தொழில் பக்கத்தில் பதிவிடும் செய்திகள், படங்கள், வீடியோக்கள் போன்றவை நம் பக்கத்தை பின்தொடர்பவர்களால் பார்க்க முடியும். ஆனால் ஒவ்வொரு முறையும் இவர்கள் மட்டுமே பொருட்களை வாங்கினால் அவை குறுகிய தொழில் வளர்ச்சியாக இருக்கும். நம்மை பின்தொடர்புவர்களை தாண்டி நம் பதிவுகள் சென்றால் மட்டுமே நம் தொழில் நன்கு வளர்ச்சி அடையும். எனவே, முகநூலில் நம் செய்திகள் மற்றவர்களை சென்றடைய பணம் செலவழித்து விளம்பரம் செய்ய வேண்டும்.
குறைந்தது 60 ரூபாய் முதல் விளம்பரம் செய்யலாம். முகநூலில் உருவாக்கிய விளம்பர பதிவின் கீழ் BOOST என்ற பட்டன் இருக்கும். அதை தேர்ந்தெடுத்து உள்ளே சென்றதும் முதலில் நீங்கள் என்ன காரணத்திற்காக அல்லது எந்த நோக்கத்திற்கு (Objective) இந்த பதிவை விளம்பரம் செய்கிறீர்கள் அதாவது, உங்கள் பதிவிற்கு Like, Comment, engagging அதிகம் வேண்டுமா அல்லது உங்கள் விளம்பர பதிவிற்கு leads வேண்டுமா என்று இரண்டு கேள்விகள் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்து எடுக்க வேண்டும்.
இதற்கு அடுத்து முதன்மையான பகுதியாக இந்த விளம்பரம் ஆண்கள்(Men) அல்லது பெண்கள்(Women) அல்லது இரண்டு நபர்களுக்கும்(All) காட்ட வேண்டுமா என்ற கேள்வி இருக்கும். உங்கள் பொருள் அழகு சாதனங்கள், கைவினை பொருள் போன்ற பெண்கள் சார்ந்ததாக இருந்தால் பெண்கள் என்பதையும், ஆண்கள் மட்டும் பயன் படுத்தகூடிய பொருளாக இருந்தால் ஆண்கள் என்பதையும் அல்லது இரண்டு நபர்களும் பயன்படுத்தகூடிய பொருட்களாக இருந்தால் ALL என்பதையும் தேர்ந்து எடுத்து அடுத்த பகுதிக்கு செல்லவும். இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்து எடுத்து விட்டால் நம் பொருள் பயன்படுத்தாத நபர்களுக்கு இந்த விளம்பரம் செல்லும். அதனால் நமக்கு எந்தவித பயனும் இல்லை. சிறிது கவனம் வைத்து சரியானதை தேர்ந்து எடுக்க வேண்டும்.
Also read: முகநூலில் யூடியூப் சேனல் இணைப்பது எப்படி? டிஜிட்டல் மார்க்கெட்டிங் -9
பிறகு நம் விளம்பரம் எந்த வயது நபர்களுக்கு காட்டவேண்டும் என்பதற்கான ஆப்ஷன் இருக்கும். கல்வி தொடர்பான விளம்பரம் என்றால் 20 வயது முதல் 55 வயதுவரை தேர்ந்து எடுக்கலாம். படிக்கும் மாணவர்கள் முதல் அவர்களின் பெற்றோர்கள் வரை விளம்பரம் சென்றால் மாணவர்கள் பார்த்தாலோ அல்லது பெற்றோர்கள் பார்த்தாலோ உங்களுக்கு பயன் உண்டு. ஆயுள் காப்பீடு விற்பது என்றால் 20 வயது மாணவர்களுக்கு அந்த விளம்பரம் சென்றால் வீணாக போகும். அப்போது குறைந்தது 25 வயதை தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். அதிகபட்சம் 60+ வரை இருக்கலாம்.
இப்படி ஒவ்வொரு பொருட்களையும் யாருக்கு தேவைப்படும் என்பதை வைத்து வயதை தேர்ந்து எடுக்கவேண்டும். வயது தேர்ந்து எடுத்த பிறகு விளம்பரம் எந்த பகுதியில் காட்ட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதாவது சென்னையில் மட்டும் வரவேண்டுமா அல்லது மதுரையில் வரவேண்டுமா அல்லது சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி என்று நிறைய மாவட்டத்திற்கு காண்பிக்க வேண்டும் என்பதை தேர்ந்து எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட ஊரில் உள்ள ஒரு பகுதியை கூட தேர்ந்தெடுத்து கொள்ளலாம். சான்றிற்கு, சென்னை என்பதற்கு பதில், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், பெசன்ட்நகர், குரோம்பேட்டை என்று உங்களுக்கு எந்த எந்த பகுதிகள் வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட பகுதிகளை தேர்ந்து எடுக்காவிட்டால் தமிழ்நாடு என்று முகநூலே குறித்துக் கொள்ளும். அப்படி தமிழ்நாடு முழுவதும் விளம்பரம் சென்றால் பெரும்பாலும் பயனற்றதாகி விடும். உங்கள் கவனம் நிச்சயம் இடங்களை தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டும்.
இடம் தேர்ந்தெடுத்த பிறகு, இந்த விளம்பரத்திற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும் (Budjet) என்ற ஆப்ஷன் வரும். ஒரு நாள் மட்டும் விளம்பரம் செய்யலாம் அல்லது பத்து நாள் என்று உங்களுக்கு எத்தனை நாள் வேண்டுமோ அதனை குறிக்கலாம். பணம் என்று பார்த்தால் குறைந்தது 60 ரூபாய் முதல் பல ஆயிரம் கூட ஒரு நாளைக்கு செலவு செய்ய முடியும். ஆனால், பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
சான்றாக, 60 ரூபாய் செலவு செய்து ஒருநாள் விளம்பரம் செய்தால் நம் விளம்பரம் குறைந்தது 500 நபர்கள் முதல் 1000 நபர்கள் வரை சென்று சேரும். இதே ஒரு நாளைக்கு 500 ரூபாய் செலவு செய்தால் குறைந்தது 3000 நபர்கள் முதல் 6000 நபர்கள் வரை செல்லும். அதனால் உங்கள் விளம்பரம் எத்தனை நபர்களுக்கு செல்லவேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்றாற்போல் பணத்தை செலவு செய்யுங்கள்.
Also read: கூகுள் மை பிசினசில் பதிவு செய்யுங்கள் | டிஜிட்டல் மார்க்கெட்டிங் -4
முதல் முறையாக முகநூலில் பணம் கொடுத்து விளம்பரம் செய்யும்போது அதிகம் செலவழிக்காதீர்கள் 100 ரூபாய் போதும். சிறிய தொகையில் விளம்பரம் செய்து அதன் பலன் எப்படி உள்ளது என்று பார்த்தப் பிறகு தொகையை உயர்த்துங்கள். சில நேரம் விளம்பரத்தை உங்கள் விருப்பப்படி காண்பித்து உள்ளோம் என்று முகநூல் தவறான செய்தியைகூட தரும். உங்கள் விளம்பரம் சரியாக சென்று உள்ளதா என்று தெரிய வேண்டும் என்றால், விளம்பரம் மூலம் உங்களுக்கு வாடிக்கை யாளர்களிடம் இருந்து பொருட்களை கேட்டு ஃபோன் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால், விளம்பரம் சரியாக செல்லவில்லை என்று பொருள். ஆனால், அந்த விளம்பரத்திற்கு நிறைய likes, comments எல்லாம் வந்திருக்கும், ஃபோன் மட்டும் வந்திருக்காது. இதே போல் சில நேரம் விளம்பரம் தவறாக கூட போகும். மீண்டும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சிறிய தொகையில் விளம்பரம் செய்வதே நல்லது.
ஒரு முறை பணம் செலவு செய்து விளம்பரம் செய்துவிட்டால் உங்களை முகநூல் மீண்டும் மீண்டும் பணம் செலவு செய்வதற்கு பலவித கழிவுகள் (Discounts) கொடுக்கும். ஆனால் உங்களுக்கு தேவை என்றால் மட்டுமே செய்யுங்கள். தொகை கழிவாக கிடைக்கிறதே என்று விளம்பரம் செய்யாதீர்கள்.
இன்றைய காலக் கட்டத்தில் முகநூல் விளம்பரம் மிக முதன்மையானதாக மாறி உள்ளது. அதனால் மிக கவனத்துடன் விளம்பரம் செய்து உங்கள் தொழிலை வளர்ச்சி அடைய செய்யுங்கள்.
– செழியன்.ஜா