அள்ளித் தருகிறது, அழகு தமிழ் பேச்சு!

- கபடி வர்ணனையாளர் திரு.தெ.மோகனவேலனுடன் நேர்காணல்!

தமிழ்நாட்டில் உள்ள பெரிய மீனவ கிராமங்களில் நொச்சிக்குப்பமும் ஒன்று. இது சென்னை மெரினா கடற்கரையை யொட்டி அமைந்துள்ளது. மீன்பிடித் தொழிலில் இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஈடுபடுகின்றன. துறைமுகப் பணி உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த வேலைகளில் படித்த இளைஞர்கள், கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிற்றுண்டி கடை நடத்து வோர், விளையாட்டுப் பொருட்களை விற்கும் சிறு வியாபாரிகள், கூலித் தொழி லாளர்கள், இப்படி… இப்பகுதி மக்களை பிரிக்கும்போது, திரு. தெ. மோகனவேலன் என்ற மீனவ இளைஞர் மட்டும் நம் கண்களுக்கு தனித்துத் தெரிகிறார்.

unnamed (2)

‘தாய்மொழியாம் தமிழ் மொழியை பிழையின்றி உச்சரித்து அழகாகப் பேசும் பாங்கு’ இவரை ஒரு நட்சத்திரமாக ஆக்கி உள்ளது. விளையாட்டுப் போட்டிகளை குறிப்பாக கபடிப் போட்டி நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கும் வர்ணனையாளராக, தமிழகம் முழுவதும் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

“கிட்டத்தட்ட, தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் சென்று வந்து விட்டேன். எனக்கு கிடைத்த வரவேற்புகள், பாராட்டுகளை தமிழன்னையின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்” என்று கூறும் திரு.தெ.மோகன வேலன், தொழில்ரீதியாக தான் பெற்ற வெற்றிகரமான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய பேட்டியில் இருந்து…

“மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ முடித்து விட்டு, சென்னை பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில், இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்தேன். இதன் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், நூலகங்களில் சென்று பயிலவும் நேரம் கிடைத்தது. தலை சிறந்த பேச்சாளர்கள் பேசும்போது அவர்கள் பின்பற்றும் ‘நடை’யைக் கூர்ந்து கவனிப்பேன்.
‘பிழையின்றி தமிழ் பேச வேண்டும்’ என்பதை என் நோக்கங்களில் ஒன்றாக வைத்து இருந்தேன். தமிழ் அறிஞர்களின் கூட்டங்களுக்குச் சென்று உச்சரிப்புத் திறனை வளர்த்துக் கொண்டேன்.

‘தாய்மொழியாம் தமிழ் மொழியை பிழையின்றி உச்சரித்து அழகாகப் பேசும் பாங்கு’ இவரை ஒரு நட்சத்திரமாக ஆக்கி உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் பகுதியில் தொழிலதிபர் திரு. எம்.ஜி.முத்து அவர்களின் பிறந்த தின விழாவை கொண்டாடினர். அதையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்படி நண்பர்கள் அழைத்து, மேடையில் ஏற்றிவிட்டனர். நான் எதிர் பார்க்கவே இல்லை. கையில் ‘மைக்’, எதிரில் பெருங்கூட்டம். இப்படித்தான் என் வர்ணனை தொடங்கியது. முன்னெச்சரிகையாக எவ்விதத் தயாரிப்பும் இல்லாத நிலையில் இயல்பாக பேசினேன். முடிந்தவரை பிறமொழி கலப்புவராமல் பார்த்துக் கொண்டேன்.

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல கபடி வீரர் ‘கோல்டு ராஜேந்திரன்’, நிகழ்ச்சி முடிந்ததும் என்னைப் பாராட்டினார்.. தொடர்ந்து அவருடைய பரிந்துரையின்பேரில், கபடிப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளராகப் பணியாற்ற வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் மீனவ பகுதியில் இளைஞர்கள் அனைவரும் மாலையில் கபடி விளையாடுவர். இதற்காகவே கபடி மைதானம் ஒன்றை உருவாக்கிப் பராமரித்து வந்தோம். பள்ளிப் பருவத்தில் இருந்தே, நானும் கபடி விளையாடியதால் அதன் நுணுக்கங்களை அறிவேன்.. மாநில-மாவட்ட அளவிலான கபடிப் போட்டிகள் எங்கு நடந்தாலும் சென்று பார்த்துவிடுவேன். இந்த அனுபவம், போட்டிகளை தொகுத்து வழங்கிய சமயத்தில் மிகவும் உதவியாக இருந்தது.

போட்டியைப் பார்க்க வரும் பார்வையாளர்கள், விளையாட்டு விறுவிறுப்பாக இருந்தால்தான் இருக்கையில் அமர்ந்திருப்பார்கள். அவர்களை அங்கேயே ஆர்வத்துடன் அமர வைப்பதில் வர்ணனையாளர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

சொல்பிரயோகம் மட்டுமே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஒருவருக்கு பலம் சேர்க்காது. களம் காணும் வீரர் ஒவ்வொருவரின் பின்னணியையும், அவருடைய கடந்த கால சாதனையையும் நான் அறிந்து கொள்வேன். உரிய தருணத்தில் அதை வெளிப்படுத்திப் பேசுவேன். இந்த அணுகுமுறையை வீரர்களும், பார்வையாளர்களும் பெரிதும் விரும்புவர். என் பேச்சின் விளைவாக மந்தமான விளையாட்டு பல சமயங்களில் சூடு பிடித்து பொது மக்களைக் குதூகலப்படுத்தி இருக்கிறது.

விளையாட்டு வர்ணனையாளர், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் போன்ற தொழிலில் இருப்போருக்கு உச்சரிப்புத்திறன் கூடிய பேச்சாற்றலுடன் சமய சந்தர்ப்பத் திற்கு ஏற்ப பேசும் திறனும் இருக்க வேண்டும். ஒரு சமயம், ஆண், பெண் இருபாலரும் பங்கு கொண்ட கபடி போட்டி நடந்து கொண்டிருந்தது.

ஒரே சமயத்தில் அருகருகே இருந்த மைதானங்களில் போட்டி நடந்தது. ஆண்களுக்கான போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் குழு ஒன்று திடீரென எழுந்து பெண்கள் விளையாடும் திடலுக்குச் சென்று அமர்ந்தது. ஒலி பெருக்கியில் பேசிக்கொண்டிருந்த நான், ‘காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு’ என்று அறிவித்து, இந்தத் தகவலைக் கூறியதும் இரண்டு மைதானங்களிலும் எழுந்த சிரிப்பொலி அடங்க நீண்ட நேரம் பிடித்தது.

தமிழர் திருநாளையொட்டி திராவிடர் கழகம் நடத்திய ஏராளமான கபடிப் போட்டிகளுக்கு அறிவிப்பாளராக நான் பணியாற்றியுள்ளேன்.

தமிழர் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களிடம் பலமுறை பெற்ற பாராட்டுதல்களை பெரும்பேறாக கருதுகிறேன். மணியம்மையார் பல்கலைக் கழகம் சார்பில் தஞ்சையில் மாநில அளவிலான கபடிப் போட்டி 5 நாள் நடந்தது. இறுதிநாள் நிகழ்ச்சியில் 65,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். என் வர்ணனை கலந்த உரையைப் பாராட்டி பார்வையாளர்கள் தரப்பில் இருந்து மட்டும் ரூ.30,000 பரிசு அளிக்கப்பட்டது.

இதேபோல சேலத்தில் நடந்த வீரபாண்டியார் பிறந்த நாள் நிகழ்ச்சியிலும் அரங்கில் இருந்த 12,000 பார்வையாளர்களின் ஒட்டு மொத்த பாராட்டைப் பெற்றேன்.
சென்னையில் நடந்த கபடிப் போட்டி ஒன்றைத் தொடங்கி வைத்த தினத்தந்தி அதிபர் மறைந்த திரு. பா. சிவந்தி ஆதித்தன், என்னை பாராட்டி பேசியது மறக்க முடியாத அனுபவம். இதேபோல, உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு. ஏ.ஆர். லட்சு மணனும் என்னுடைய தமிழ் உச்சரிப்புத் திறனை பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்.

தந்தை பெரியார், சி.பா.ஆதித்தனார், கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நூல்கள் தான் எனக்கு மெருகூட்டின என்றால் மிகையில்லை.

தமிழர்களின் விளையாட்டான கபடி, ஒரு தாய் விளையாட்டு ஆகும். உலகில் விளையாடப்படும் 282 விளையாட்டுகளில் எவ்விதமான உபகரணமும் இல்லாமல் விளையாடும் ஒரே விளையாட்டு கபடிதான். இதில், கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ், பாக்சிங் ஆகிய மூன்று விளையாட்டுகளும் அடக்கம். உடல் நலத்திற்கு பெரிதும் உதவும் ‘மூச்சுப் பயிற்சி’யும் இதில் அடங்கும்.TH17_RAJESH_2063054f
இப்படிப்பட்ட அற்புதமான விளையாட்டுக்கு உலக அளவில் நல்ல எதிர்காலம் உள்ளது. பல்வேறு வெளிநாடுகளுக்கு நம்ம ஊர் முன்னாள் வீரர்கள் பயிற்சி கொடுக்க செல்கிறார்கள். ஆனால் நம் அரசுகள்தான் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை, கபடிக்கு கொடுப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். சிறந்த கபடி வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

தமிழர்களின் விளையாட்டான கபடி, ஒரு தாய் விளையாட்டு ஆகும். உலகில் விளையாடப்படும் 282 விளையாட்டுகளில் எவ்விதமான உபகரணமும் இல்லாமல் விளையாடும் ஒரே விளையாட்டு கபடிதான். இதில், கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ், பாக்சிங் ஆகிய மூன்று விளையாட்டுகளும் அடக்கம்.

எந்த சூழலிலும் நிலை குலையாமல் இருப்பதற்கான பண்பை எனக்கு சொல்லித் தந்த என் தந்தையார் கவிஞர் தெய்வசிகாமணியும், என் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகத் திகழும் பிரபல கபடி வீரர்கள் கோல்டு ராஜேந்திரன், பாஸ்கர் ஆகியோரும் நெஞ்சில் நிறைந்தவர்கள். இத்துறையில் மேலும் சாதிக்கும் நோக்கில், மேலும் புதியதைக் கற்கவும், உழைக்கவும் விரும்புகிறேன். தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஆகவும் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறேன்” என்றார் திரு. தெ. மோகனவேலன். (984070 9599)

– ம.வி.ராஜதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here