மகிழ்ச்சி

“என்னப்பா இரகசியம், உன் முகம் எப்பவும் மகிழ்ச்சியா மலர்ச்சியா இருக்கு” என்று கேட்பவர்களுக்கு மத்தியில், சிலர் ஒனக்கு பிரச்சனையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கியே” என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்… அதே புன்னகைதான்.

அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் இரகுராமன் தன் வேலையில் நேரத்திற்கு வந்து நேர்த்தியாக முடித்து விட்டு போவது அவனுக்கு பழகிப்போன ஒன்று. அப்படிப்பட்டவன்தான் மாதத்தில் இரண்டு நாள் திடீரென்று லீவு போட்டு விட்டு போய்விடுவான். எங்கு போகிறான் என்பது அவனுக்கே வெளிச்சம். யாரிடமும் மூச்சு விடுவதில்லை.

இவனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.. புதிய மேனேஜர் வரப்போவதாய் பேசிக் கொண்டனர். அவரும் சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்து போனது. அவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் மாதா மாதம் தொழிலாளிகளின் கூட்டம் நடை பெறும் என்றும், அதில் அவர்களின் பணித் தரம் பற்றி ஆய்விடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதுபோலவே, அன்றும் கூட்டம் நடை பெற்றது. அதில் ஒவ்வொரு தொழிலாளியாய் முடித்து… இரகுராமன் முறை வரும் பொழுது…
“என்ன இரகுராமன், வேலையெல்லாம் நல்லா செய்யறீங்க, எப்பவும் மகிழ்ச்சியா இருக்கீங்க… ஆனால் மாசாமாசம் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு காணாம போயிடுறீங்களே” அதுதான் பிரச்சனையா இருக்கு, எனிதிங் பிராப்ளம்” கடுகடுத்த முகத்துடன் கேட்டார் மேனேஜர்.

பிராப்ளம் எல்லாம் இல்ல சார், “ஒரு அநாதை இல்லத்துக்கு போய் அங்கே இருக்கிற ரெண்டு பசங்களை வெளியே கூட்டிட்டு போய் வயிறார சாப்பிட வைச்சு, டிரஸ் வாங்கிக் கொடுத்து ஏதாவது ஒரு சுற்றுலா இடத்திற்கு கூட்டிப்போய் அவர்களின் மகிழ்ச்சியைப் பார்க்கிறதுக்குதான் அந்த ரெண்டுநாள் லீவு. அந்த மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாக டானிக். வேற எதுக்கு மில்ல” என்றார்.

மேனேஜரின் கடுகடுத்த முகத்தில் ஒரு புன்னகை படர்ந்தது..

அவன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிக்கும், மலர்ச்சிக்குமான இரகசியம் எதுவென்று அன்றுதான் எல்லோருக்கும் புரிந்தது.

– கே.அசோகன், திருவள்ளூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here