Latest Posts

மறுபக்கம்

- Advertisement -

அந்த உணவகத்தின் உரிமையாளர் மலர்முகிலனுக்கு, உணவகத்தில் இருந்து தொலைபேசி வந்தது. பேசியவர் தலைமை சமையல்காரர்.

”சார், நீங்க வச்சிருக்கிற சூப்பர்வைசர், எங்களை எல்லாம் மோசமாக நடத்துகிறார், அவர் இருந்தா எங்களால வேலை செய்ய முடி யாது, நாங்க எல்லாம் வேலையை விட்டுப் போறோம்.”
”நீங்க எல்லாம் என்றால்..?”
”அவரைத் தவிர மற்ற எல்லோரும்..!”
”ஒருவரை வேலைக்கு சேர்ப்பதும், வேலையை விட்டு அனுப்புவதும் என்னுடைய வேலை, அதை நீங்கள் சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?
”நேற்று, பணியாளர் ஒரு வரை இவர் அவமானப்படுத்தியதால் அது கைகலப்பு வரை போய் விட்டது. அவரை இவர் அடிக்க, இவரை அவர் அடிக்க.. வாடிக்கையாளர்கள் நடுவே உங்கள் ஓட்டலுக்கே கெட்ட பெயர் ஏற்படுவது மாதிரி ஆகிவிட்டது. எங்களையும் அவர் இப்படி நடத்த மாட்டார் என்பதற்கு எந்தவிதமான உறுதியும் இல்லை. அதனால்தான் இந்த முடிவை நாங்கள் எல்லோரும் சேர்ந்து எடுக்க வேண்டி இருக்கிறது. ஒன்று அவரை வைத்துக் கொள்ளுங்கள், அல்லது எங்களை வைத்துக் கொள்ளுங்கள்.”
”சரி, நான் சிறிது நேரம் கழித்துப் பேசுகிறேன்”

மலர் முகிலனுக்கு வேறு தொழில் இருக்கின்றது. கூடுதலாக ஒரு உணவகமும் நடத்தலாம் என்ற விருப்பத்துடன் அந்த உணவகத்தைத் தொடங்கி இருந்தார். திறமையான ஆட்களைத் தேர்வு செய்து போட்டிருந்தார். எல்லா உணவுப் பொருட்களும் சுவையாக இருந்தன. வாடிக்கையாளர்களின் வருகை படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருந்தது. மளிகைப் பொருட்கள் முதல் காய்கறிகள் வரை அத்தனையையும் முதல் தரமாக வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மறுபடியும் பயன்படுத்தக் கூடாது என்று உறுதியுடன் கூறி இருந்தார்.

பத்திரிகையில் போட்டிருந்த ஆட்கள் தேவை விளம்பரத்தைப் பார்த்து விட்டு வந்தவர்தான் அந்த சூப்பர்வைசர் சுதந்திரம். ஓட்டல் பணிக்கு என்று முதன்முதலாக அவரைத்தான் பணிக்கு எடுத்தார்.

நிறைய உணவகங்களில் பணிபுரிந்த அனுபவம் இருந்தது. நகரில் உள்ள ஏதாவது ஒரு உணவகத்தின் பெயரைச் சொன்னால் போதும், நான் அங்கே இருந்திருக்கிறேன். அந்த முதலாளிக்கு என்மீது பிரியம் அதிகம். குடும்பச் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து அங்கே இருந்து விலக வேண்டியதாகி விட் டது” என்று கூறுவதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

உணவகத்துக்கு வேண்டிய தளவாடச் சாமான்கள் முதல் அத்தனைக்கும் அவரை நம்பி செயல்பட்டார். வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது கூட அவர் ஆலோசனையுடனேயே எடுத்தார்.

திடீரென்று தொலைபேசியில் அழைப்பார். ”சார், இவர் சரியாக இல்லை, நாணயமாக இல்லை, எல்லா உணவுகளுக்கும் பில் போடுவது இல்லை, அனுப்பிவிடலாம்” என்பார். அல்லது சமையல் பொருட்களை இவர் நிறைய வீணடிக்கிறார், குடித்து விட்டு சமையலறைக்குள் வருகிறார் என்பார். ஓட்டல் தொழிலில் நிரம்ப அனுபவம் பெற்றவர் சொல்வது தவறாகவா இருக்குமா? என்ற எண்ணத்துடன், இவரும் சரி சொல்வார்.

அப்படி ஒருவரை அனுப்ப நேரும் போது, அவருக்கு உரிய ஊதியத்தை உடனே கொடுத்து கனிவாகப் பேசி அனுப்புங்கள் என்று மலர்முகிலன் சொன்னதை, அப்படியே செயல்படுத்தி இருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டு இருக்காது. செயல்படுத்தாமல் நடந்த தால்தான் இந்த தொல்லை ஏற்பட்டு இருந்தது.

தன்னுடைய ஊதியத்துக்காக காலை முதல் காத்துக் கொண்டிருந்தவரை சற்றும் மதிக்காமல் மாலை வரை இழுத்தடித்ததில் அவர் கடுமையான கோபத்துக்கு ஆளாகி இவரை திட்ட, பதிலுக்கு இவர் திட்ட கை கலப்பு வரை போயிருக்கிறது.
பணியாளர்கள் அத்தனை பேரும் போய் விட்டால் எப்படி உணவகத்தை நடத்துவது என்ற கவலையுடன் சுதந்திரத்தை தொலைபேசியில் அழைத்தார்.

தொலைபேசிக்காக காத்திருந்தது போல, அவர் எடுத்த உடனேயே, ”அந்த ஆள் என்னை அடிக்க வருகிறான், நம்ம ஆட்கள் அதைத் தடுக்க வரவில்லை. கேட்டதற்கு நாங்கள் எல்லாம் வேலையை விட்டுப் போகிறோம் என்கிறார்கள். இவங்களை நம்பியா சார் நாம ஓட்டல் தொடங்கினோம். அவங்க போனா அடுத்த நாளே எல்லா வேலைக்கும் நான் ஆட்களைக் கொண்டு வருவேன்…” என்று படபடத்தார்.

உரிமையாளருக்கும், ஒருவரை வேலையை விட்டு அனுப்புங்கள் அப்போது தான் நாங்கள் வேலைக்கு வருவோம் என்று சொல்வதை ஏற்க முடியவில்லை. மேலும் சுதந்திரம் தொடக்கம் முதலே கூடவே இருக்கிறார். பெருக்குவது முதல் மாப் போடுவது வரை எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டுச் செய்பவர். கொஞ்சமும் அதைப் பற்றி நினைக்காமல், நன்றி இல்லாமல் எப்படி அவரை போகச் சொல்வது என்று சிந்தித்தவர், அவரை வேலையை விட்டு போகச் சொல்ல, வேண்டாம் என்று முடிவு எடுத்தார்.

மற்ற பணியாளர்களிடம், ”இனி இவ்வாறு நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம். நீங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கூறியதற்கு அவர்கள் ஒட்டு மொத்தமாக மறுத்து விட்டு, சம்பளத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். அவர்களில் இருவர் மட்டும் சற்று யோசனைக்குப் பின் நாங்கள் வேலை பார்க்கிறோம் என்று தங்கினார்கள்.

அவர்களையும், பிறகு அவசரத்துக்கு கிடைத்தவர்களையும் வைத்துக்கொண்டு ஓட்டல் நடந்தது. வாடிக்கையாளர்களின் வருகை குறையத் தொடங்கியது. புதிய ஆட்களைப் போட்டு முயற்சித்ததில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது.

ஓட்டல் தொழிலில் ஆட்கள் நிர்வாகம் எந்த அளவுக்கு முதன்மையானது என்பதும், நல்ல ஆட்கள் கிடைப்பது எவ்வளவு சிரமம் என்பது உரிமையாளருக்குப் புரிந்தது. தான் நேரடியாக இருந்து பார்க்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் அந்த தொழிலில் அனுபவம் உள்ள சுதந்திரத்தை நம்பி செயல்பட்டுக் கொண்டு இருந்தார்.

அவர் சிந்திக்க மறந்த ஒன்று, பார்க்கும் ஓட்டலில் எல்லாம் நான் இருந்தேன் என்று சொல்கிறார், ஏன் இத்தனை ஓட்டல்களுக்கு மாறும் நிலை அவருக்கு ஏற்பட்டது? இவர் சரியான ஆளாக இருந்தால் எப்படி அவர்கள் இவரை விட்டு இருப்பார்கள்? என்று மட் டும் நினைக்க மறந்து விட்டிருந்தார்.

ஒரு தொழிலுக்கான அனுபவத்தை இரு வழிகளில் பெற முடியும். ஒரு வழி, அத்தகைய தொழில் நிறுவனத்தில் குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து அனுபவம் பெறுவது; இன்னொரு வழி, அந்த தொழிலைத் தொடங்கி தானே செலவழித்து அனுபவம் பெறுவது. இந்த இரண்டாவது வழியில் மலர்முகிலன், ஓட்டல் தொழில் பற்றிய அனுபவ அறிவைப் பெற்றுக் கொண்டு இருந்தார்.

அவர் முதன்மையாக நடத்திக் கொண்டிருந்த தொழில், வேறு ஒரு நிறுவனத்தில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்ற பின் தொடங்கியது. அதனால் அவரால் அந்த தொழிலை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

ஓட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர வேறு அனுபவமும் இல்லாமல் தொடங்கிய இந்த தொழிலிலும் வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டு இருந்தார்.

ஆனால் தொடர்ந்து, ஆட்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
பொதுவாக இந்த உணவகப் பணிகளுக்கு வருகிறவர்கள், பெரும்பாலும் குடிப்பவர்களாக இருந்தார்கள். திடீர் திடீர் என்று வேலையை விட்டுப் போகிறவர்களாக இருந்தார்கள். அப்படிப் போகாதவர்களை சுதந்திரம் அவர்களுடன் சண்டை போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார். தான் உணவகத்தின் நலனுக்காகவே இப்படிச் செய்வதாகக் காட்டிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறது? நல்ல திறமையாளர்களை சுதந்திரம் ஏன் விரட்டிக் கொண்டு இருக்கிறார்? பெரிய கேள்வியாக உரிமையாளர் மனதில் எழுந்தது.

ஒரு தொழில் முனைவர் காலத்துக்கும் ஒரே மாதிரி சிந்தனையில் இருக்க முடியாது. அவ்வப்போது எழும் சூழ்நிலைகளை மனதுக்குள் போட்டு ஆய்வு செய்து கொண்டுதானே இருப்பார்? பொதுவாக தொழில் முனைவோருக்கு ஏற்படும் சிக்கல்களில் ஒன்றுதான் இது என்பது அவருக்கு புரிந்தே இருந்தது.
திடீரென்று, அன்றும் அதே போல ஒரு தொலைபேசி.

”நாங்கள் எல்லாம் வேலையைவிட்டுப் போறோம்”
”ஏங்க? என்ன ஆச்சு?”
”ஒன்று அவரை வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது எங்களை வைத்துக் கொள்ளுங்கள்”
மீண்டும் முதல்லே இருந்தா..?
அதைத் தொடர்ந்து உணவகத்தில் இருந்து வெயிட் டர் ஒருவரின் தொலைபேசி வந்தது.
”சார், இங்கே எல்லாம் வெளியே உட்கார்ந்து கொண்டு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்க. சுதந்திரத்தை திட்டிக்கிட்டு இருக்காங்க..”
அடுத்ததாக இவர் எதிர் பார்த்தபடியே சுதந்திரம் தொலைபேசி வந்தது.
”என் செல்போனை பிடுங்கிக்கிட்டாங்க. நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுக்கப்போறேன்..”

மலர்முகிலன், இது எது வரை போகுமோ போகட்டும் என்று காத்திருந்தார்.
காவல் நிலையத்துக்கு போகிறேன் என்று போன சுதந்திரம் பாதியிலே திரும்பி வந்து விட்டதாக தகவல் கிடைத்தது.

சரி, இனிமேலும் நாம் நேரடியாக களத்தில் இறங்காமல் இருக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட மலர்முகிலன் உடனே உணவகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். பொதுவாக இத்தகைய சூழ்நிலைகளை எல்லாம், நம்முடைய திறமையை வளர்த்துக் கொள்ள கிடைக்கும் வாய்ப்பாகக் கருதுபவர் என்பதால் அவ்வளவாக அலட்டிக் கொள்ளாமல் சென்றார்.
அங்கே போனதும், சுதந்திரமும், மற்றவர்களும் ஒருவர் மீது ஒருவர் காட்டமாக இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலை வருவது இது இரண்டாவது முறை. என்ன முடிவு எடுக்கலாம்? முடிவு எடுப்பதை கொஞ்சம் தள்ளிப் போடலாம் என்று கருதினார் மலர்முகிலன்.
முதலில் அவருடைய செல்போனை அவரிடம் கொடுங்கள்.
செல்போனை சுதந்திரத்திடம் கொடுத்தார்கள்.

”சுதந்திரம் நீங்க நம்முடைய இன்னொரு அலுவலகத்தில் இரண்டு நாட்கள் தங்கி இருங்கள்” என்று அனுப்பி வைத்தார். அங்கே இருந்தவர்களிடம் நீங்கள் போய் வேலையைப் பாருங்கள் என்று அனுப்பி வைத்தார்.
மறுநாள், சுதந்திரம், தொலைபேசியில் அழைத்து ”என்னுடைய செல்போனில் இருந்த மெமரி கார்டு ஒன்றை அவர்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள். வாங்கிக் கொடுங்கள்” என்றார்.

அதன் பிறகுதான் அந்த திருப்பம்.
மெமரி கார்டை எடுத்தவர்கள், அதை மலர்முகிலனிடம் கொடுத்து, ”நிச்சயமா நீங்க இதை கம்ப்யூட்டர்ல போட்டுப் பார்த்து விட்டுத்தான் அவரிடம் கொடுக்க வேண்டும்” என்றார்கள்.

“இன்னொருவர் மெமரி கார்டை நாம் போட்டுப் பார்ப்பது நாகரிகம் இல்லையே”
”இல்லை. இதை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். உங்களுக்குத் தெரிய வேண்டிய பல செய்திகள் இதில் உள்ளன. நம்முடைய உணவகத்தின் வளர்ச்சி தொடர்பானவை உள்ளன” என்றனர்.

மெமரி கார்டில் உள்ள வற்றை கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்தார். காவல் நிலையத்துக்குப் புறப்பட்டுப் போனவர் ஏன் பாதியிலேயே திரும்பி வந்தார் என்பதற்கான காரணம் புரிந்தது.

உணவகத்தில் பணிபுரிந்த சில பெண்களின் படங்கள் பதிந்து வைக்கப்பட்டு இருந்தன. அவருக்கு வரும் செல்பேசி அழைப்புகளை பதியும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது.

உணவகத்தில் பணிபுரிந்த ஒரு பெண் பெயரில் ஒரு ஃபோல்டரையே போட்டு அவருடன் பேசியது அத்தனையையும் பதிந்து வைத்து இருந்தார்.

இன்னொரு ஆடியோவில், ”ஓனர் இந்த வாட்டி விளம்பரத்துல அவருடைய நம்பரையே கொடுத்து விட்டார். அதனால உங்க ஒட்டலுக்கு தேவையான ஆட்களை என்னால எடுத்து அனுப்ப முடியவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்க. நான் காய் நகர்த்துறேன்..”- இதைக் கேட்டதும் மலர்முகிலனுக்கு வியப்பாக இருந்தது.

சில ஆட்கள் தேவை விளம்பரங்களில் சுதந்திரத்தின் செல்பேசி எண்ணைக் கொடுத்து, வேலை கேட்பவர்களிடம் பேசச் சொல்லி இருந்தார். இவர் அந்த விளம்பரங்களைப் பார்த்து தொடர்பு கொண்டவர்களை இவருக்குத் தெரிந்த வேறு ஓட்டலுக்கு அனுப்பி வைத்து இருப்பது இதன் மூலம் தெரிந்தது.

இன்னொரு ஆடியோவில், ஒரு பெண்ணிடம், ”இது என்ன மயிர் வேலை. நான் வேறு ஒரு காரணத்துக்காக இங்கே வேலை செய்து கொண்டு இருக்கிறேன்” என்று கூறுகிறார்.. அது என்ன காரணமாக இருக்கும்? மலர்முகிலன் பல கோணங்களில் சிந்திக்கத் தொடங்குகிறார். இப்படியே பல வில்லத்தனமான பேச்சு உள்ள ஆடியோ ஃபைல்கள்.

மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக காட்சி அளித்த சுதந்திரம், என்னமா தந்திரம் செய்து கொண்டிருக்கிறார்? கெட்டிக்காரன் புளுகை எட்டு நாளில் தெரிந்து விடும் என்று முன்னோர் சொல்லி இருக்கிறார்கள். இந்த தந்திரத்தின் புளுகு விரைவிலேயே தெரியாமலா போய்விடும்?
காத்திருந்தார், மலர்முகிலன்.
மறுநாள்..
சுதந்திரம், மலர்முகிலனைச் சந்திக்க நேரம் கேட்டு, குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க வந்தார்.
மெமரி கார்டு செய்திகள் பற்றி எதுவும் கேட்காமல் சுதந்திரத்திடன் இனிமையாகப் பேசிக் கொண்டு இருந்தார்.

”என்ன சுதந்திரம்? தொடர்ந்து இப்படி சிக்கலாகவே இருக்கே, என்ன செய்யலாம்?”
”உங்க கிட்ட சொல்ல தயக்கமா இருக்கு…”
”சும்மா சொல்லுங்க..”
”அனுபவம் இல்லாம நீங்க இந்த ஓட்டல் தொழில்ல இறங்கிட்டு கஷ்டப்படுறீங்க. நான் வேணும்னா எடுத்து நடத்தட்டுமா? உங்களுக்கு மாதம் ஒரு தொகை கொடு த்து விடுகிறேன். அதுக்காக அதிகமா கேட்டா என்னால கொடுக்க முடியாது…”
ஏதோ மலர்முகிலன் ஒரு முடிவுக்கு வந்து விட்டதைப் போலவே எண்ணிப் பேசினார், சுதந்திரம்.

இப்போது புரிந்து விட் டது, சுதந்திரத்தின் தந்திரம்.
ஆட்களை எல்லாம் ஏன் விரட்டிக் கொண்டிருந்தார் என்பதற்கான காரணமும் புரிந்தது.
என்னமா சிந்திக்கிறாங்க..- வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர், கணினியை இயக்கினார். ஸ்பீக்கரில் சுதந்திரத்தின் குரல் தெளிவாக ஒலித்தது, இது என்ன மயிர் வேலை….

– நேர்மன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news