நிறுமங்களின் சட்டம் 2013 இல் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமங்களில் நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும் என்றோ அல்லது நியமனமே செய்ய வேண்டாம் என தடுக்கவோ, தவிர்க்கவோ இல்லை. ஆயினும், எந்த ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமும் திறனுடன் செயலாற்றுவதற்காக, அந்நிறுமத்தில் நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குரை நியமித்து கொள்வது நல்லது என பரிந்துரைக்கப் படுகின்றது.
நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 2 (54) இன்படி நிருவாக இயக்குநர் என்பவர் நிறுமத்தின் நிறும அமைப்பு விதிமுறைகளின் படி (Articles of Association) அல்லது அந்த நிறுமத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி அல்லது நிறுமத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி அல்லது இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி நிறுமத்தை திறம்பட நடத்தி செல்வதற்கான அந்நிறுமத்தின் அனைத்து அதிகாரங்களையும் கைகொண்டு செயல்படும் நிருவாக இயக்குநர் அல்லது வேறு ஏதேனும் பெயரில் செயல்படும் நபராவார்.
நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 2 (94) இன்படி முழுநேர இயக்குநர் என்பவர் அந்நிறுமத்தின் முழு நேரமும் பணிபுரியும் இயக்குநராவார். வேறு சொற்களில் கூறுவதெனில், ஒரு நிறுவனத்தின் விவகாரங்களை கவனித்துக் கொள்வதில் தனது முழு நேரத்தையும் கவனத்தையும் செலவழித்து பணிபுரியும் இயக்குநரே முழுநேர இயக்குநராவார்.
Also read: “தொழில் சார்ந்த கொள்கை முடிவே சரியான பொருளாதார நடைமுறை”
ஏற்கனவே ஒரு நிறுமத்தின் இயக்குநராக இருக்கும் நபர் மட்டுமே அந்நிறுமத்தில் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமிக்க முடியும். அதனால் ஒருநபர் எந்த ஒரு நிறுமத்திலும் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ செயல்பட வேண்டுமெனில் முதலில் அந்த நபர் அந்நிறுமத்தில் இயக்குநராக இருக்க வேண்டும் என்பது முன் நிபந்தனையாகும்
அதனால் தற்போது ஏதேனும் ஒரு நபரை, ஒரு நிறுமத்தில் கூடுதல் இயக்குநராக இயக்குநர்களின் குழுவில் நியமனம் செய்தால் அந்த கூடுதல் இயக்குநராக பதவி வகிப்பவர் தானாகவே அந்நிறுமத்தின் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமனம் செய்வதற்கு தகுதி உடையவர் ஆகின்றார்.
ஆயினும், அந்த கூடுதல் இயக்குநர் பதவி அடுத்த பொதுப்பேரவை கூட்டம் நடைபெறும் வரை மட்டுமே நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ பதவி வகிக்க முடியும் அந்த பொதுப்பேரவை கூட்டத்தில் அந்த கூடுதல் இயக்குநரை மறுநியமனம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் தானாகவே அக்கூடுதல் இயக்குநர் தொடர்ந்து அந்நிறுமத்தின் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ பதவி வகிக்க இயலும்.
பொதுவாக எந்த ஒரு நிறுமத்திலும் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமனம் செய்பவருக்கு குறைந்த பட்சம் 21 வயதும் அதிக பட்சம் 70 வயதும் இருக்க வேண்டும் 70 வயதிற்கு மேல் எனில் அந்நிறுமத்தின் பொதுப்பேரவை கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி பொதுப்பேரவையில் உறுப்பினர்கள் அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமனம் செய்ய முடியும். மேலும், காலநீட்டிப்பு வேண்டுமெனில், மற்றொரு ஐந்து ஆண்டிற்கு மறுநியமனம் செய்து கொள்ளலாம்.
ஆயினும் இயக்குநரின் பதவி காலம் ஒரு ஆண்டிற்குள் இருக்கும் போது நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமனம் செய்ய முடியாது. இந்நிலையில் நிருவாக இயக்குநர், முழுநேர இயக்குநர் ஆகிய இரண்டு பதவிகளையும் வகிப்பவர்கள், நிறுமத்தின் நிருவாகத்தை திறம்பட நடத்துபவர்கள்தான் எனில் இவ்விருவர்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை என்ற கேள்வி நம் மனதில் இயல்பாக எழும்.
நிருவாக இயக்குநரை ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே ஒவ்வொரு முறையும் நியமனம் செய்ய முடியும். முழுநேர இயக்குநர் அவர் வாழ்நாள் முழுவதற்குமாக நியமனம் செய்யலாம். தனிநபர் ஒருவர் நிருவாக இயக்குநராக இரண்டு நிறுமங்களில் மட்டுமே பணிபுரிய முடியும். ஆனால் முழுநேர இயக்குநர் ஒரே ஒரு நிறுமத்தில் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப் படுவார்.
நிறுமங்களின் சட்டம் 2013 இன்படி நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை நியமனம் செய்வதற்கான வழிமுறைகள்
நிறுமத்தின் அமைப்பு விதிமுறைகளில் இவ்வாறு நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை நியமனம் செய்வதற்காக குறிப்பிடப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவ்விதிமுறைகளில் திருத்தம் செய்வதன் வாயிலாக நியமனம் செய்வதற்கான விதிமுறைகளை சேர்க்க வேண்டும். அதற்காக இயக்குநர்களின் குழுக்கூட்டத்தை கூட்டி அதில் நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை நியமனம் செய்வதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெறவேண்டும். மேலும் நியமனம் செய்யும் நிருவாக இயக்குநர் உடன் அல்லது முழுநேர இயக்குநர் உடன் இந்நியமனம் தொடர்பான நிபந்தனைகள், விதிமுறைகள் ஆகியவற்றுடன் தனியாக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
Also read: பங்குதாரர் நிறுவனங்கள் ஏன் தொடர்ந்து நிலைப்பது இல்லை?
படிவம் எண் டிஐஆர் (DIR) – 12 இல் நிருவாக இயக்குநரை பற்றிய அல்லது முழுநேர இயக்குநரை பற்றிய விவரங்களை முழுவதுமாக நிரப்பிய பின், இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் இதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான படிவம் எண் எம்ஜிடி (MGT) – 14 இல் மேலும், தேவையான விவரங்களை நிரப்பிக் கொண்டு இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட முப்பது நாட்களுக்குள் நிறுமங்களின் விவகார அமைச்சகத்தின் எம்சிஏ (MCA) கீழ் செயல்படும் நிறுமங்களின் பதிவாளரிடம் இவ்விரு படிவங்களையும் வழங்க வேண்டும்.
புதியதாக நியமனம் செய்வது மட்டுமல்லாமல் மறுநியமனம் செய்வது நியமன நிபந்தனைகளை அல்லது விதிமுறைகளில் மாறுதல்கள் செய்து கொண்டாலும், அதையும் படிவம் எண் டிஐஆர் – 12 படிவம் எண் எம்ஜிடி – 14 ஆகியவற்றின் வாயிலாக நிறுமங்களின் பதிவாளரிடம் வழங்க வேண்டும். எந்த ஒரு நிறுமத்திலும் சாதாரண இயக்குநர் பதவியை வகிப்பவர் எனில் அவ்வியக்குநர் தன் பதவி விலகலை எழுத்து மூலமாக தம் நிறுமத்தின் இயக்குநர் குழுவிடம் அளித்து விட்டால் போதுமானது ஆகும்.
ஆயினும் நிருவாக இயக்குநர் அல்லது முழுநேர இயக்குநர் எனில் பதவி விலகல் கடிதம் அளித்து அந்த கடித்தத்தை இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் ஏற்றுக் கொண்டால் மட்டுமே பதவி விலக முடியும். அதுவரையில் அவர் தன் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும். தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பொதுப்பேரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறத் தேவையில்லை. அவ்வாறே, அவர்களுக்கான ஊதியம் தொடர்பான நிறுமங்களின் சட்ட விதிகள் பொருந்தாது. மின்னனு படிவம் எண் MR – 1 வழங்கவும் தேவையில்லை.
– வசந்தகுமார்