ஸ்னாக்ஸ் என்று குறிப்படப்படும் இடை உணவுகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த இடை உணவுகள் எல்லா கடைகளிலும் சிப்ஸ்களாக, வறுத்த பாசிப் பருப்புகளாக, வேர்க்கடலை பாக்கெட்டுகளாக சரம் சரமாகத் தொங்குகின்றன. இப்போது மிக்சர், சீடை, முறுக்கு, வறுத்த கடலைப் பருப்பு போன்றவையும் சரங்களாகி விட்டன.
தேநீர்க் கடைகளில் பட்டர் பிஸ்கட்கள் பாட்டில் பாட்டில்களாக அடுக்கி வைக்கப் பட்டு இருக்கின்றன. இவை இடை உணவுகளாக வாங்கி உண்ணப்படுகின்றன. உணவியல் வல்லுநர்கள் இடைஇடையே உடல் நலனுக்கு உகந்த இடை உணவுகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள். சிப்ஸ் போன்றவை உடல் நலனுக்கு உகந்தவை இல்லை என்ற எண்ணம் பரவி வருவதால், இடை உணவுகளாக கொட்டைகள், பருப்புகள் கலந்து செய்யப்படும் சாக்லேட்கள் போன்றவற்றை வாங்கி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
Also read: வீட்டுச் சாக்லேட்களுக்கும் இருக்கிறது, விற்பனை வாய்ப்பு!
மைதா மாவுக்கு எதிரான பரப்புரையால் நிறைய பேர்கள் மைதாவால் செய்யப்பட்ட பிஸ்கட்களை விரும்பி வாங்குவது இல்லை. இதனால் மைதா சேர்க்காத இடை உணவுகளின் சந்தை விரிவடைந்து வருகிறது. பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் பழங்களை மூலப் பொருட்களாக வைத்து செய்யப்படும் சாக்லேட் வடிவிலான இடை உணவுகளைத் தயாரித்து பல நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. ஆனால் இவற்றின் விலை பெரும்பாலும் நூறு ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. நடுத்தர மக்கள் இவற்றை எப்போதாவது ஒரு முறை வாங்குகிறார்கள், அவ்வளவுதான். இவையும் பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கின்றன.
நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் இப்படிப்பட்ட சத்துள்ள சாக்லேட் பார்களை தயாரித்து சந்தைப் படுத்தலாம். என்னென்ன பருப்புகள், உலர் பழங்களைச் சேர்த்தால் எதிர்பார்க்கும் புரதம் உள்ளிட்ட சத்துகள் கிடைக்கும் என்பதை உணவியல் வல்லுநர்கள் துணையுடன் கணக்கிட்டு தயாரித்து சந்தைப்படுத்தலாம். வெள்ளைச் சர்க்கரை யையும் உடல் நலனுக்கு எதிரானது என்று கூறப்பட்டு வரும் நிலையில் இனிப்புச் சுவை குறைவாக இருக்குமாறு தயாரிக்க வேண்டியது மிகத்தேவை. இருபத்தைந்து ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை விலை வைத்து சந்தைப்படுத்தினால் நிறைய பேர்கள் வாங்கி உண்ண வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் அமைந்தால் விற்பனை இன்னும் அதிகரிக்கும்.
சந்தையில் கிடைக்கும் இத்தகைய உணவுப் பொருட்களை ஆராய்ச்சி செய்தால், நிறைய செய்திகளை தெரிந்து கொண்டு செயல்படலாம்.
– நேர்மன்