Latest Posts

ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்தால் போதுமா

- Advertisement -

ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் மட்டும் செய்தால் போதாது! சிட்டா, அ – பதிவேடு, புலப்படத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இப்பொழுது பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் ஆகி விட்டது. இதற்கு முன்னர், பட்டா கேட்டு விண்ணப்பம் செய்யத் தேவையான ஆவணங்களை நகல் எடுத்து, அன்றைய தேதி வரைக்குமான வில்லங்க சான்றிதழ் (இசி) எடுத்து பட்டா வேண்டும் விண்ணப்பத்தை இணைத்து அனைத்தையும் ஒரு நூலால் கட்டி கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) அலுவலகத்தில் கொடுக்கும்படி இருந்தது.

விண்ணப்பம் செய்வதற்கு என்று எந்த விதமான கட்டணமும் இல்லை. ஆனால் இப்போதைய ஆன்லைன் முறையில் பட்டா விண்ணப்பத்தின் போது விண்ணப்பக் கட்டணம் ரூ.50 வாங்குகிறார்கள். (சில இடங்களில் அதிகமாகவே வாங்குகிறார்கள்). இதன் மூலமே வருவாய்த்துறை இப்பொழுது பல இலட்ச ரூபாய்களை சம்பாதிக்கத் தொடங்கி விட்டது.

ஆன்லைன் பட்டாவுக்கு விண்ணப்பம் செய்ய கூட்டுறவு சொசைட்டி, வட்ட (தாலுகா) அலுவலகங்களில் உள்ள இணைய சேவை மையங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நிற்க வேண்டிய நிலைமைதான் நிலவுகிறது. மின்சாரம் இல்லை, செர்வர் வேலை செய்யவில்லை, கம்யூட்டர் சரி இல்லை என்று கிராம மக்கள், இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து, தங்கள் வேலைகளை விட்டுதான் விண்ணப்பம் செய்ய வேண்டி இருக்கிறது. நகரங்களிலும் இதே நிலைமை தான்.

ஆன்லைனில் விண்ணப்பங்கள் எதுவும் நிலுவையில் இருக்கக் கூடாது என்று விஏஓ, சர்வேயருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே ஆன்லைனில் பட்டாவுக்கு விண்ணப்பம் செய்து விட்டு பின்தொடரல் இல்லை என்றாலோ அல்லது தாமதமாக சென்று பார்த்தாலோ, விண்ணப்பங்களை ஆன் லைனிலேயே தள்ளுபடி செய்து விடுவார்கள். விண்ணப்பம் தள்ளுபடிக்கு ஆவணங்கள் லிங்க் இல்லை, அல்லது வேறு ஏதாவது காரணங்களை சொல்லி இருப்பார்கள். பிறகு என்ன, மீண்டும் ஆன்லைன் வரிசையில் நின்று பணம் கட்டி மீண்டும் விண்ணப்பம் செய்தல் வேண்டும்.

ஆன்லைனில் பேருந்து டிக்கெட் பதிவு செய்வது போல ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல, விண்ணப்பம் வழங்கிய உடனேயே பட்டா வராது. பட்டா வேண்டி விண்ணப்பம் செய்வது மட்டும்தான் ஆன்லைனில். மீதி வேலை எல்லாம் வழக்கம் போலத்தான். வட்ட (தாலுகா) அலுவலகத்தில் தொடர் களப்பணி செய்வதன் மூலம்தான் பட்டா பெற முடியும்.

அதாவது ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்த ரசீதை எடுத்துக் கொண்டு, பட்டா வாங்கப் போகும் நிலத்தின் முழு ஆவணங்களின் நகல்களையும் எடுத்துக் கொண்டு பழைய முறைப்படி கிராம நிர்வாக அலுவலரையோ, சர்வேயரையோ நேரடியாக சந்தித்து பின் தொடரல் வேண்டும். விஏஓவிடம் இருந்து சர்வேயருக்கு, சர்வேயரிடம் இருந்து தலைமை சர்வேயருக்கு, தலைமை சர்வேயரிடம் (LRD – Land Record Draft) இருந்து தாசில்தாருக்கு என்று அனைத்து டேபிள்களுக்கும் பேப்பரை நாம்தான் நகர்த்த வேண்டும்.

பொதுவாக பட்டா விண்ணப்பம் செய்யும் போது முழுபுலம் கொண்ட இனங்கள், உட்பிரிவு கொண்ட இனங்கள் என இரண்டு வகையாக பிரிப்பர். முழுபுலம் கொண்ட இனங்களின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் விஏஓ-விடம் செல்லும்படி லாகின் வைக்கப்பட்டு இருக்கிறது. உட்பிரிவு இனங்கள் சர்வேயர் ஆன்லைனில் லாகின் வைக்கப்பட்டு இருக்கிறது, அதன்படி விண்ணப்பங்கள் முறையே விஏஓ-விற்கும், சர்வேயருக்கும் சென்று விடுகின்றன.

முழுபுலம் பட்டா பெயர் மாற்ற விண்ணப்பங்கள் விஏஓ-விடம் வந்து விடுகின்றன. அவர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்து விடுகின்றனர். அதில் எந்த விதமான சிக்கலும் இல்லை.

உட்பிரிவு இனங்களுக்கான விண்ணப் பங்கள்தான் சர்வேயரிடம் வருகிறது. அதன்பிறகு LRD (Land Record Draft) தலைமை சர்வேயர் மூலம் இறுதியாக தாசில்தாரரிடம் கையெழுத்தாகிறது, அவர்களின் நடைமுறையில் நகரும் பேப்பருக்கு 8A ஆவணம் என்று சொல்வார்கள்.

அது என்ன 8A? 8A என்றால் அது ஒரு சர்வே சட்டம். சுருக்கமாகக் கூற வேண்டுமானால், பட்டா கோழிக் குஞ்சு வெளியேறுவதற்கு முன் இருக்கும் முட்டை பருவம்தான் 8A. 8A வில் தாசில்தார் கையெழுத்து போட்டவுடன் பட்டா ஆன்லைனில் ஏற்றப்படுகிறது.

அதோடு ஆன்லைனில் பட்டா ஏறிய மகிழ்ச்சியில் நீங்கள் வந்து விடுவீர்கள. ஆனால் FMB (Feild Measurement Book) யிலும் அ – பதிவேட்டிலும், உட்பிரிவு விவரங்கள் ஏறிவிட்டனவா என்றும் பார்க்க வேண்டும்.

பழைய முறை பட்டா மாற்றத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முக்கிய பங்கு வகித்தது. இப்போது முழுபுலம் பட்டா பெயர் மாற்றம் விஏஓ-வுக்கும், உட்பிரிவுகள் சர்வேயருக்கும் போவதால் (பெரும்பாலும் 90% உட்பிரிவு இனங்கள்தான்) கிராம மக்கள் தாலுகா அலுவலகம் நோக்கி படையெடுத்து சர்வேயரை சந்திக்கின்றனர். சர்வேயர் நேரடியாக களத்திற்கு வருகிறார். இடத்தை பார்த்து விட்டு பட்டாவுக்கு வழிவகை செய்கிறார்.

மேற்படி சர்வேயர்கள் இப்பொழு தெல்லாம் கிராம நிர்வாக அலுவலகம் பக்கமே போவதில்லை(ஏன் என்று எனக்கு தெரியவில்லை). அதனால் கிராம கணக்குகளில் அ – பதிவேடு, புலபட புத்தகங்களில் பதிவு செய்வது இல்லை. சான்றாக சர்வே நம்பர் 2A என்று இருந்தால், அது உட்பிரிவு செய்யப்படும் போது 2A1, 2A2 என இரண்டாக உடையும். இதனை சர்வேயர்தான் கிராம கணக்குகளில் திருத்த வேண்டும். விஏஓ-வுக்கு அந்த உரிமை இல்லை.

எனவே சர்வேயர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரடியாக வந்து A – பதிவேடு, FBA களில், சிட்டா கணக்குகளில் உட்பிரிவை குறிக்கச் சொல்லி நாம் கேட்க வேண்டும். சில ஊர்களில் அ – பதிவேடு ஆன்லைன் ஆகி இருக்கும். சில ஊர்களில் திவிஙி யும் ஆன்லைன் ஆகி இருக்கும். அதில் எல்லாம் நம்முடைய பட்டா உட்பிரிவு பதிவாகி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆகவில்லை என்றால் சர்வேயரை பின்தொடரல் செய்து அதனை சரி செய்து கொள்ள வேண்டும்.

அப்படி நாம் செய்யவில்லை என்றால், பட்டா ஆன்லைனில் ஏறினாலும், விஏஓ-வுக்கு பட்டா மாறிய செய்தி தெரியாமல் போய் விடுகிறது. கிராம கணக்கில் பட்டா மாற்றம் நடக்கவில்லை என்று ஆவணங்கள் சொல்லும்.

ஆன்லைன் பட்டா வாங்கி விட்டு விவசாய நிலத்தில் கிணறு போட வேண்டும் என்றால், திவிஙி யில் கிணறு எங்கே வருகிறது என முதலில் குறிக்க வேண்டும். அதற்காக விஏஓ-வைப் பார்த்தால் அவர் கணக்கில் புலப்புத்தகத்தில் உட்பிரிவு செய்யாம லேயே இருக்கும். உட்பிரிவு செய்தால் தான் கிணற்றுக்கான பாயின்டை குறிக்க முடியும்.

பயிர் கடன் வாங்க, வீடு கட்ட, வங்கிக் கடன் வாங்க, பயிர் இன்சூரன்சுக்காக, வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் மற்றும் நில எடுப்புக்கு பணம் வாங்க, விஏஓ கையெழுத்துடன் அ – பதிவேடு, சிட்டா தேவைப்படும்.

அப்பொழுது அதனைக் கேட்டு சென்றால், உங்கள் பெயரும் உட்பிரிவும், கிராம கணக்கில் ஏறி இருக்காது. அந்த நேரத்தில் அல்லல் பட்டு நிற்பீர்கள்

எனவே பட்டா வாங்க முடிவு செய்தால், ஆன்லைன் பட்டா மட்டும் போதாது, அதனுடன் Feild Measurement Book, அ – பதிவேடு, சிட்டாவில் எல்லாம் பெயர் மற்றும் உட்பிரிவு ஏற்றப்பட வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு வேலையோடு வேலையாக சர்வேயரைப் பின்தொடரல் செய்து அப்டேட் செய்யச் சொல்ல வேண்டும்.

கிராம கணக்கு மேனுவலாக இருக்கும் பட்சத்தில் சர்வேயரை, விஏஓ அலுவலகம் செல்ல வைத்து கிராம கணக்கில் அப்டேட் செய்ய நாம்தான் ஒருங்கிணைக்க வேண்டும்.

– சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
(81108 72672)

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news