ஒரு தொழிலைத் தொடங்கும்போது, அந்த தொழிலை எந்த அமைப்பில் தொடங்குவது என்பது ஒரு முதன்மையான கேள்வி ஆகும். தனி உரிமையாளர் ஆகத்தொடங்கலாம்; பங்குதாரர் நிறுவனமாகத் தொடங்கலாம்; பிரைவேட் லிமிடெட் ஆகத் தொடங்கலாம்; லிமிடெட் ஆகத் தொடங்கலாம். தனி உரிமையாளர் (சோல் ப்ரோப்ரைட்டர்) ஆக இருந்து தொடங்குவதில் பல நன்மைகள் இருக்கின்றன. முடிவு எடுப்பதில் எந்த தடையும் இருக்காது. அவர் அனுபவத்தில், தனக்குத் தோன்றும் முடிவுகளை சுதந்திரமாக எடுக்கலாம். அந்த முடிவுகளால் ஏற்படும் பயன்களை அடையலாம். ஒரு தவறான முடிவு எடுத்து அதன் காரணமாக எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டாலும், இவரை யாரும் குறை சொல்ல முடியாது. அரசு சார்ந்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டாலே போதும். வருமானம் அனைத்தும் இவர் பெயரிலேயே சேரும் என்பதால் வருமான அளவின் அடிப்படையில் வருமான வரி செலுத்த நேரிடும்.
அடுத்து, பங்குதாரர் நிறுவனம். அனைவருக்கும் அனைத்து திறமைகளும் இருப்பது இல்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை இருக்கும். ஒரு தொழிலை திட்டமிடும் தொழில் முனைவர், தன் வட்டத்தில் உள்ள பல்வேறு திறமைசாலிகளை பங்குதாரர்களாகச் சேர்ந்து தொழிலைத் தொடங்கினால், அது நிறுவனத்தில் வளர்ச்சிக்கு அதிகம் பயன்படும் என்று கருதி அவர்களைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்வார்.
சிலர், தங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் முதலீட்டுக்காக சிலரை பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்வார்கள். நீண்ட கால நட்புறவு இருக்கிறது என்பதறாகாகவும், கூடப் படித்தவர்கள் என்பதற்காகவும் கூட பங்குதாரர்களாக இணைத்துக் கொள்பவர் கள் இருக்கிறார்கள்.
குடும்ப உறுப்பினர்களை பங்குதாரர் களாகப் போட்டும் சிலர் நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள்.
ஆனால், இப்படி பங்குதாரர்களாக இணைந்து செயல்படும் நிறுவனங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு பின் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. குடும்ப உறுப்பினர்கள் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங் களைத் தவிர மற்ற நிறுவனங்களில் இதுதான் இன்றைய நிலைமையாக இருக்கிறது.
Also read: பங்குதாரர் நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட் ஆக பதிவு செய்வது எப்படி?
பணத்தைத் கொடுத்து விட்டு வெளியே இருந்து லாபப் பங்கை மட்டும் எதிர் பார்த்து நிறுவனத்தின் அன்றாடப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாத பங்குதாரர்களால் பெரிய அளவில் சிக்கல்கள் வருவது இல்லை. உரிய முறையில் கணக்குகளை வைத்து, அவர்களுக்கான லாபப் பங்கீட்டை அந்த பங்குதாரர்களிடம் வழங்கி விட்டாலே அவர்கள் மனநிறைவு அடைந்து விடுவார்கள்.
குடும்ப உறுப்பினர்கள் என்று சொல்லும்போது, பெரும்பாலும் கணவர் – மனைவி; அப்பா – மகன் – மகள் ஆகியோர் இணைந்த பங்குதாரர் நிறுவனமாகவே இருக்கும். இங்கே குடும்பத் தலைவர் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்படும் வகையிலேயே இருக்கும். குடும்பத் தலைவரும் தன்னுடைய வாழ்விணையர், மகன், மகள் கருத்துகளுக்கு இடம் கொடுப்பவராகவே இருப்பார். ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் அன்பும், பாசமும் இங்கே பெரிய அளவில் சிக்கல் வராமல் பாதுகாக்கும். வருமானம் அனை வருக்கும் பங்கு பிரிக்கப்படும் என்பதால், வருமான வரி கட்ட வேண்டிய அளவு குறையும்.
கூடப் பிறந்த உடன்பிறப்புகளுக்கு இடையே கூட தொழில் உறவு தொடர்ந்து இருப்பதைப் பொதுவாக பார்க்க முடிவது இல்லை. மற்றபடி பங்குதாரர் நிறுவனங் களில் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் வரும் சிக்கல்கள் என்னென்ன? நிறுவனம் கொஞ்சம் வளர்ந்ததும் நிறுவனத்தில் முழு நேரமாகச் செயல்படும் சிலருக்கு அந்த தொழில் பற்றிய புரிதல் ஏற்பட்டு விடுகிறது.
இந்த தொழிலை நாம் தனியாகவே செய்யலாமே என்று நினைக்கத் தொடங்கு கிறார்கள். அதற்கேற்ப அவர்களின் மற்ற நண்பர்களோ, உறவினர்களோ தூண்டி விடத் தொடங்குவார்கள். எப்படி இந்த நிறுவனத்தில் இருந்து கழன்று கொள்வது என்று சிந்திக்கத் தொடங்குவார்கள். தொடங்கியவர் மீது குறை சொல்லத் தொடங்குவார்கள். இப்படி அவர் குறை சொல்வது தொடங்கியவர் காதுக்குப் பொகும்போது அவர் வருந்துவார். பங்குதாரரிடம் இது பற்றி பேசுவார். பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கும்போதே ஒரு கட்டத்தில், பங்குதாரர், தான் விலகிக் கொள்வதாகச் சொல்வார். கணக்கை முடிக்கும்படி கேட்டுக் கொள்வார். ஒரு ஆடிட்டரின் உதவியுடன் கணக்கு முடிக்கப் பட்டு அவருக்கு உரிய தொகையைப் பெற்றுக் கொண்டு, அதே தொழிலை பங்குதாரர் தொடங்கி விடுவார்.
இப்போது பங்குதாரரே போட்டியாளர் ஆகி விடுவார். தான் பங்குதாரர் ஆக இருந்த நிறுவனத்தில் இருந்து சில பணியாளர்களையும் அழைத்துக் கொண்டு வந்து விடுவார். முதலில் தொடங்கியவர் கடுமையான சிக்கல்களை சந்திக்க நேரிடும். பின்னர் அவருக்கு இருக்கும் அனுபவம், ஆற்றல் கொண்டு தாக்குப்பிடித்து நிறுவனத்தைக் காப்பாற்றுவார்.
இன்னும் சில இடங்களில் இரண்டு பங்குதாரர்களுக்கு இடையில் வேறு யாராவது உறவினர்களாகவோ, நண்பர் களாகவோ வருவார்கள். அவர்கள் இவர்களில் ஒருவரிடம், உன்னால்தான் நிறுவனம் இந்த அளவுக்கு வளர்கிறது. நீங்கள் ஏன் அவருக்கும் சேர்த்து உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் தனியே வந்து விடுங்கள். நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்று தூண்டி விட்டு, அந்த நிறுவனத்தைப் பிளப்பார்கள்.
ஒரு பங்குதாரர் நிறுவனம் என்பது பங்குதாரர்களின் எல்லா திறமைகளையும் பயன்படுத்தி வளர முடியக் கூடிய நிறுவனம். ஆனால் நிறுவன அன்றாட நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் பங்குதாரர் களின் தோலை நோக்கில் ஏற்படும் கோளாறுகளால் அந்த நிறுவனம் எந்த அளவுக்கு வளர வேண்டுமோ அந்த அளவுக்கு வளராமல் போய் விடுகிறது. தனியே போய் தொழில்களில் ஈடுபடுபவர் களாலும் அந்த அளவுக்கு வளர முடிவது இல்லை.
ஒரு நிர்வாகத்தில் முடிவு எடுப்பது என்பது நிர்வாகப் பங்குதாரர் வசமே இருக்கும்; இருக்க வேண்டும். அதுதான் அந்த நிறுவனத்தை கட்டுக் கோப்பாக நடத்திச் செல்ல உதவும். ஆனால், முடிவு எடுப்பதற்கு முன் மற்ற பங்குதாரர்களின் கருத்ததையும் கேட்க வேண்டியது மிகத்தேவை. கார்ப்பரேட் நிறுவனங்களில் இயக்குநர் கூட்டங்கள் நடத்துவது போல பங்குதாரர் நிறுவனங்களில் பங்குதாரர்கள் கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்தை அறிந்து பின்னர், நிர்வாக பங்குதாரர் முடிவு எடுக்க வேண்டும். பல பங்குதாரர் நிறுவனங்களில் இந்த முறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை.
மேலும் வெளிப்படையான கணக்குப் பதிவு முறை இருக்க வேண்டும். கணக்குப் பதிவு விவரங்கள் எப்போதும் பங்குதாரர் களுக்கு தெரியும் வகையில் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் இருந்தாலும் எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பிருந்து செல்பவர்களே அதிகம். அவ்வாறு பிரிந்து செல்பவர்கள் தங்கள் நிறுவனத்தை தனி உரிமையாளர் நிறுவனமாகவே நடத்து கிறார்கள். அவர்கள் யாரையும் பங்குதாரர் களாக சேர்த்துக் கொள்வது இல்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பிரெயின் ஸ்டார்மிங் என்ற வகையில் கூட்டங்களை நடத்துவார்கள். இந்த கூட்டங்களில் நிறுவன வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் தயக்கம் இல்லாமல் பேசுவார்கள். முதன்மை பொறுப்புகளில் உள்ளவர்கள் செய்த செயல்கள் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் வெளிப்படையாக பேசும் வாய்ப்பு அளிக்கப்படும். இந்த கூட்டங்கள் நிறுவன வளர்ச்சிக்கு பெரிய அளவில் பயன் படுகின்றன.
தமிழர்கள் நடுவே, தங்களைப் பற்றி யாராவது குறை சொன்னால், அவற்றில் உண்மை இருந்தால் அலசி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் பண்பு குறைவாகவே இருக்கிறது. இதுவும் பங்குதாரர் நிறுவனங்களுக்கு தடையாக அமைந்து விடுகிறது.
மிக அபூர்வமாக சில பங்குதாரர் களிடையே சிறப்பான புரிதல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. பணிகளை தங்களுக்குள் அழகாக பிரித்துக் கொண்டு செயல்படு கிறார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் பேசும் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை செலுத்து கிறார்கள். லாபப் பங்கீட்டிலும் மனக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
இன்னும் சில நிறுவனங்களில், மீன் தண்ணீருக்குள் இழுப்பதைப் போலவும்; தவளை தரைக்கு இழுப்பதைப் போலவும் பங்குதாரர்கள் செயல்பட்டு அதனால் நிறுவனத்தின் வளர்ச்சி பெரிய அளவில் தடைபட்டு விடுகிறது.
பங்குதாரர்களாக இருந்து, சரியான புரிதலுடன், சரியான கணக்கு பராமரிப்புடன், தங்களுக்கு உள்ள தனித் திறமைகளைப் பயன்படுத்தினால், நிச்சயமாக நல்ல வளர்ச்சி கிடைக்கும். ஆனால், நடைமுறையில் இந்த அணுகுமுறைகளைக் காண முடிவது இல்லை. தொடக்கத்தில் நல்ல ஆர்வத்துடன் இணைந்து தொடங்கு கிறார்கள். கொஞ்ச நாட்களில் திசைக்கு ஒருவராகப் பிரிந்து விடுகிறார்கள்.
நிச்சயமாக பங்குதாரர் நிறுவனமாகத்தான் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், பிரிவதற்கும் முதலிலேயே மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என்பதோடு, பிரிந்து போகும்போது என்னென்ன நடைமுறை களைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் பங்குதாரர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு விடலாம்.
Also read: பத்திரங்களை உங்களுக்கென உருவாக்குங்கள்!
வேறுவேறு திறமைகளைப் பயன்படுத்த வேண்டும்; ஆனால் மனத்தாங்கலோ, வேறு சிக்கல்களோ வரக்கூடாது என்று நினைப்பவர்கள், ஒரு பணிக்கு மட்டும், அதாவது ஒரு ப்ராஜெக்டுக்கு மட்டும் இணைந்து செயல்படலாம். அந்த ப்ராஜெக்ட் முடிந்த பிறகு லாபத்தைப் பிரித்துக் கொண்டு அத்துடன் முடித்துக் கொள்ளலாம். அதன் பிறகு அடுத்த ப்ராஜெட்டுக்கு சேர்ந்து கொள்ளலாம்.
எதற்காக ஒரு தொழில் முனைவர் பங்குதாரர்களை எதிர்பார்க்கிறார்?
ஒன்று – முதலீட்டுக்காக.
இப்போதெல்லாம் வங்கிக்கடன் ஓரளவுக்கு எளிதாக கிடைக்கிறது. எனவே முதலீட்டுக்கு என பங்குதாரர்களைச் சேர்க்க வேண்டிய தேவை இல்லை. கடன் மூலமாகவே முதலீட்டைப் பெறுவதே சிறந்த வழி. அல்லது தன்னிடம் உள்ள முதலீட்டுக்கு ஏற்ப தொழிலைத் தொடங்கி விட்டு, பிறகு வளர்த்துக் கொள்ளலாம்.
இரண்டாவது – திறமை சார்ந்தது.
ஒருவருக்கு உற்பத்தி செய்யும் திறமை இருக்கும்; இன்னொருவருக்கு சந்தைப் படுத்தும் திறமை இருக்கும். உற்பத்தி செய்யும் திறமை உள்ளவர், சந்தைப் படுத்தும் திறமை உள்ளவரை பங்குதாரராக சேர்த்துக் கொள்ள நினைக்கலாம். இதற்கு பதிலாக சந்தைப்படுத்தும் திறமை உள்ளவரை வேலைக்கு சேர்த்துக் கொள்ளலாம். பங்குதாரரிடம் வேலை வாங்குவதை விட வேலை பார்ப்பவரிடம் வேலை வாங்குவது எளிது..
மூன்றாவது – நீண்ட கால நண்பர் இவர்.
நண்பர்களிடம் நட்பு பாராட்டலாம். சேர்ந்து சுற்றலாம். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் விருந்துக்குப் போகலாம். அவர்களைப் பங்குதாரர்களாக்கித்தான் நம் அன்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற தேவை இல்லை. நண்பர்களை பங்குதாரர்களாக்கிக் கொண்டவர், பின்னர் நட்பையும் இழந்து போவதுதான் நடைமுறையில் காணக்கிடைக்கிறது.
எனவே பங்குதாரர்களாகி தொழில் செய்யலாம் என்று எண்ணுபவர்கள், ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். முடிந்த வரை பங்குதாரர் நிறுவனமாக கட்டமைப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
– நேர்மன்