துரைத்து, தவறாது அழைத்து வரும் பெற்றோர் அதிகம்.
Also read: உணர்வுகளையும், ஆற்றலையும் ஒன்று படுத்தும் தேநீர்
மருத்துவ குணம் கொண்ட தானிய வகைகளைத் தேர்ந்தெடுத்து உணவாகத் தயாரிக்கும் நுட்பத்தையும் இவர் அறிந்து வைத்து இருக்கிறார்.
மக்களின் உடல் நலத்தை மையப்படுத்தியே உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்கிறார். நீரிழிவு குறைபாடு கொண்டவர்களுக்கு இனிப்பை குறைத்து பண்டங்களைத் தயாரிக்கிறார். பொதுவாகவே வெள்ளை சர்க்கரையை(சீனி) பயன்படுத்தாமல் தேனைக் கலந்து உணவுகளை தயாரித்து வந்தார். பின்பு பனங்கற்கண்டு, பனை வெல்லத்தின் மருத்துவ குணங்களை அறிந்து, பனைப் பொருட்களையும் பயன்படுத்துகிறார்..
– முத்து செல்வராஜா