ஏற்றுமதி தொழிலைப் பொறுத்தவரை, ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி , நாட்டின் அந்நிய செலவாணியையும் உயர்த்துகிறது. உலகின் மிகஅதிக மக்கள் தொகையை கொண்ட நாடுகளான இந்தியாவும், சீனாவும் பல்வேறு பொருட்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. பல்வேறு உற்பத்தி மூலப்பொருட்களுக்காக இந்தியா சீனாவை சார்ந்தே இருக்கின்றது. இந்த இரு நாடுகளின் ஏற்றுமதியாளர்களின் பலத்தையும், பலவீனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
சீன வர்த்தகத்தின் பலம் :
சீன பொருட்களின் பெரும் பலமே மிக குறைந்த விலையில் பொருட்களை சந்தைப்படுத்தும் முறைதான். குறைவான செலவில் அதிக பொருட்களை உற்பத்தி செய்து, குறைவான விலையில் விற்பது அவர்களின் பலம்.
வலைத்தளம் மற்றும் மின்னஞ்சலை இந்திய தொழில் முனைவோரை விட சீன தொழில்முனைவோர்கள் எளிமையாகக் கையாளுகின்றனர். பெரும்பாலும், வாடிக்கையாளர் அனுப்பும் மின்னஞ்சலுக்கு சில மணி நேரங்களிலோ அல்லது ஒருநாளைக்குள்ளோ பதில் மின்னஞ்சல் அனுப்புவதில் சீனர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.
பொருளின் விலையோடு வான்வெளி, கப்பல் போக்குவரத்து செலவையும் அவர்கள் பெரும்பாலும் தயாராய் வைத்திருந்து வாடிக்கையாளரின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றனர்.
உலகின் எந்த வொரு பொருளையும் குறைவான விலையில் உற்பத்திசெய்து கொடுக்க அவர்களால் முடிகிறது.
பெரிய நிறுவனங் கள் மட்டும் அல்லாது சிறிய நிறுவனங்கள் மூலமாகவும் வர்த்தகத்தில் சீன தொழில்முனைவோர் ஈடுபடுகின்றனர்.
பலவீனம் :
சீன பொருட் கள் தரத்தில் குறைந்தவை என்ற பார்வை சர்வதேச வர்த்தக சந்தையில் பொதுவாக காணப்படுகின்றது.
பெரிய முதலீடு செய்து எந்திரங்களையோ, பொருட்களையோ வாங்கும்போது நீண்ட நாட்களுக்கு பயன் தரவேண்டும் என்கிற பயனாளரின் பார்வையில் பெரும்பாலும் சீன தயாரிப்பு தவிர்க்கப்படுகிறது.
Also read : இணையம் வழி வணிகம் உங்களுக்கும் தேவை!
இந்திய வர்த்தகத்தின் பலம் மற்றும் பலவீனம் :
உலகளவில் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட நாடு என்ற மதிப்பீட்டில் சர்வதேச சந்தையானது இந்தியாவை பார்க்கிறது.
பல்வேறு தொழில்நுட்பக்கருவிகளை இந்திய தொழில் முனைவோர் ஏற்றுமதி செய்கின்றனர்.
இந்திய உணவு பொருட்களையும் மற்றும் பிற விவசாய பொருட்களையும் பல்வேறு நாடுகள் விரும்பி வாங்குகின்றனர். மேலும், இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்வதாலும் இந்திய பொருட்களின் தேவை எப்போதும் இருக்கின்றது.
தகவல் தொழில் நுட்ப சேவைகளை பொருத்தவரை இந்திய தொழில் முனைவோர் மிகச்சிறப்பாக செயல் படுகின்றனர். பொறியியல் தொழில் நுட்ப பொருட்களை பொறுத்த வரை பல்வேறு நாடுகளுக்கு எந்திரங்கள், எந்திர உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. ஆயத்த ஆடை ஏற்றுமதியிலும் பல்வேறு நாடு களுக்கு இந்திய பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன.
பலவீனம் :
சிறிய நிறுவனங்கள் பலவும் தங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சலை திறம்பட கையாள்வது இல்லை. எனவே, வலைத்தளம் மூலமாக பொருட்களை தேடும் இறக்குமதியாளர்கள் அனுப்பும் மின்னஞ்சலுக்கு பதில் வராததால், பெரும் வணிக வாய்ப்பை இழக்க நேரிடுகிறது.
சிறிய நிறுவங்களின் பொறியியல் உற்பத்தி பொருட்களின் ஃபினிஷிங், ஏற்றுமதி தரத்திற்கு இல்லாமல் இருப்பதாலும் பல நேரங்களில் பன்னாட்டு இறக்குமதியாளரின் நன்மதிப்பை இழக்க நேரிடுகிறது.
Also read: மனைவிக்காக ஒரு ஈவன்ட் தொழில்
சிறிய நிறுவனங்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களை ஏற்றுமதி தரத்திற்கு பேக்கிங் செய்ய தவறுவதால், ஏற்றுமதி போக்குவரத்து மற்றும் கையாடலில் பேக்கிங்கில் பாதிப்பு அல்லது பொருளில் சேதாரமோ ஏற்படுகிறது . இதனால், இறக்குமதியாளரின் நம்பிக்கையை இழக்க நேரிடுகிறது. கொட்டிக்கிடக்கும் சர்வதேச சந்தை வாய்ப்பை, சிறிய தவறுகளை சரி செய்வதன் மூலமாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கைப்பற்ற முடியும்.
– அமிர்தராஜ் அலெக்சாண்டர்