ஒரு காலத்தில் டீக்கடை, துணிக்கடை, கறிக்கடை, காய்கறிக்கடை என பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த இங்கிலாந்து நாட்டின் பர்சலாம் நகரின் வணிக வீதிகள் இன்று அந்த பரபரப்பு குறைந்து காணப்படுகின்றன. விக்டோரியா காலத்து வணிகக் கட்டிடங்களை நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வாடகைக்கு எடுத்த காலம் எல்லாம் இப்போது மலை ஏறிப்போய், அந்த கட்டிடங்கள் பல, ”வாடகைக்கு விடப்படும்” போர்டுடன் காட்சி அளிக்கின்றன.
ட்ராவல் ஏஜென்சி கடைகளும், வீடியோ கேம்ஸ் நிலையங்களும் தேடுவாரற்றுக் கிடப்பதைப் பார்க்க முடிகிறது.
இப்படி நகரத்து வீதிகள் எல்லாம் காற்று வாங்கிக் கிடப்பதற்குக் காரணம், ஒரு இரண்டு மைல் தூரத்தில் புதிதாக முளைத்த வோல்ஸ்டான்டன் ரீட்டெயில் பார்க் (Wolstanton Retail Park) என்ற இடத்திற்கு மக்கள் படை எடுக்கத் தொடங்கியதுதான்! அங்குதான் வால்மார்ட் நிறுவனத்தின் அஸ்டா (Asta) போன்ற பெரிய கடைகள் எல்லாம் இயங்குகின்றன. இதனுடன் சேர்த்து இன்னொரு காரணமும் மக்களை திசை திருப்பியது.
அதுதான், அங்கிருந்து 25 மைல் தொலைவில் தொடங்கப்பட்ட அமேசான்.காம் (Amazon.com) நிறுவனம் ஆகும். கிட்டத் தட்ட பத்து கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவைக் கொண்ட அந்த நிறுவனம்தான், தனது ஆன்லைன் விற்பனை மையம் மூலம் நாட்டின் 18 சதவிகித சில்லறை விற்பனையை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இந்த விற்பனை அமெரிக்காவை விட இரண்டு மடங்கு அதிகம். உலகின் வேறெந்த நாட்டை விடவும் இது மிக அதிகமான விற்பனை விகிதம் என்றே சொல்லலாம்.
”ஆன்லைனில் விலை குறைவாகக் கிடைக்கும் போது, நாம் ஏன் கடைக்குப் போய் வாங்க வேண்டும்?” என்கிறார், பார்சலாம் நகரைச் சேர்ந்த 65 வயது பால் டைக்ஸ். போக்குவரத்துச் செலவும் மிச்சம் தானே என்பது அவரது கருத்து.
பிரிட்டனில் உள்ள தரமான நெட்வெர்க் சேவை மற்றும் அதி வேகமான இணைய இணைப்புகள் பெரும்பாலும் 93 சதவிகித வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இலட்சக் கணக்கான மக்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சென்ற ஆண்டு இங்கிலாந்தில் அமேசானின் விற்பனை 19 சதவிகிதமாக உயர்ந்து 11.4 பில்லியன் டாலர் லாபத்தை ஈட்டித் தந்தது.
வெப் கிராசர் நிறுவனம், ஆகேடோ குரூப் 12 சதவிகித விற்பனையை அதிகரித்து, 1.3 பில்லியன் டாலர் வருமானத்தை அள்ளியது. அதே போல் ஃபேஷன் ரீட்டெய்லர் அசோஸ் (Fashion Retailer Asos) நிறுவனம், தனது விற்பனையின் மூலம், 16 சதவிகிதம் வருவாயை உயர்த்தி உள்ளது. மார்க்ஸ் & ஸ்பென்சர் குரூப் டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ்களின் சந்தை மதிப்பை இது மிஞ்சி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் பொருட்களை வாங்குவதில் இங்கிலாந்து மக்கள் மிகவும் முன்னோக்கி இருக்கிறார்கள். விரைவில் எல்லா மக்களிடமும் இதை எதிர்பார்க்கலாம் என்கிறார், ரிச்சர்ட் ஹைமென், சில்லறை வர்த்தக நிறுவனமான ராஹ் அட்வைசரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.
1995களிலேயே இந்த மாபெரும் வர்த்தக புரட்சியில் தடம் பதித்து, அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறது, இங்கிலாந்தின் டெஸ்கோ (Tesco) நிறுவனம்.
முதன் முதலில் மேற்கு லண்டன் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், தங்களிடம் உள்ள பொருட்களை பட்டியல் போட்டு ஃப்ளாப்பி டிஸ்க்குகளாக அனுப்பி வைத்து ஆர்டர் எடுக்கத் தொடங்கினார்கள். அதுவே சில ஆண்டுகளில் இணைய வழி வர்த்தகத்திற்கு மாறும் விற்பனை முறையை எளிதாக்கியது. நாட்டின் 90 சதவிகித வீடுகளுக்கு இந்த நிறுவனம் இன்று சேவை செய்து கொண்டு இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனம் என்ற பெயர் எடுத்து இருக்கிறது.
மளிகை பொருட்களை ஆன்லைனில் தேர்வு செய்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள். அனால் அந்த தடையையும் மீறி டெஸ்கோவில் பொருட்கள் வாங்கும் மக்கள் ஏராளம் என்கிறார், டிசிசி க்ளோபல் நிறுவனத்தின் ஆய்வாளர், பிரையன் ராபர்ட்ஸ் (Brain Roberts).
இணைய வழி வணிகத்திற்கு மக்கள் மாறிப் போனதால், பிரிட்டனின் பெரு வீதிகளும், வியாபார மையங்களும் அடி வாங்கி உள்ளன. சில்லறை வணிகம் ஒரு தலைமுறை மாற்றத்தை சந்தித்து உள்ளது. இதனுடைய தாக்கமும், விளைவும் முன்பு இருந்த எந்த மாற்றத்தை விடவும் மிகப் பெரிது என்கிறார்கள், சூப்பர் மார்கெட் உரிமையாளர்கள்.
– முனைவர். பார்வதி அழகர்சாமி