புதிய கள ஆய்வினால் பயிற்சித் தொழிலை புத்தாக்கம் செய்தோம்!

சிப் சிஸ்டம் திரு எம்.கார்த்திகேயன்

நாற்பத்தி இரண்டு சிறு மற்றும் குறுந் தொழில்கள் செய்வதற்கான பயிற்சியைத் தருகிறது, சிப் சிஸ்டம் நிறுவனம். இந்த நிறுவனம், சென்னை, மேற்கு மாம்பலத்தை முதன்மையிடமாக கொண்டு                 செயல்பட்டு வருகிறது. திருச்சியில் ஒரு கிளையையும் தொடங்கியுள்ளது.

அண்மையில் புதிதாக தொடங்கியுள்ள தொழில் பயிற்சிகளைப் பற்றி அதன் தொழில் நுட்ப இயக்குநர் திரு எம். கார்த்திகேயன் கூறியதாவது;
“செல்பேசி பழுது பார்த்தல், கணினி மென்பொருள், வன்பொருள் என மின்னணு பொருட்கள் சார்ந்த பயிற்சிகளை பல ஆண்டுகள் கொடுத்து வந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கற்றுச் சென்றனர்.

தற்போது பல்துறை பயிற்சி கொடுக்கும் நிறுவனங்கள் அதிகரித்துவிட்டதால், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சேர்க்கையும் குறைந்துவிட்டது.

chip-system-chennai
சிப் சிஸ்டம் இயக்குநர் திரு எம். கார்த்திகேயன்

நிறுவனத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த எங்களுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. அந்த காலகட்டத்தில் எங்கள் நிறுவன ஊழியரும், நானும் கள ஆய்வு செய்தோம். அந்தக் கள ஆய்வில் புதிய பயிற்சிக்கான சிந்தனை கிடைத்தது.

கள ஆய்வு என்ன? ஒரு மாணவன் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சியை கற்றுக் கொள்கிறான். ஆனால், அவன் அதே துறையில் வேலைக்கு செல்கிறானா? என்றால் இல்லை. அதே நேரத்தில், நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கிறது. ஆனால், அந்த வேலையைச் செய்ய தகுதியான ஆட்கள் கிடைக்கின்றார்களா? என்றால் அதுவும் இல்லை. ஆக, வேலை வாய்ப்பும் இருக்கிறது. வேலை கிடைக்கவில்லை என்கிற இளைஞர்களும் இருக்கிறார்கள். இவைகளை ஒன்றிணைத்தால் என்ன? என்று தோன்றியது.

அதற்காக, முதல் கட்டமாக பல்வேறு பெரிய, நடுத்தர, சிறிய இடங்களுக்கு நேரடியாக சென்று, எந்த மாதிரியான இளைஞர்கள் உங்களுக்குத் தேவை. அதற்கான பயிற்சியை நாங்கள் கொடுத்து அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லி ஒப்பந்தம் செய்தோம்.
எந்த வேலைக்கு ஆட்கள் தேவையோ, அந்த வேலைக்கு பயிற்சி கொடுத்து வேலை கொடுப்பதாக விளம்பரம் செய்தோம். இப்போது, தொழில் நுட்ப பயிற்சி கற்றவர்கள் வேலைக்கான பயிற்சிக்காக எங்களிடம் வந்து சேர்ந்தனர். அந்த வேலை வாய்ப்பு பெற வரும் இளைஞர்களிடம் பயிற்சிக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டோம். வேலை வாங்கிக் கொடுப்பதற்கான கட்டணத்தைப் பெறவில்லை. இதேபோல், பல துறைகளுக்கு தகுதியானவர்களை உருவாக்கிக் கொடுக்கும் பயிற்சியைத் தருகிறோம்.

அதேபோல், இன்னொரு வகையான இளைஞர்களும் அல்லாடிக் கொண்டிருப்பதாக கள ஆய்வில் கண்டோம். அதாவது, குறைந்த முதலீட்டில் தொழில் ஆரம்பிக்கவும், அதற்கான கடன் பெறவும் வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி? என்று சிந்தித்ததின் விளைவாக, சில வங்கி மேலாளர்களிடம் பேசினோம்.
அவர்கள் கூறும் குற்றச்சாட்டு, ‘இளைஞர்களிடம் ஆர்வம் இருக்கிறது. ஆனால், என்னென்ன ஆவணங்கள் சரியாக கொடுத்தால் நிதி கிடைக்கும் என்கிற விழிப்புணர்வு இல்லை. அதனால், பலருடைய கடன் கேட்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன” என்றார்.

அதற்கான பயிற்சி கொடுத்தால் நிதி வழங்கும் வாய்ப்பு தருவீர்களா? என்று கேட்டோம். அதற்கு சில வங்கி மேலாளர்கள், “உங்களுடைய பயிற்சி சான்றிதழும், சரியான ஆவணங்களும் இருந்தால் உடனே நிதி வழங்க தயாராக இருக்கிறோம்” என்று உறுதி அளித்தனர். அதன்படி சுய தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து கடன் உதவி பெற்றுத் தருகிறோம்.

இவை தவிர, புதியதாக சிசிடிவி (CCTV) பொறுத்துவதற்கான பயிற்சி, ஒளிப்படம் மற்றும் வீடியோ கருவிகள் பழுது பார்ப்பு மற்றும் கையாளுவதற்கான பயிற்சி மற்றும் சூரிய மின்சாரம் (Solar power) தயாரிப்பதற் கான பயிற்சி எனப் புதுப் புது வகையான பயிற்சிகளை அறிமுகப்படுத்தி பயிற்சி நிறுவ னத்திற்கு புத்துயிர் அளித்துள்ளோம்.
இவை தவிர, மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (MSME) நிறுவனத் துடன் மத்திய அரசின் சான்றிதழுடன் LED, LCD, TV, Monitor, Printer refilling மற்றும் ஃபோட்டோ காப்பியர் (Xerox machine) பழுது பார்த்தல் ஆகியவற்றுக்கான பயிற்சிகளைக் கொடுத்து வருகிறோம்.

இதில் ஃபோட்டோ காப்பியர் எந்திரம் பழுது பார்ப்பதற்கான பயிற்சிக்கு அதிகம் பேர் வருகின்றனர். காரணம் ஒரு எந்திரத்தில் ஒரு நாளைக்கு ரூ.250 அல்லது 300 வரை லாபம் சம்பாதிக்கிறார்கள். சிறு பழுது ஏற்பட்டால்கூட, அதற்கான பழுது பார்ப்பாளர் ரூ.250 சர்வீஸ் சார்ஜாக வாங்கிச் செல்கின்றனர். அந்தச் சிறிய பழுது பார்ப்பை நாம் தெரிந்து கொண்டால், அதற்கான சர்வீஸ் சார்ஜ் இழக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் கற்றுக் கொள்ள வருகின்றனர்.

அடுத்ததாக, வீட்டிலிருந்தே தொழில் செய்யக்கூடிய ஆன்லைன் சேவை பற்றியும் பயிற்சி தருகிறோம். பேருந்து, தொடர் வண்டி டிக்கெட் புக்கிங், மின்கட்டணம், செல்பேசி ரீசார்ஜ், DTH ரீசார்ஜ் செய்வது எப்படி? போன்ற பயிற்சியையும் சொல்லித் தருகிறோம். இந்தப் பயிற்சியை சில இல்லத்தரசிகள் தங்களுடைய சொந்தத் தேவைக்காக கற்றுச் செல்கின்றனர். ஆம், புதிய கள ஆய்வின் மூலமாக மிகுந்த தன்னம்பிக்கையுடன் பயிற்சித் தொழிலை சிறப்பாக செய்து வருகிறோம்” என்றார் திரு. எம்.கார்த்திகேயன்.

– ஆ.வீ.முத்துப்பாண்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here