இந்தியாவில் எந்தவொரு நிறுவனமும் ஏற்றுமதி அல்லது இறக்குமதி வணிகத்தைத் தொடங்குவதற்கு முன், IEC எனும் குறியீட்டை பெறுவதற்காக பதிவு செய்ய வேண்டும். ஏனெனில், பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்ய இது அவசியமாகும். பத்து இலக்கங்களை கொண்ட IEC குறியீட்டு எண்ணை வணிக அமைச்சகத்தின் வெளிநாட்டு வணிகப் பொது இயக்குநரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப் படுகின்றது. இதன் பயன்கள்,
இந்தியாவில் எந்தவொரு நிறுவனமும் ஒரு ஏற்றுமதியாளராக அல்லது இறக்குமதியாளராக ஆவதற்கான முதன்மை சான்றாக இது விளங்குகின்றது.
சுங்கத்துறை, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் (DGFT), ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு போன்றவற்றில் இருந்து பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வது தொடர்பாக பல்வேறு சலுகைகளைப் பெற இந்த சான்று உதவுகின்றது.
இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் அல்லது இந்தியாவிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இது முதன்மை உரிமமாக பயன்படுகின்றது.
Also read: ஏற்றுமதி தொழில் முனைவோர்களின் வர்த்தக நிலை
இந்த IEC பதிவு எண் வழியாக பொருட்களை கொண்டு செல்வதற்கான அனுமதியை சுங்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து பெறுவதை எளிதாக்குகின்றது.
இந்த IEC பதிவு எண் ஆனது சட்டவிரோதமான பொருட்களின் ஏற்றுமதியை அறவே தடுக்கின்றது. தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வதற்கும் இந்த IEC பதிவு எண் தேவையில்லை.
பதிவு செய்து IEC பதிவு எண் பெற்ற பிறகு ஒவ்வொரு வருடமும் வருடாந்திர புதுப்பித்தல் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பதிவு பெற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர அல்லது அரையாண்டு அல்லது காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இல்லை. வருமானவரி பதிவு எண் அடிப்படையில் இந்த IEC பதிவு சான்றிதழ் நேரடியாக இணையத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
பின்வருவனவற்றை பின்பற்றினால் இணையத்தில் தானாகவே உருவாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கிடைக்கின்றது.
முதலில், வெளிநாட்டு வணிகப் பொது இயக்குநரகத்தின் (DGFT) dgft.govt.in எனும் இணைய பக்கத்திற்கு செல்லவும். பின், அந்த திரையில் Services= IEC= OnlineIECApplication= என்ற கட்டளைகளை செயல் படுத்தவும்.
பின்னர் தோன்றும் திரையில் வருமான வரி பதிவு எண்ணில் உள்ளவாறு பெயர், பிறந்ததேதி அல்லது நிறுவனத்தின் பெயர் பதிவுசெய்த தேதி, வருமானவரி பதிவுஎண்(PAN) ஆகிய விவரங்களை உள்ளீடு செய்யவும்.
பின்னர் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவைகளை உள்ளீடு செய்து கொண்டு Submit= Create Login ID= என்றவாறு கட்டளைகளை இடவும்.
மேலே கூறியவாறு பதிவுசெய்த கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு வருகின்ற OTP எனும் பாஸ்வேர்ட் வரும். அதை உள்ளீடு செய்து Login செய்யவும். தொடர்ந்து தோன்றும் IEC Master Form எனும் விண்டோவில் விண்ணப்பதாரரின் பெயர், இருப்பிடமுகவரி, வங்கியின் பெயரும் கணக்கு எண்ணும், நிறுவனத்திற்கு கிளைஅலுவலகங்கள் ஏதேனும் இருந்தால் அவைகளுடைய விவரங்கள், நிறுவனத்தின் தலைவர் அல்லது செயல்படும் முதன்மை கூட்டாளியின் பெயர், தனிநபர் எனில் பொறுப்பாளரின் பெயர் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டும்.
Also read: இணையம் வழியாக ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி
மேலும், புதியதாக பதிவு செய்பவர்கள் வங்கி எண் அல்லது காசோலை, இருப்பிட முகவரி சான்றாக வாடகை ஒப்பந்தம் அல்லது விற்பனை பத்திரம், குத்தகை பத்திரம், மின்சார கட்டணபட்டியல் அல்லது தொலைபேசி கட்டண பட்டியல், கைபேசி கட்டண பட்டியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் நிறுவனம் பதிவு பெற்ற சான்று அல்லது கூட்டாண்மை பத்திரம் ஆகியவற்றின் நகல்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும்.
ஏற்கனவே IEC பதிவு எண் பெற்றவர்கள் எனில் IEC பதிவு விவரங்களில் ஏதேனும் மாறுதல் இருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். விவரங்கள் அனைத்தையும் சரியாக உள்ளீடு செய்து தேவையான நகல்களையும் பதிவேற்றம் செய்து சமர்ப்பித்த பின்னர் இணையத்தின் மூலம் பதிவு கட்டணம் ரூ.500/- அல்லது புதுப்பித்தல் கட்டணம் 200/-செலுத்த வேண்டும். இறுதியாக Submit எனும் பட்டனைத் தேர்வு செய்து கிளிக் செய்யவும். விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் IEC பதிவு சான்றிதழ் தானாகவே உருவாகி விடும். அதனை பதிவிறக்கம் செய்து அச்சிடலாம்.
– முனைவர். ச. குப்பன்