அள்ளித் தருகிறது, அழகு தமிழ் பேச்சு!

0

தமிழ்நாட்டில் உள்ள பெரிய மீனவ கிராமங்களில் நொச்சிக்குப்பமும் ஒன்று. இது சென்னை மெரினா கடற்கரையை யொட்டி அமைந்துள்ளது. மீன்பிடித் தொழிலில் இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஈடுபடுகின்றன. துறைமுகப் பணி உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த வேலைகளில் படித்த இளைஞர்கள், கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிற்றுண்டி கடை நடத்து வோர், விளையாட்டுப் பொருட்களை விற்கும் சிறு வியாபாரிகள், கூலித் தொழி லாளர்கள், இப்படி… இப்பகுதி மக்களை பிரிக்கும்போது, திரு. தெ. மோகனவேலன் என்ற மீனவ இளைஞர் மட்டும் நம் கண்களுக்கு தனித்துத் தெரிகிறார்.

unnamed (2)

‘தாய்மொழியாம் தமிழ் மொழியை பிழையின்றி உச்சரித்து அழகாகப் பேசும் பாங்கு’ இவரை ஒரு நட்சத்திரமாக ஆக்கி உள்ளது. விளையாட்டுப் போட்டிகளை குறிப்பாக கபடிப் போட்டி நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கும் வர்ணனையாளராக, தமிழகம் முழுவதும் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

“கிட்டத்தட்ட, தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் சென்று வந்து விட்டேன். எனக்கு கிடைத்த வரவேற்புகள், பாராட்டுகளை தமிழன்னையின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்” என்று கூறும் திரு.தெ.மோகன வேலன், தொழில்ரீதியாக தான் பெற்ற வெற்றிகரமான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய பேட்டியில் இருந்து…

“மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ முடித்து விட்டு, சென்னை பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில், இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்தேன். இதன் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், நூலகங்களில் சென்று பயிலவும் நேரம் கிடைத்தது. தலை சிறந்த பேச்சாளர்கள் பேசும்போது அவர்கள் பின்பற்றும் ‘நடை’யைக் கூர்ந்து கவனிப்பேன்.
‘பிழையின்றி தமிழ் பேச வேண்டும்’ என்பதை என் நோக்கங்களில் ஒன்றாக வைத்து இருந்தேன். தமிழ் அறிஞர்களின் கூட்டங்களுக்குச் சென்று உச்சரிப்புத் திறனை வளர்த்துக் கொண்டேன்.

‘தாய்மொழியாம் தமிழ் மொழியை பிழையின்றி உச்சரித்து அழகாகப் பேசும் பாங்கு’ இவரை ஒரு நட்சத்திரமாக ஆக்கி உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் பகுதியில் தொழிலதிபர் திரு. எம்.ஜி.முத்து அவர்களின் பிறந்த தின விழாவை கொண்டாடினர். அதையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்படி நண்பர்கள் அழைத்து, மேடையில் ஏற்றிவிட்டனர். நான் எதிர் பார்க்கவே இல்லை. கையில் ‘மைக்’, எதிரில் பெருங்கூட்டம். இப்படித்தான் என் வர்ணனை தொடங்கியது. முன்னெச்சரிகையாக எவ்விதத் தயாரிப்பும் இல்லாத நிலையில் இயல்பாக பேசினேன். முடிந்தவரை பிறமொழி கலப்புவராமல் பார்த்துக் கொண்டேன்.

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல கபடி வீரர் ‘கோல்டு ராஜேந்திரன்’, நிகழ்ச்சி முடிந்ததும் என்னைப் பாராட்டினார்.. தொடர்ந்து அவருடைய பரிந்துரையின்பேரில், கபடிப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளராகப் பணியாற்ற வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் மீனவ பகுதியில் இளைஞர்கள் அனைவரும் மாலையில் கபடி விளையாடுவர். இதற்காகவே கபடி மைதானம் ஒன்றை உருவாக்கிப் பராமரித்து வந்தோம். பள்ளிப் பருவத்தில் இருந்தே, நானும் கபடி விளையாடியதால் அதன் நுணுக்கங்களை அறிவேன்.. மாநில-மாவட்ட அளவிலான கபடிப் போட்டிகள் எங்கு நடந்தாலும் சென்று பார்த்துவிடுவேன். இந்த அனுபவம், போட்டிகளை தொகுத்து வழங்கிய சமயத்தில் மிகவும் உதவியாக இருந்தது.

போட்டியைப் பார்க்க வரும் பார்வையாளர்கள், விளையாட்டு விறுவிறுப்பாக இருந்தால்தான் இருக்கையில் அமர்ந்திருப்பார்கள். அவர்களை அங்கேயே ஆர்வத்துடன் அமர வைப்பதில் வர்ணனையாளர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

சொல்பிரயோகம் மட்டுமே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஒருவருக்கு பலம் சேர்க்காது. களம் காணும் வீரர் ஒவ்வொருவரின் பின்னணியையும், அவருடைய கடந்த கால சாதனையையும் நான் அறிந்து கொள்வேன். உரிய தருணத்தில் அதை வெளிப்படுத்திப் பேசுவேன். இந்த அணுகுமுறையை வீரர்களும், பார்வையாளர்களும் பெரிதும் விரும்புவர். என் பேச்சின் விளைவாக மந்தமான விளையாட்டு பல சமயங்களில் சூடு பிடித்து பொது மக்களைக் குதூகலப்படுத்தி இருக்கிறது.

விளையாட்டு வர்ணனையாளர், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் போன்ற தொழிலில் இருப்போருக்கு உச்சரிப்புத்திறன் கூடிய பேச்சாற்றலுடன் சமய சந்தர்ப்பத் திற்கு ஏற்ப பேசும் திறனும் இருக்க வேண்டும். ஒரு சமயம், ஆண், பெண் இருபாலரும் பங்கு கொண்ட கபடி போட்டி நடந்து கொண்டிருந்தது.

ஒரே சமயத்தில் அருகருகே இருந்த மைதானங்களில் போட்டி நடந்தது. ஆண்களுக்கான போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் குழு ஒன்று திடீரென எழுந்து பெண்கள் விளையாடும் திடலுக்குச் சென்று அமர்ந்தது. ஒலி பெருக்கியில் பேசிக்கொண்டிருந்த நான், ‘காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு’ என்று அறிவித்து, இந்தத் தகவலைக் கூறியதும் இரண்டு மைதானங்களிலும் எழுந்த சிரிப்பொலி அடங்க நீண்ட நேரம் பிடித்தது.

தமிழர் திருநாளையொட்டி திராவிடர் கழகம் நடத்திய ஏராளமான கபடிப் போட்டிகளுக்கு அறிவிப்பாளராக நான் பணியாற்றியுள்ளேன்.

தமிழர் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களிடம் பலமுறை பெற்ற பாராட்டுதல்களை பெரும்பேறாக கருதுகிறேன். மணியம்மையார் பல்கலைக் கழகம் சார்பில் தஞ்சையில் மாநில அளவிலான கபடிப் போட்டி 5 நாள் நடந்தது. இறுதிநாள் நிகழ்ச்சியில் 65,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். என் வர்ணனை கலந்த உரையைப் பாராட்டி பார்வையாளர்கள் தரப்பில் இருந்து மட்டும் ரூ.30,000 பரிசு அளிக்கப்பட்டது.

இதேபோல சேலத்தில் நடந்த வீரபாண்டியார் பிறந்த நாள் நிகழ்ச்சியிலும் அரங்கில் இருந்த 12,000 பார்வையாளர்களின் ஒட்டு மொத்த பாராட்டைப் பெற்றேன்.
சென்னையில் நடந்த கபடிப் போட்டி ஒன்றைத் தொடங்கி வைத்த தினத்தந்தி அதிபர் மறைந்த திரு. பா. சிவந்தி ஆதித்தன், என்னை பாராட்டி பேசியது மறக்க முடியாத அனுபவம். இதேபோல, உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு. ஏ.ஆர். லட்சு மணனும் என்னுடைய தமிழ் உச்சரிப்புத் திறனை பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்.

தந்தை பெரியார், சி.பா.ஆதித்தனார், கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நூல்கள் தான் எனக்கு மெருகூட்டின என்றால் மிகையில்லை.

தமிழர்களின் விளையாட்டான கபடி, ஒரு தாய் விளையாட்டு ஆகும். உலகில் விளையாடப்படும் 282 விளையாட்டுகளில் எவ்விதமான உபகரணமும் இல்லாமல் விளையாடும் ஒரே விளையாட்டு கபடிதான். இதில், கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ், பாக்சிங் ஆகிய மூன்று விளையாட்டுகளும் அடக்கம். உடல் நலத்திற்கு பெரிதும் உதவும் ‘மூச்சுப் பயிற்சி’யும் இதில் அடங்கும்.TH17_RAJESH_2063054f
இப்படிப்பட்ட அற்புதமான விளையாட்டுக்கு உலக அளவில் நல்ல எதிர்காலம் உள்ளது. பல்வேறு வெளிநாடுகளுக்கு நம்ம ஊர் முன்னாள் வீரர்கள் பயிற்சி கொடுக்க செல்கிறார்கள். ஆனால் நம் அரசுகள்தான் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை, கபடிக்கு கொடுப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். சிறந்த கபடி வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

தமிழர்களின் விளையாட்டான கபடி, ஒரு தாய் விளையாட்டு ஆகும். உலகில் விளையாடப்படும் 282 விளையாட்டுகளில் எவ்விதமான உபகரணமும் இல்லாமல் விளையாடும் ஒரே விளையாட்டு கபடிதான். இதில், கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ், பாக்சிங் ஆகிய மூன்று விளையாட்டுகளும் அடக்கம்.

எந்த சூழலிலும் நிலை குலையாமல் இருப்பதற்கான பண்பை எனக்கு சொல்லித் தந்த என் தந்தையார் கவிஞர் தெய்வசிகாமணியும், என் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகத் திகழும் பிரபல கபடி வீரர்கள் கோல்டு ராஜேந்திரன், பாஸ்கர் ஆகியோரும் நெஞ்சில் நிறைந்தவர்கள். இத்துறையில் மேலும் சாதிக்கும் நோக்கில், மேலும் புதியதைக் கற்கவும், உழைக்கவும் விரும்புகிறேன். தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஆகவும் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறேன்” என்றார் திரு. தெ. மோகனவேலன். (984070 9599)

– ம.வி.ராஜதுரை

ஷாப் கீப்பர்ஸ் பேக்கேஜ் பாலிசி

0

மேலை நாட்டில் ஒரு வணிகர் புதிதாக கடை தொடங்குகிறார் என்றால், முதலில் தனக்கு வேண்டிய காப்பீட்டுத் திட்டத்தை எடுத்து வைத்துக் கொள் வார். நம் நாட்டைப் பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் அக்கறை கொள்வது இல்லை. எதற்காக அதற்கு ஒரு பிரிமியம் செலுத்த வேண்டும். நம் கடையில் அசம்பாவிதம் எதுவும் நேராது என்று மனதளவில் முடிவுக்கு வந்து விடுவார்கள்.

அண்மையில் ஒருநாள், எங்கள் நிறுவனத்தின் அருகில் உள்ள வெளுப்பகத்தை (Laundary Shop) அதன் உரிமையாளர் வழக்கம்போல இரவு 10 மணிக்கு மூடி விட்டுச் சென்றார். மணி 11-ஐ தாண்டுவதற்குள் அந்தக் கடை முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது.

கடை வைத்து நடத்தும் ஒரு வணிகருக்கு ‘ஷாப் கீப் பர்ஸ் பேக்கேஜ் பாலிசி’ எல்லா வகையிலும் பாதுகாப்பு தருகிறது. அதற்காகவே இந்த காப்பீட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

வாடிக்கையாளர்களிடம் வாங்கி வைத்து இருந்த நூற்றுக்கணக்கான புடவைகள் கருகி விட்டன. இதில் பட்டுப் புடவைகளும் அடங்கும். அந்தக் கடைக்காரர் காப்பீட்டுத் திட்டம் எதுவும் எடுக்கவில்லை. வாடிக்கையாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவும் கடையைப் புதுப்பிக்கவும் அவருக்கு பெருந்தொகை தேவைப்பட்டது. காப்பீடு செய்யாத தவறை நினைத்து அப்போது வருந்தினார்.images

இவர் கடையை போல மளிகைக் கடை, தங்க நகைக் கடை, அழகுப் பொருள் விற்பனை செய்யும் கடை, ஜவுளிக் கடை.. இப்படி எந்தக் கடையும் பாதிப்புக்கு உள்ளாகலாம். அது மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தாக இருக்கலாம், கொள்ளையர் கை வரிசையாக இருக்கலாம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றமாக இருக்கலாம்.

கடை வைத்து நடத்தும் ஒரு வணிகருக்கு ‘ஷாப் கீப் பர்ஸ் பேக்கேஜ் பாலிசி’ எல்லா வகையிலும் பாதுகாப்பு தருகிறது. அதற்காகவே இந்த காப்பீட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளும் எந்தவொரு வணிகரும் தங்கள் கடை அல்லது ஷோரூமில் உள்ள பொருட்களின் விவரத்தை அன்றைய சந்தை விலை மதிப்புபடி குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பாலிசியை புதுப்பிக்கும்போதும் அன்றைய சந்தை மதிப்பைக் கருத்தில் கொண்டு, கடையில் உள்ள பொருட்களின் மதிப்பைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அசம்பாவிதம் நிகழும் போதும், உண்மையான இழப்பீட்டை பெறமுடியும்.

‘இன்சூரன்ஸ் திட்டங்கள் உருவாக்கப்படுவதன் நோக்கமே, பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன்தான்” என்ற கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

– திரு.வி.ஆர்.ரவிகுமார்,
கிளை மேலாளர்,
யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம்.

பயன் மொழிகள்

0

விதை நெல்

புத்தகங்கள் காலத்தின் விதை நெல்’ என்பார் பாவேந்தர் பாரதிதாசன். ஆம் ஒரு விதை நெல்தான் பல நெல் மணிகளை உற்பத்தி செய்கின்றது. புத்தகங்களில் பொதிந்திருக்கின்ற கருத்துகளும் விதை நெல்லாய்த்தான் பலரை உருவாக்குகின்றன.

 குறுக்கு வழி

வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது. தொடர்ந்து செயல்படுவதே முதல் வழிமுறை. அதற்கான முதல்படி நம்மீது நம்பிக்கை. தடைகளைத் தகர்த்திடும் மனத் துணிவு.

 முயற்சி

நமது நல்ல செயல்களுக்கு உடனடியாக வெற்றி கிடைக்கவில்லையே என்று கவலை கொள்ளுதல் தேவையற்றது. நமது முயற்சியை விடாது தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். தொடர் முயற்சியோடு இடைவிடாத பயிற்சியும்                   அவசியமாகும்.

 பயிற்சியும் ஈடுபாடும்

படித்துவிட்டுத் தொழிலில் இறங்கும் இளைஞர்கள் அனைவருமே தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் தொழிலில் இறங்குவார்கள். ஆனால் அனைவரும் வெற்றி அடைய முடிவதில்லை. யார் வெற்றி பெறுகிறார்கள் என்றால் முயற்சியும் பயிற்சியும் இருப்பதோடு தொழில் மீது ஈடுபாடும் கொண்டிருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

 நம்பிக்கை

கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.

 பழகிக் கொண்டால்

மன உளைச்சலுக்கு மத்தியில் வாழப் பழகிவிட்டால்தான் வாழ்க்கை சிரமமின்றி, மகிழ்ச்சியாய் நகரும். ரயில் தண்டவாளத்தின் அருகில் வீடு இருக்கிறது. அடிக்கடி ரயில் அதில் பயணித்துக் கொண்டிருக்கிறது. “ஐயோ சத்தம் கேட்கிறதே” எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அந்த வீட்டில் வாழ இயலாது. அப்படியே வாழும் வாழ்க்கையும் சுவைக்காது. அந்த ரயில் சத்தத்துக்குப் பழகிக் கொண்டால் வாழ்க்கை இனிதாகும்.

– ‘மனிதத்தேனீ’ ரா.சொக்கலிங்கம்

மகிழ்ச்சி

0

“என்னப்பா இரகசியம், உன் முகம் எப்பவும் மகிழ்ச்சியா மலர்ச்சியா இருக்கு” என்று கேட்பவர்களுக்கு மத்தியில், சிலர் ஒனக்கு பிரச்சனையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கியே” என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்… அதே புன்னகைதான்.

அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் இரகுராமன் தன் வேலையில் நேரத்திற்கு வந்து நேர்த்தியாக முடித்து விட்டு போவது அவனுக்கு பழகிப்போன ஒன்று. அப்படிப்பட்டவன்தான் மாதத்தில் இரண்டு நாள் திடீரென்று லீவு போட்டு விட்டு போய்விடுவான். எங்கு போகிறான் என்பது அவனுக்கே வெளிச்சம். யாரிடமும் மூச்சு விடுவதில்லை.

இவனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.. புதிய மேனேஜர் வரப்போவதாய் பேசிக் கொண்டனர். அவரும் சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்து போனது. அவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் மாதா மாதம் தொழிலாளிகளின் கூட்டம் நடை பெறும் என்றும், அதில் அவர்களின் பணித் தரம் பற்றி ஆய்விடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதுபோலவே, அன்றும் கூட்டம் நடை பெற்றது. அதில் ஒவ்வொரு தொழிலாளியாய் முடித்து… இரகுராமன் முறை வரும் பொழுது…
“என்ன இரகுராமன், வேலையெல்லாம் நல்லா செய்யறீங்க, எப்பவும் மகிழ்ச்சியா இருக்கீங்க… ஆனால் மாசாமாசம் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு காணாம போயிடுறீங்களே” அதுதான் பிரச்சனையா இருக்கு, எனிதிங் பிராப்ளம்” கடுகடுத்த முகத்துடன் கேட்டார் மேனேஜர்.

பிராப்ளம் எல்லாம் இல்ல சார், “ஒரு அநாதை இல்லத்துக்கு போய் அங்கே இருக்கிற ரெண்டு பசங்களை வெளியே கூட்டிட்டு போய் வயிறார சாப்பிட வைச்சு, டிரஸ் வாங்கிக் கொடுத்து ஏதாவது ஒரு சுற்றுலா இடத்திற்கு கூட்டிப்போய் அவர்களின் மகிழ்ச்சியைப் பார்க்கிறதுக்குதான் அந்த ரெண்டுநாள் லீவு. அந்த மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாக டானிக். வேற எதுக்கு மில்ல” என்றார்.

மேனேஜரின் கடுகடுத்த முகத்தில் ஒரு புன்னகை படர்ந்தது..

அவன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிக்கும், மலர்ச்சிக்குமான இரகசியம் எதுவென்று அன்றுதான் எல்லோருக்கும் புரிந்தது.

– கே.அசோகன், திருவள்ளூர்

சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட இயற்கை உணவகம்!

0

த்திரிகை உலகில் திரு.சாவித்திரி கண்ணனை அறியாதவர்கள் அரிதாகவே இருப்பர். 1985-ம் ஆண்டில் இத்துறையில் கால் பதித்து கடந்த 29 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார். அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் முக்கியப் பதவிகளில் பணியாற்றியவர். ஊடகப் பணி தவிர, சமூக நோக்கோடு அவ்வப்போது அவர் எழுதி வெளியிட்ட புத்தகங்கள் தமிழ்நாட்டில் பரவலாகப் பேசப்பட்டன. எழுதுவதோடு நின்றுவிடாமல், பிணியின்றி மக்கள் வாழ வேண்டும் என்ற நோக்கில், ஏராளமான இயற்கை உணவு முகாம்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடத்தி வந்தார்.

திரு.சாவித்திரி கண்ணன், திருமதி.கமலம்
திரு.சாவித்திரி கண்ணன், திருமதி.கமலம்

இவர் நடத்திய இயற்கை உணவுகள் எனப்படும் தமிழ் பாரம்பரிய உணவுகள் முகாம்களில் பங்கேற்றுச் சென்ற பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் விளைவாக ‘தேவாமிர்தம்’ என்ற பெயரில் தமிழ் பாரம்பரிய உணவுகள் மையத்தை திரு.சாவித்திரி கண்ணன் அண்மையில் தொடங்கியுள்ளார்.

இது குறித்து, திரு.சாவித்திரி கண்ணனை சந்தித்துப் பேசுவதற்காக சென்னை, திருவான்மியூரில் உள்ள அவருடைய இல்லத்திற்குச் சென்றோம். நம்மை இன்முகத்துடன் வரவேற்று அமர வைத்தவுடன், அவருடைய துணைவியார்   திருமதி.கமலம், ‘சிறுதானிய கேக்’-ஐ வழங்கினார். மைதாவைப் பயன்படுத்தாமல் தினையால் தயாரிக்கப்பட்ட அந்த ‘கேக்’ மிகவும் சுவையாக இருந்தது. “தொடர்ந்து ‘கேக்’களுக்கு ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. வெனிலா கேக், பிஸ்தா கேக், உலர்பழ கேக், கேரட் கேக், வாழைப்பழம் கேக் ஆகியவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்” என்றார் திரு.சாவித்திரி கண்ணன்.

“தமிழ் பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்யும் எண்ணம் உங்களுக்கு ஏற்படக் காரணம் என்ன? இதில் உங்களுடைய இலக்கு எது? முதலான பல்வேறு வினாக்களை அவரிடம் எழுப்பி, விரிவாகப் பேசினோம். அவருடைய பேட்டியில் இருந்து…

“பத்திரிகைப் பணிகளுக்காக பல்வேறு சமயங்களில் வெளியில் செல்ல நேரிட்டிருக்கிறது. அப்போது நல்ல தரமான உணவு வழங்கும் ஓட்டல்களைத் தேடி அலைந்து உள்ளேன். விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை, தரமானதாக இருக்கட்டும் என்று சுற்றிச் சுற்றி வந்திருக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் நல்ல உணவகங்கள் கிடைக்காமல் ஏமாந்து உள்ளேன். வேறு வழியின்றி கிடைக்கும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டிய நிலைமை. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட நாட்கள் பல உண்டு.

என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் மதிய உணவுக்கு ஓட்டல்களையே நம்பியுள்ளனர். இந்த ஓட்டல்களில் ஒரு நாள் இரண்டு நாள் சாப்பிடலாம். ஆனால் தொடர்ந்து சாப்பிட இயலாத நிலைதான் உள்ளது. பிற்காலத்தில், இந்தக் குறையை போக்கும் வகையில் பாரம்பரிய உணவு வகைகளை தயாரிக்கும் ஓர் ஓட்டல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இயற்கை உணவு முகாம் நடத்தியபோது, இந்த எண்ணம் வலுப்பெற்று வந்தது.thinai samiya upma

நான் ஒருங்கிணைந்து நடத்திய பாரம்பரிய உணவு முகாம்களில் என்னைக் காட்டிலும் ஆர்வமாக என் துணைவியார் கமலம் பங்கேற்றார். இதில் இயல்பாகவே அவர் பெரிதும் அக்கறை காட்டியதால், என் நீண்டநாள் எண்ணத்தை செயல்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தேன்.
சிறு தானிய உணவுகளை நாம் உரிய முறையில் தயாரித்தோமே ஆனால் அவற்றின் சுவைக்கு வேறு எந்த உணவு வகைகளும் ஈடு கொடுக்காது. இவற்றை தயாரிக்க உதவும் சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, குதிரை வாலி, சாமை, வரகு மற்றும் தினை ஆகியவை பல்வேறு சத்துக்கள் நிரம்பியவை. இவற்றோடு மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, மூங்கில் அரிசி முதலான பாரம்பரிய அரிசி வகைகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் பனை வெல்லம், பனங்கற்கண்டு,  நாட்டுச் சர்க்கரை போன்ற கெடுதல் இல்லாத இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்கிறோம்.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இயற்கையின் கொடையான சிறுதானிய உணவுகள் இப்போதும் மக்களுக்கு தொடர்ந்து கிடைத்தால் கண்டிப்பாக அதற்குதான் முன்னுரிமை கொடுப்பார்கள். மக்களின் எண்ண ஓட்டத்தை, நான் நேரில் அறிந்தவன் என்பதால் இப்படிச் சொல்கிறேன். பல்வேறு, இயற்கை உணவு முகாமுக்கு வந்து பாரம்பரிய உணவு வகைகளை உண்பவர்கள், இப்படிப்பட்ட உணவுகள் தினமும் கிடைக்காதே? என்ற ஏக்கத்துடனேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். எனவே மக்கள் ஏற்கத் தயாராக இருக்கிறார்கள்.samai arisi pongal
சிறுதானியங்களில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளன. எலும்புக்கு வலு சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப் பவையாகத் திகழ்கின்றன. மூட்டுவலி, சர்க்கரை நோய், மலச்சிக்கல், ரத்த அழுத்தம், கர்ப்பப்பை சிக்கல்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட நோய்களை அகற்றும் ஆற்றல் கொண்டவையாக இவை திகழ்கின்றன.

மிகவும் சுவையாக மதிய உணவு வேண்டும் என்று எங்களை அணுகுவோருக்கு, மாப்பிள்ளை சம்பா அரிசி சாதம், வரகு பிரியாணி, குதிரைவாலி தயிர்சாதம், சாமையில் கூட்டாஞ்சோறு, தினை சர்க்கரைப் பொங்கல் ஆகியவை அடங்கிய உணவைக் (Mini Meals) கொடுக்கிறோம். இது ஒரு வகை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்கள் விரும்பும் உணவு வகைகளை செய்து தருகிறோம்.

காலை, மாலை வேளைகளில் சிற்றுண்டிக்காக அணுகுவோருக்கு குதிரை வாலி வெண் பொங்கல், வரகு இட்லி, வெந்தயக்களி, ராகி புட்டு, சிறுதானிய தோசை வகைகள், சிறுதானிய சப்பாத்தி, பூரி, பூசணிகீர், கேரட்கீர் இவற்றுடன் சிறுதானியங்களால் செய்யப்படும் பல வகை சட்னி, சாம்பாரும் கொடுக்கிறோம். ஆவாரம்பூ தேநீர், தான்றி காபி, தூதுவளை சூப், மணத் தக்காளி சூப் முதலான பானங்களையும் தயாரித்துத் தருகிறோம்.horse valli

தமிழ் பாரம்பரிய உணவு வகைளை மிகவும் சுவைபட தயாரிப்பதில் நீண்ட அனுபவம் பெற்ற என் துணைவியார் கமலம், சிறுதானிய ‘கேக்’தயாரிக்கும் பயிற்சியை ஒரு வல்லுனரிடம் அண்மையில் கற்றுக் கொண்டார். எங்களுடைய ‘தேவாமிர்தம்’ பாரம்பரிய உணவு மையத்திற்கு அவர்தான் தூண் என்றால் மிகை யில்லை. மிக வேகமாக அதே சமயம், சுவையாக சமைக்கக் கூடியவர்.

பிறந்தநாள் விழா கொண்டாடும் ஏராளமானோர் எங்களை அணுகி ‘சிறுதானிய கேக்’ வாங்கிச் செல்கின்றனர். தீங்கு தரும் ‘மைதா’வை விலக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

பாரம்பரிய அரிசி வகைகளாலும், சிறு தானியங்களாலும் தயாராகும் உணவு வகைகள் வருங்காலத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக உள்ளது.   இந்த உணவு வகைகளை மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் விற்பனை செய்கிறோம். தற்போது ‘ஆர்டர்’ பெற்று அதற்கேற்ப வீட்டில் இருந்து செய்து கொடுக்கிறோம். ஆர்டருக்கு ஏற்ப பணியாளர்களை அமர்த்திக் கொள்கிறோம். விரிவாக்கத் திட்டத்தை படிப்படியாக செயல்படுத்துவோம்.

சிறுதானியங்கள் விலை தற்போது அதிகமாக இருப்பதற்குக் காரணம், பயன்பாடு குறைவாக இருப்பதுதான். மக்களின் ஒருமித்த பார்வை இவற்றின் மீது திரும்பி விட்டால் விவசாயிகளும் இவற்றை அதிக அளவில் பயிரிடத் தொடங்கி விடுவார்கள். அப்போது விலையும் குறைந்துவிடும். நம் மண்ணில் 90 சதவீதம் புன்செய் பயிர்கள்தான் விளைந்துள்ளன. இதற்குக் காரணம், நீர் பற்றாக்குறையே.                       எனவே, புன்செய் பயிர்களான சிறுதானியங்கள் உற்பத்தியை அரசு ஊக்குவிக்க              வேண்டும் என்றார் திரு.சாவித்திரி கண்ணன். (9444427351, 9940416408).                                                                                                                   – ம.வி.ராஜதுரை

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

0

மியூச்19thssn50_SEBI-_TH_1492506eசுவல் ஃபண்ட் என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்ட் என்பது பொதுவான நிதி இலக்குகளைப் பகிர்ந்துக் கொள்ளும் முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் பணத்தை அதன் திட்டங்களில் சேர்க்கும் நிறுவனம் மற்றும் இது சாதாரண பங்குகள், கடன் பத்திரங்கள், பணச் சந்தை ஆவணங்கள் போன்ற பல்வேறு வழிகளில் முதலீடு செய்யும்.

 திட்டம் என்றால் என்ன?
பொதுமக்கள் சந்தா செலுத்தி வாங்குவதற்கு மியூச்சுவல் ஃபண்ட் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. ஒவ்வொரு திட்டமும் குறிப்பிட்ட முதலீட்டு நோக்கத்தைக் கொண்டுள்ளது. சான்றாக. வளர்ச்சி, நிலையான வருவாய் போன்றவை. முதலீடுகளை செய்கையில் திட்டத்தின் நிதி மேலாளர் முதலீட்டு நோக்கத்தை கடுமையாக கடை பிடிக்க வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதில் உள்ள பயன்கள் என்ன?
மியூச்சுவல் ஃபண்ட் தாம் திரட்டிய தொகையை நிர்வகித்தல், முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIP), முறையாகப் பணத்தைத் திரும்ப பெறும் திட்டங்கள் (SWP) போன்ற முதலீட்டு வசதிகளில் முதலீடுகளை வகைப்படுத்துதல் ஆகியவற்றில் நிபுணத்துவத்தை அளிக்கிறது.
நான் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் திட்டங்களின் விவரங்களை எங்கு பெறலாம்?
நீங்கள் செபி (SEBI) வலைதளங் களிலிருந்து செபியிடம் பதிவு செய்திருக்கும் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட்களின் விவரங்களைப் பெறலாம். மியூச்சுவல் ஃபண்ட்களின் பல்வேறு திட்டங்கள் பற்றிய விவரங்களை இந்திய மியூச்சுவல் ஃபண்ட்கள் சங்கத்தின் (AMFI) வலைதளம் அல்லது தொடர்புடைய மியூச்சுவல் ஃபண்ட் வலைதளத்திலிருந்து பெறலாம்.
செய்ய வேண்டியவை
உங்கள் முதலீடுகளின் மதிப்பு சந்தையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்பட்டது. உத்தர வாதமளிக்கப்பட்ட வருமானங்களை அளிக் காது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
உங்களிடம் PAN, வங்கி கணக்கு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மற்றும் விண்ணப்பப் படிவத்தில் சரியாக விவரங்களை அளியுங்கள்.
திட்ட தகவல் ஆவணம் (SID) முக்கிய தகவல் குறிப்பாணையை (KIM) பார்வையிடும் போது பின்வருபவற்றை கவனியுங்கள்.

  • முதலீட்டு நோக்கம்
  • சொத்து ஒதுக்கீடு
  • அபராதங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவை அடங்கிய அபாய காரணிகள்
  • திறனளவுடன் (benchmark) ஒப்பிடு கையில் திட்டத்தின் செயல்திறன்
  • முதலீட்டு உத்தி
  • நிதி மேலாளர் பற்றிய விவரங்கள்
  • கட்டணங்கள் (அ) கழிவுகள் (entry/exit loads)
  • யூனிட் ஹோல்டர்களின் உரிமைகள்
  • பரஸ்பர நிதியின் மற்ற திட்டங்களிலிருந்து இந்த திட்டம் எப்படி வித்தியாசமானது
    NFO-விற்கு முடங்கிய தொகையால் ஆதரிக்கப்பட்ட விண்ணப்பத்தை (ASBA) பயன்படுத்துங்கள்.
  • கணக்குடைய பெறுநர் பெயரிலான காசோலைகள்/வரையோலைகள்/மின்னணு நிதிய மாற்றீடு மூலமாக மட்டும் கட்டணங்களை செலுத்துங்கள்.
  • ஏதேனும் சந்தேகம்/குறையிருந்தால், மியூச்சுவல் ஃபண்டின் இணக்க அதிகாரியைத் (Compliance Officer) தொடர்பு கொள்ளுங்கள்.
  • உங்கள் குறை தீர்க்கப்படவில்லை என்றால் செபியை அணுகுங்கள்.
  • உங்கள் விண்ணப்பப் படிவத்தின் நகலை வைத்துக் கொள்ளுங்கள்.

செய்யக் கூடாதவை

  • நடைமுறைக்குப் புறம்பான, உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஆதாயங்களை எதிர்பார்க் காதீர்கள்.
  • கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள்.
  • SID/KIM -ஐ படிக்காமல் முதலீடு செய்யாதீர்கள்.
  • மக்கள் தொடர்பு ஊடகத்தில் நடைமுறைக்குப் புறம்பான லாபங்கள் மற்றும் எதிர்பாராத லாபங்களை உறுதியளிக்கும் விளம்பரங்கள் / ஆலோசனை / வதந்திகள் / பொய்யான செய்திகளால் வசப்படாதீர்கள்.
  • நுண் எழுத்தில் தரப்பட்ட விவரங்களைப் படிக்காமல் கவர்ந்திழுக்கும் விளம்பரங்களுக்கு மயங்காதீர்கள்.
  • உங்கள் முதலீடுகளை ஜோதிட ஊகங்களின்படி செய்யாதீர்கள்.
  • சந்தை வதந்திகள் / சூடான ஆலோ சனைகள் / ‘வாய்ப்பு ஒரே ஒரு முறைதான் கதவைத் தட்டு’ போன்ற அறிவுரைகளுக்கு இரையாகாதீர்கள்.
  • சந்தை கருத்து போக்குகளால் தடுமாறாதீர்கள்.
  • யாரேனும் ஒருவர் அளிக்கும் வெளிப்படையான/மறைமுகமான வாக்குறுதிகளை வைத்து முதலீடு செய்யாதீர்கள்.
  • ஊக்கத் தொகைகள் / பரிசுகள் / தூண்டு தலின் பேரில் எந்த திட்டத்திலும் முதலீடு செய்யாதீர்கள்.
  • மனக்கிளர்ச்சியினால் (impulse) முதலீட்டில் ஈடுபடாதீர்கள்.
  • விண்ணப்பப் படிவத்தில் தவறான/நேர் மாறான/முழுமையற்ற தகவலை அளிக்காதீர்கள்.
  • விண்ணப்பப் படிவத்தை சேதப்படுத்தாதீர்கள்.

உரிமைகள்
வேண்டுகோளின்படி மியூச்சுவல் ஃபண் டிடம் இருந்து கூடுதல் தகவல் அறிக்கை (SAI), SID அல்லது KIM-ஐ பெறுவது.

எந்தவித கட்டணம் இல்லாமல்
* ஒவ்வொரு சந்தா / SIPயின் மொத்த மதிப்பில் ரூ.10,000-க்கு குறைவான தொகை          முதலீடு செய்வது.
* நேரடியாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது

பெறுவது
* NFO முடிவடைந்த 5 வேலை நாட்களுக்குள் பணத்தை திரும்ப (Refund) பெறுவது
* அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் லாபத் தொகை
* வேண்டுகோள் விடுத்தால் 10 வேலை நாட்களுக்குள் மீட்புத் தொகை
லாபப் பங்கு, மீட்புத் தொகை மற்றும் திரும்ப பெறும் தொகை ஆகியவற்றுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு பிறகு தாமதமானால் ஒரு வருடத்திற்கு 15% வட்டியைப் பெறுவது
ஏற்கனவே உள்ள விநியோகஸ் தரிடமிருந்து மறுப்பின்மைச் சான்றிதழ் (NOC) கோராமல் விநியோகஸ்தரை மாற்றுவது

திட்டவாரியாக நான்கு மாதங்களுக்குள்
பரஸ்பர நிதியின் ஆண்டறிக்கை பெறுவது அல்லது
ஆண்டறிக்கையின் சுருக்கம் பெறுவது மற்றும் பரஸ்பர நிதியின் தலைமை அலுவலகத்தில் முழு ஆண்டு அறிக்கை பிரதிகளை பார்வையிட மற்றும் பிரதிகளை எடுக்க விருப்பத்தேர்வு

பொறுப்புகள்
முதலீடு செய்வதற்கு முன், திட்டம் தொடர்புடைய ஆவணங்களை கவனமாக படித்து, அபாயங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளுங்கள்.
SAI – மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய சட்டப்பூர்வமான தகவல்
SID – திட்டம் தொடாபான முக்கிய தகவல்கள்
KIM – SIDயின் சுருக்க பதிப்பு
மியூச்சுவல் ஃபண்டில் நேரடியாக முதலீடு செய்வது அல்லது இந்திய மியூச்சுவல் ஃபண்ட்கள் சங்கம் (AMFI), பதிவு பெற்ற விநியோகஸ்தர்கள் / முகவர்கள் மூலம் மூதலீடு செய்வது. இது பற்றிய விவரங்கள் AMFI வலைதளத்தில் கிடைக்கும்.

விண்ணப்பப் படிவம்

  • விண்ணப்பத்தை பெரிய எழுத்துக்களில் (Block Letters) நிரப்புங்கள்
  • எந்தவிதமான அடித்தல் / திருத்தல்கள் / எழுதியதன் மேலெழுதுதல் இல்லாமல் வங்கி கணக்கு விவரங்களையும் சேர்த்து முழுமையான தகவலை அளியுங்கள்.
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் அளியுங்கள்.
  • மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் பெயரில் மட்டும் பணம் செலுத்துங்கள்
    வரையோலை/காசோலையின் பின்புறம் விண்ணப்ப படிவத்தின் எண்ணை                    குறிப்பிடுங்கள்
  • காலியான/தேவையற்ற களங்கள் அனைத்தையும் அடித்து விடுங்கள்
    உங்கள் முதலீடுகள் அனைத்திற்கும் தவறாமல் வரிசை நியமனம் செய்யுங்கள்
    நீங்கள் முதலீடு செய்துள்ள திட்டத்தின் (திட்டங்களின்) செயல்திறன் மற்றும் விவரத்தை தொடர்ந்து கண்காணியுங்கள்.

என்எஃப்ஓ, என்ஏவி, எஸ்ஐடி, கேஜஎம் – இவை என்ன?
புதிய நிதி வெளியீடு (NFO)
புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகையில் ஒரு நிலையான விலையில் குறிப்பிட்ட திட்டத்தின் யூனிட்களுக்கு சந்தா செலுத்த மியூச்சுவல் ஃபண்ட் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தல்.

நிகர சொத்து மதிப்பு (NAV)
நிகர சொத்து மதிப்பு என்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் வைத்திருக்கும் சொத்துக்களின் சந்தை மதிப்பு. பொதுவாக ஒரு யூனிட்டிற்கான NAV தினசரி அறிவிக்கப்படும். சந்தாக்கள் மற்றும் மீட்புத் தொகைகள் ஆகிய அனைத்தும் NAV யில் பரிவர்த்தனை செய்யப்படும்.

திட்ட தகவல் ஆவணம் (SID)
மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் பற்றி மியூச்சுவல் ஃபண்ட் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கான தகவல்களை கொண்டுள்ள ஆவணம். இதில் முதலீட்டு நோக்கம், அபாய காரணிகள், நிதி மேலாளர் பற்றிய விவரங்கள், போன்றவை அடங்கும்.

முக்கிய தகவல் குறிப்பாணை (KIM)
KIM என்பது SIDயின் சுருக்கமான பதிப்பு.
மேலும் தகவல்களுக்கு :http://investor.sebi.gov.in,www.sebi.gov.in)

– மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பாக
‘செபி’ அளித்துள்ள விளக்கங்கள்

தமிழக காய்கறிகளில் அளவுக்கு அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகளா?

0

கேரள வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கேரள உணவு பாதுகாப்பு ஆணையம் ஆகியவை தமிழ் நாட்டு விவசாயிகள் மற்றும் அவர்களது வேளாண்முறை குறித்த உண்மையான தகவல் களை மறைத்து வேண்டும் என்றே பொய்ப் பரப்புரை யில் ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வேளாண் வேதித்துறையின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்புகளுள் ஒன்றான இந்திய பயிர் பாதுகாப்புக் கூட்டமைப்பு (Crop Care Federation of India) கூறி உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து வரும் காய்கறிகளில் அதிக அளவில் பூச்சிக் கொல்லி மருந்துகளின் தாக்கம் இருப் பதாக கேரள அரசு அண் மையில் தெரிவித்ததை அடுத்து இந்த மறுப்பை இந்திய பயிர் பாதுகாப்புக் கூட்டமைப்பு முன்வைத்து உள்ளது.

இதன் தலைவர் திரு. ரஜ்ஜு ஷ்ராஃப் கூறுகையில், ”முழு புள்ளி விவரங்களை யும் தெரிவிக்காமல் இந்த குறைகூறல் நடந்து உள்ளது. எங்கள் ஆய்வின் அடிப் படையில் பார்க்கும்போது இந்த குறைகூறல் முற்றிலும் தவறானவை என்று தெரிய வந்து உள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காய்கறிகளில் ஒரு சதவீதத் துக்கும் குறைவான காய்கறி களில்தான் அனுமதிக்கப் பட்ட அதிக அளவைக் காட்டிலும் சற்று கூடுதலாக பூச்சக் கொல்லி மருந்துகள் காணப்பட்டன. எனவே, தமிழ் நாட்டில் இருந்து செல்லும் காய்கறிகளில் கூடு தலாக பூச்சிக் கொல்லி மருந்துகளின் தாக்கம் உள் ளன என்ற ஒட்டுமொத்த மான குற்றச் சாட்டுகளை கேரள உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் கேரள வேளாண் பல்கலைக் கழகம் ஆகியவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

(இ-வ) : திரு. எஸ். கணேசன், திரு. ரஜ்ஜு ஷ்ராஃப்
(இ-வ) : திரு. எஸ். கணேசன், திரு. ரஜ்ஜு ஷ்ராஃப்

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் ஐஏஎஸ் அதிகாரி திருமதி டி.வி.அனுபமாவுக்கும் இந்திய பயிர் பாதுகாப்பு கூட்டமைப்பு ஒரு புகார்க் கடிதத்தை அனுப்பி உள்ளது. இந்த கடிதத்துக்கு அவர் எந்தவித பதிலையும் அனுப்ப வில்லை. எனவே பொது மக்கள் நடுவில் ஆதாரம் அற்ற, பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தகவல்களை பரப்பி வருவதாக கேரள வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன் றையும் அனுப்பி உள்ளோம்” என தெரிவித்தார்.

இது பற்றி இந்திய பயிர் பாதுகாப்பு கூட்டமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கொள்கை ஆலோச கர் திரு எஸ். கணேசன் கூறு கையில்,” கேரளாவில் அரங் கேறிய இந்த நாடகத்துக்கு வெளிநாட்டு நிதி உதவி யுடன் செயல்படும் சில சக்திகள்தான் காரணம். இந்த நிகழ்வில் அந்நிய நிதி உதவியுடன செயல்படும் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து உள் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம்” என்றார்.

– ராகு

தொடர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புக் கழிவு!

0

நினா பெஞ்சமின் சிங் (Nina Benjamin Singh) குர்பிரீத் சிங் (Gurpreet Singh). நினா தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையில் நல்ல அனுபவம் பெற்றவர்கள். குர்பிரீத் மின்கலங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டிருந்தவர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து வாகனங்கள் மற்றும் தொழில் சாலைகளுக்குத் தேவைப்படும் மின்கலங்களைத் தயாரிப்பதில் இறங்கினார்கள். தங்களுடைய உற்பத்திப் பொருளை விற்பதற்கு இவர்கள் தேர்வு செய்த முறை, பெயர் வழங்கு உரிமை அடிப்படையில் இயங்குவதாகும்.

 Nina Benjamin Singh and Gurpreet Singh

Nina Benjamin Singh and Gurpreet Singh

ரூ.3 ஆயிரம் முதல் கொண்டு 13 ஆயிரம் வரையிலான விலை கொண்ட மின்கலங்களை இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இன்பைனைட் அக்குமுலேட்டர்ஸ் (Inpynyt Accumulators) என்பது இவர்களது நிறுவனத்தின் பெயர்.

இவர்களுடைய தயாரிப்பின் தனித் தன்மை என்னவெனில் இதே வகையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் மின்கலங்களைக் காட்டிலும் குறைந்தபட்சம் 15 முதல் 20 விழுக்காடு விலை குறைவாக இருப்பதுதான். முதலில் வாங்கிய வாடிக்கையாளர்கள் இரண்டாவது முறையாக இவர்களையே தேடி வந்தால் விலையில் இன்னும் தாராளமாகக் கழிவு கொடுக்கிறார்கள். இதன் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் பெரும் வெற்றியை ஈட்டி இருக்கிறார்கள்.

இந்தியாவில் அதிலும் குறிப்பாகக் கிராமப்பகுதிகளில் மின் அளிப்பு எப்படி இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். அத்தகைய சூழ் நிலைகளிலும் பழுதே ஏற்படாத வகையிலான, தொடர்ச்சியான மின் அளிப்பை உறுதி செய்யும் விதத்தில் இவர்கள் மின்கலங்களைத் தயாரித்து அளித்தார்கள். நாட்டிலேயே இத்தகைய தொழில் நுட்பத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள்தான்.DE18_BATTERY_OPERA_1588356fதங்களது தயாரிப்புகள் இடையில் எந்தத் தடங்கலையும் ஏற்படுத்தமாட்டா என்பதை உறுதிபடக் கூறி அதைச் செயல் படுத்தியும் காட்டி இருக்கிறார்கள். காலால் மிதித்து இயக்கப்படும் ரிக்ஷாக்களுக்கு மாற்றாக, மின்கலங்களைக் கொண்டு இயக்கும் புதிய வகை வாகனங்களையும் இவர்கள் அறிமுகம் செய்தார்கள்.

கால மாறுதல்களுக்கு ஏற்ப சூரிய விசை மின்கலங்களைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள். மோட்டார் சைக்கிள்களுக்குத் தேவைப்படும் மின்கலங்களையும் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரூ.12 கோடியில் துவங்கிய விற்று முதலை ரூ.300 கோடிக்கு எடுத்துச் செல்வது இவர்களது இலக்கு. இதற்கான முழு முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள். விநியோக அமைப்பை விரிவாக்குவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

-சுதா தனபாலன்

எதிர்பார்த்தது நிறைவேறட்டும்

0

திரைப்படங்களில் எதிர்பாராத திருப்பங்கள் வந்தால் மக்கள் அந்தப் படம் விறுவிறுப்பாக இருந்தது என்று மெச்சுவார்கள். ஆனால் அரசாங்கங்களைப் பொறுத்த வரை, மக்கள், தாங்கள் எதிர்பார்க்கும்   பணிகள் நடைபெற வேண்டும் என்றுதான் முதன்மையாக எதிர்பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சி என்றால் மக்களுக்கு இடையே சமத்துவம், சம உரிமை, சம வாய்ப்பு வழங்கும் அரசுகளாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும், அனைத்து மக்களுக்கும் கல்வி அளிக்கும் அரசுகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, இடஒதுக்கீட்டுக்கு எதிரான, வருமான உச்சவரம்பு நிலையை முன்னாள் முதல்வர் திரு. எம்ஜிஆர், அதிகாரிகளின் தவறான ஆலோசனை காரணமாக ஒருமுறை எடுத்தபோது அதற்கு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையான தோல்வியைச் சந்தித்தார். அதன்பிறகு தன் நிலைப்பாட்டை முற்றிலும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மாற்றிக் கொண்டு தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டு இருந்தார். இது ஒரு சான்று.

இந்த முறை பாஜக அரசு அமைந்தபோது, உள்ளூர் தொழில்களின் வளர்ச்சி தொடர்பாக கவனம் செலுத்துவார்கள். சிறுதொழில்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உள்ளூர் தொழில் முனைவோரின் தொழில் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் அரசாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் நிலவியது. அதற்கேற்பவே தேர்தலுக்கு முன்பு வரை பாஜக ஆதரவு பொருளியல் வல்லுநர்கள் இத்தகைய கருத்துகளை மக்களிடையே விதைத்து வந்தனர். பொருளியல் கட்டுரைகளை சலிப்பில்லாமல் தீட்டும் திரு. குருமூர்த்தி போன்றவர்கள் எழுதிய அப்போதைய கட்டுரைகளைப் படித்தால் இது தெளிவாகத் தெரியும்.

பொதுவாகவே, பாஜக வட்டாரம் தொழில் வளர்ச்சிக்கு பிற நாடுகளை ஏன் சார்ந்து இருக்க வேண்டும்? நாமே முயன்று தன்னிறைவான வளர்ச்சியைப் பெற வேண்டும். சுதேசி மணம் வீச வேண்டும் என்ற எண்ண ஓட்டத்துடனேயே இருந்தன. தமிழ்நாட்டில் கூட பாஜக ஆதரவு இதழ் ஒன்று, சுதேசி என்ற பெயரில் வெளிவருகிறது.

ஆனால் பாஜக அரசின் செயல்பாடுகள் இவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதாக இல்லை. இந்தியர்களின் உற்பத்தித் திறனை வளர்ப்பதற்கு பதிலாக, வெளிநாட்டு தொழில் நிறுவனங்களிடம், இந்தியாவுக்கு வந்து உற்பத்தி செய்யுங்கள் என்று அழைப்பு விடுப்பதிலேயே காலத்தை செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கேற்ப ”மேக் இன் இந்தியா” என்ற சொற்றொடரையும் பரபரப்புடன் பரப்பி வருகிறார்கள். இந்த பரபரப்புக்கு நடுவே ”மேட் இன் இந்தியா” மங்கி வருகிறது. இதற்கிடையே இவ்வளவு கோடி ரூபாய்கள் அன்னிய முதலீட்டையும் ஈர்த்து விட்டோம் என்று பெருமையும் அடித்துக் கொள்கிறார்கள்.

இந்த எதிர்பாராத திருப்பம் குறித்து பாஜக நண்பர்களிடம் கேட்கும்போது பதில் சொல்லத் திணறும் நிலைதான் இருக்கிறது. எனவே பாஜக அரசு மக்களிடம் ஏற்கெனவே உருவாக்கிய நம் நாட்டுத் தொழில்களை, நம் நாட்டுத் தொழில் முனைவோரைக் கொண்டே வளர்ப்பதற்கான முயற்சிகளை, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு செயல்பட வேண்டும். அதுவே தொலைநோக்குப் பார்வையில் இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு உதவும்.
– ஆசிரியர்

புதிய கள ஆய்வினால் பயிற்சித் தொழிலை புத்தாக்கம் செய்தோம்!

0

நாற்பத்தி இரண்டு சிறு மற்றும் குறுந் தொழில்கள் செய்வதற்கான பயிற்சியைத் தருகிறது, சிப் சிஸ்டம் நிறுவனம். இந்த நிறுவனம், சென்னை, மேற்கு மாம்பலத்தை முதன்மையிடமாக கொண்டு                 செயல்பட்டு வருகிறது. திருச்சியில் ஒரு கிளையையும் தொடங்கியுள்ளது.

அண்மையில் புதிதாக தொடங்கியுள்ள தொழில் பயிற்சிகளைப் பற்றி அதன் தொழில் நுட்ப இயக்குநர் திரு எம். கார்த்திகேயன் கூறியதாவது;
“செல்பேசி பழுது பார்த்தல், கணினி மென்பொருள், வன்பொருள் என மின்னணு பொருட்கள் சார்ந்த பயிற்சிகளை பல ஆண்டுகள் கொடுத்து வந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கற்றுச் சென்றனர்.

தற்போது பல்துறை பயிற்சி கொடுக்கும் நிறுவனங்கள் அதிகரித்துவிட்டதால், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சேர்க்கையும் குறைந்துவிட்டது.

chip-system-chennai
சிப் சிஸ்டம் இயக்குநர் திரு எம். கார்த்திகேயன்

நிறுவனத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த எங்களுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. அந்த காலகட்டத்தில் எங்கள் நிறுவன ஊழியரும், நானும் கள ஆய்வு செய்தோம். அந்தக் கள ஆய்வில் புதிய பயிற்சிக்கான சிந்தனை கிடைத்தது.

கள ஆய்வு என்ன? ஒரு மாணவன் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சியை கற்றுக் கொள்கிறான். ஆனால், அவன் அதே துறையில் வேலைக்கு செல்கிறானா? என்றால் இல்லை. அதே நேரத்தில், நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கிறது. ஆனால், அந்த வேலையைச் செய்ய தகுதியான ஆட்கள் கிடைக்கின்றார்களா? என்றால் அதுவும் இல்லை. ஆக, வேலை வாய்ப்பும் இருக்கிறது. வேலை கிடைக்கவில்லை என்கிற இளைஞர்களும் இருக்கிறார்கள். இவைகளை ஒன்றிணைத்தால் என்ன? என்று தோன்றியது.

அதற்காக, முதல் கட்டமாக பல்வேறு பெரிய, நடுத்தர, சிறிய இடங்களுக்கு நேரடியாக சென்று, எந்த மாதிரியான இளைஞர்கள் உங்களுக்குத் தேவை. அதற்கான பயிற்சியை நாங்கள் கொடுத்து அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லி ஒப்பந்தம் செய்தோம்.
எந்த வேலைக்கு ஆட்கள் தேவையோ, அந்த வேலைக்கு பயிற்சி கொடுத்து வேலை கொடுப்பதாக விளம்பரம் செய்தோம். இப்போது, தொழில் நுட்ப பயிற்சி கற்றவர்கள் வேலைக்கான பயிற்சிக்காக எங்களிடம் வந்து சேர்ந்தனர். அந்த வேலை வாய்ப்பு பெற வரும் இளைஞர்களிடம் பயிற்சிக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டோம். வேலை வாங்கிக் கொடுப்பதற்கான கட்டணத்தைப் பெறவில்லை. இதேபோல், பல துறைகளுக்கு தகுதியானவர்களை உருவாக்கிக் கொடுக்கும் பயிற்சியைத் தருகிறோம்.

அதேபோல், இன்னொரு வகையான இளைஞர்களும் அல்லாடிக் கொண்டிருப்பதாக கள ஆய்வில் கண்டோம். அதாவது, குறைந்த முதலீட்டில் தொழில் ஆரம்பிக்கவும், அதற்கான கடன் பெறவும் வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி? என்று சிந்தித்ததின் விளைவாக, சில வங்கி மேலாளர்களிடம் பேசினோம்.
அவர்கள் கூறும் குற்றச்சாட்டு, ‘இளைஞர்களிடம் ஆர்வம் இருக்கிறது. ஆனால், என்னென்ன ஆவணங்கள் சரியாக கொடுத்தால் நிதி கிடைக்கும் என்கிற விழிப்புணர்வு இல்லை. அதனால், பலருடைய கடன் கேட்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன” என்றார்.

அதற்கான பயிற்சி கொடுத்தால் நிதி வழங்கும் வாய்ப்பு தருவீர்களா? என்று கேட்டோம். அதற்கு சில வங்கி மேலாளர்கள், “உங்களுடைய பயிற்சி சான்றிதழும், சரியான ஆவணங்களும் இருந்தால் உடனே நிதி வழங்க தயாராக இருக்கிறோம்” என்று உறுதி அளித்தனர். அதன்படி சுய தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து கடன் உதவி பெற்றுத் தருகிறோம்.

இவை தவிர, புதியதாக சிசிடிவி (CCTV) பொறுத்துவதற்கான பயிற்சி, ஒளிப்படம் மற்றும் வீடியோ கருவிகள் பழுது பார்ப்பு மற்றும் கையாளுவதற்கான பயிற்சி மற்றும் சூரிய மின்சாரம் (Solar power) தயாரிப்பதற் கான பயிற்சி எனப் புதுப் புது வகையான பயிற்சிகளை அறிமுகப்படுத்தி பயிற்சி நிறுவ னத்திற்கு புத்துயிர் அளித்துள்ளோம்.
இவை தவிர, மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (MSME) நிறுவனத் துடன் மத்திய அரசின் சான்றிதழுடன் LED, LCD, TV, Monitor, Printer refilling மற்றும் ஃபோட்டோ காப்பியர் (Xerox machine) பழுது பார்த்தல் ஆகியவற்றுக்கான பயிற்சிகளைக் கொடுத்து வருகிறோம்.

இதில் ஃபோட்டோ காப்பியர் எந்திரம் பழுது பார்ப்பதற்கான பயிற்சிக்கு அதிகம் பேர் வருகின்றனர். காரணம் ஒரு எந்திரத்தில் ஒரு நாளைக்கு ரூ.250 அல்லது 300 வரை லாபம் சம்பாதிக்கிறார்கள். சிறு பழுது ஏற்பட்டால்கூட, அதற்கான பழுது பார்ப்பாளர் ரூ.250 சர்வீஸ் சார்ஜாக வாங்கிச் செல்கின்றனர். அந்தச் சிறிய பழுது பார்ப்பை நாம் தெரிந்து கொண்டால், அதற்கான சர்வீஸ் சார்ஜ் இழக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் கற்றுக் கொள்ள வருகின்றனர்.

அடுத்ததாக, வீட்டிலிருந்தே தொழில் செய்யக்கூடிய ஆன்லைன் சேவை பற்றியும் பயிற்சி தருகிறோம். பேருந்து, தொடர் வண்டி டிக்கெட் புக்கிங், மின்கட்டணம், செல்பேசி ரீசார்ஜ், DTH ரீசார்ஜ் செய்வது எப்படி? போன்ற பயிற்சியையும் சொல்லித் தருகிறோம். இந்தப் பயிற்சியை சில இல்லத்தரசிகள் தங்களுடைய சொந்தத் தேவைக்காக கற்றுச் செல்கின்றனர். ஆம், புதிய கள ஆய்வின் மூலமாக மிகுந்த தன்னம்பிக்கையுடன் பயிற்சித் தொழிலை சிறப்பாக செய்து வருகிறோம்” என்றார் திரு. எம்.கார்த்திகேயன்.

– ஆ.வீ.முத்துப்பாண்டி