செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா?
படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இரண்டு விதங்களில் இறக்குமதி செய்யப்படுகிறது. புத்தம் புதிய பொறிகளை விற்கும் நிறுவனங்களிடம் இருந்து அப்படியே இறக்குமதி செய்து அதை விற்பனை செய்வது ஒரு விதம். மற்றொரு விதம், வெளிநாடுகளில் பயன்படுத்திய படிப்பொறிகளை இறக்குமதி செய்து அதை சீர் செய்து (ரீகண்டிஷன்) விற்பனை செய்வது ஆகும்.
இத்தொழிலில் படிப்பொறி தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து கடைக்காரர்களை சென்று அடைவதற்குள் அது பலரைக் கடந்து வருகிறது. அப்படி கடைகளிலோ அல்லது நிறுவனங்களிலோ வாங்கப்படும் படிப்பொறிகளை இயக்க வைப்பதற்கு எத்தனை பேர்கள் தேவைப்படுகிறார்களோ, அந்த அளவுக்கு வேலை வாய்ப்பு உள்ள தொழிலாகவும் இந்த தொழில் உள்ளது.
பொதுவாக ஆறு நிலைகளைக் கடந்துதான் ஒரு படிப்பொறி நமது கடையையோ அல்லது அலுவலகத்தையோ அடைகிறது. அவை, சப்ளையர்; இறக்குமதியாளர்; மொத்த விற்பனையாளர்: துணை விற்பனையாளர்: டெக்னீஷியன்; போர்ட் சர்வீஸ் எஞ்சினியர். – நமது நாட்டில் புழங்குகின்ற எந்திரங்கள் பெரும்பாலானவை, வெளிநாடுகளில் பயன் படுத்தப்பட்டவைதான். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், இங்கே வந்ததும் பழுது நீக்குதல், தேவை எனில் உறுப்புகளை மாற்றுதல், ஸ்ப்ரே பெயின்ட் செய்தல் என சீரமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
அமெரிக்காவில் இருந்து நேரடியாக இறக்குமதியாகும் போட்டோ காப்பியர் எந்திரங்களை வாங்கினால் அவ்வளவாக தொல்லை இல்லாமல் கடை நடத்தலாம். பயன்படுத்தப்பட்ட அமெரிக்க எத்திரங்களின் மீதமுள்ள பயன்பாட்டுக் கணக்கை 80% முதல் 85% வரை என்று கணித்து இருக்கிறார்கள்.
Also read: ஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது
கொரியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றின் தரம் தொழில் முனைவோருக்கு பயன்படும்படி இல்லை. கொரியன் பொறிகளுக்கு பயன்பாட்டுக் கணக்கே இல்லை. அவற்றுக்கும் இந்தியாவில் பயன்படுத்தி, மீண்டும் மூன்றாம் முறையாக விற்கும் பொறிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
புதிய எந்திரங்களை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய டி.ஜிட்டல் அச்சு நிறுவனங்கள் வாங்குகின்றன. சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் டிஜிட்டல் பிரின்டர்களுக்கான வர்த்தகக் காட்சிகளில் பல புதிய போட்டோ காப்பியர்கள், டிஜிட்டல் பிரின்டர்கள் காட்சிக்கு வைக்கப்படும். இத்தகைய தொழில் காட்சிகளை தொழில் முனைவோர் தவறாமல் பார்வையிட வேண்டும். கொரானாவைத் தொடர்ந்து இத்தகைய காட்சிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. விரைவில் இத்தகைய காட்சிகளுக்கான் தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செராக்ஸ் கடைகள் என்று குறிப்படப்படும் போட்டோகாப்பி எடுக்கும் தொழில் ஊருக்கு ஊர் நிரம்பி வழிகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு விரைவாக ஊர்தோறும் நகரங்கள் தோறும் பரவி விட்ட தொழில், கூடவே கணினியும் வந்த பிறகு, அதுவரை தட்டச்சு செய்து கொண்டு இருந்தவர்களை உடனே நகலகங்களுக்கு கொண்டு வந்த தொழில் இது.
தற்போது மின்னஞ்சல்கள் வாயிலாக கடிதப் பரிமாற்றம் நடைபெறுவது அதிகரித்து வருவதால், இது ஓரளவுக்கு படி எடுத்துக் கொடுக்கும் நகலக தொழிலை பாதித்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தவிரவும் நகல் எடுக்கும், ஸ்கேன் செய்யும் வசதியுடன் லேசர் பிரின்டர்கள் வருவதாலும், இவையும் குறைந்த விலையில் கிடைப்பதாலும் அலுவலகங்கள் இத்தகைய அச்சுப் பொறிகளை வாங்கி வைத்துக் கொள்கின்றன, இதனால் அலுவலகங்களில் இருந்து படி எடுக்க வருவது குறைந்து விட்டது.
இதுபோன்ற காரணங்களால் நகலக தொழில் பின்னடைவைச் சந்தித்து வந்தாலும் அறவே வாய்ப்பு இல்லாமலும் போகவில்லை. நூறு குடும்பங்களுக்குக் குறையாமல் இருக்கும் பகுதிகளில் நகலாகத் தொழிலை ஒரு தொழில் முனைவோர் தாராளமாக தொடங்கலாம். பெரும்பாலும் மாணவர்களே அதிகமாக நகலகங்களை நாடு கின்றனர்.
புதிதாக படிப் பொறி வாங்க விரும்பவர்கள், அனுபவம் உள்ளவர்களிடம் நன்கு விசாரித்து வாங்க வேண்டும். எந்திரங்களை நேரடியாக பார்த்து வாங்குவதற்கு பதில் இன்டர்நெட்டில் எந்திரங்களைப் பார்த்து அதனுடைய தரம் பற்றி மனதுக்குள் கோட்டை கட்டுவது மிகப் பெரிய தவறாகும். படிப்பொறித் துறையில் படிப்பொறிகளை (செராக்ஸ் எந்திரங்கள்) வாடகைக்கு விடுபவர்கள் என்ற ஒரு பிரிவினர் உள்ளனர். அவர்கள் புத்தம் புது படிப்பொறிகளையும் வாடகைக்கு விடுகின்றனர். ரீகண்டிஷன் செய்யப்பட்ட எந்திரங்களையும் வாடகைக்கு விடுகின்றனர்.
படிப்பொறிகளை ஏதேனும் ஒரு காரணம் கருதி விற்பனை செய்ய முயற்சித்தால் அத்தனை எளிதாக விற்பனை செய்ய முடியாது. வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தினால், எப்போது வேண்டுமானாலும் திருப்பிக் கொடுத்து விடலாம்.
கணினி மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களின் வளர்ச்சியும், ஏராளமான கல்வி நிறுவனங்களின் வருகையும் படிப்பொறித் துறையின் வளர்ச்சிக்கு உகந்த வகையில் உள்ளது.
தற்போது தொழில் நடத்திக் கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான நகலகங்களுக்கு டெக்னீசியன்களின் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே இத்தகைய டெக்னீசியன்கள் பயிற்சி பெறுபவர்களுக்கும் தொழில் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஆயிரம்விளக்கு பகுதியில் செராக்ஸ் எந்திரங்கள் தொடர்பான நிறைய நிறுவனங்கள் உள்ளன.
– கோ. ஜெய ஜான்சன்