கடலூர் போன்ற தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் முந்திரி மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. இவற்றில் இருந்து பறிக்கப்படும் முந்திரிக் கொட்டைகளில் இருந்து முந்திரிப் பருப்பை பிரித்து எடுப்பதை பெரும்பாலும் குடிசைத் தொழிலாக செய்து வருகிறார்கள். இப்படி முந்திரிப் பருப்புகள் பிரித்து எடுக்கத் தேவையான முந்திரிக் கொட்டைகள் இறக்குமதி செய்வதும் உண்டு.
Also read: உலர் பழங்கள் வணிகத்தில் வெற்றி பெறுவது எப்படி?
மூலப் பொருளான முந்திரிக் கொட்டைகள் அதிகம் கிடைக்கும் இடங்களில் முந்திரிப் பருப்பு உடைக்கும் தொழில் தொடங்க முடியும். இருபது சென்ட் நிலப்பரப்பு தேவைப்படும்.முந்திரிப் பருப்பு தொழிலுக்குத் தேவையான பாய்லர், பீலிங் (உரிக்கும்) எந்திரம், தரம் பிரிக்கும் எந்திரம், குளிர்விக்கும் எந்திரம், முந்திரி உடைக்கும் எந்திரம், ஏர் கம்பரஸ்சர், ஜெனரேட்டர் என்று அனைத்து எந்திரங்களும் தேவைப்படும். இதற்கு சுமார் இருபது லட்சம் ரூபாய் தேவைப்படும். வங்கிக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். இப்படி எந்திரங்கள் இல்லாமல் குறைந்த முதலீட்டில் செய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
மூன்று கிலோ முந்திரிக் கொட்டைகளை உடைத்தால் ஒரு கிலோ முந்திரிப் பருப்பு கிடைத்தால் அவை தரமான முந்திரிக் கொட்டைகள்.
முந்திரிக் கொட்டைகளை குறிப்பிட்ட நேரம் பாய்லரில் வைத்து அவிக்க வேண்டும். மறுநாள் உடைப்பவர்களிடம் கொடுத்து உடைக்க வேண்டும். எந்திரத்திலும் உடைக் கலாம். சுத்தியல் கொண்டு கையால் உடைப்பதால் முழு முந்திரிப் பருப்புகளின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் குறைந்த அளவு மட்டுமே உடைக்க முடியும். எந்திரத்தில் போட்டு உடைக்கும்போது, உடைசல் சற்று அதிகமாக இருக்கும்.
அவித்து உலர்த்திய முந்திரிக் கொட்டைகளை உடைக்க கைதேர்ந்த தொழிலாளர்களையே வேலைக்கு அமர்த்த வேண்டும். இல்லை என்றால் முழுப் பருப்பாக எடுக்கத் தெரியாமல் அவசர அவசரமாக உடைத்து நல்ல விலை கிடைக்காமல் போய்விடும்.
உடைத்த முந்திரிப் பருப்புகளை இரண்டு முறையாக ஏழு மணி நேரம் ஹீட்டரில் வைக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக முன்று மணி நேரத்துக்குப் பிறகு எட்டு மணி நேரம் குளிர்விக்க வேண்டும். பின்னர் சாக்குகளில் கொட்டி உலர்த்த வேண்டும்.
திரும்பவும் உள்தோலை உரிப்பதற்கும், தரம்வாரியாகப் பிரிப்பதற்கும் அதற்கான எந்திரங்களைப் பயன் படுத்த வேண்டும். முந்திரிக் கொட்டைகளில் இருந்து தரமான முந்திரிப் பருப்புகளை விற்பனைக்கு ஏற்ற வாறு தயாரிக்க சுமார் ஒரு வாரம் தேவைப் படுகிறது. உடைக்கப்பட்ட முந்திரிப் பருப்பு கள் நான்கு தரங்களாக பிரிக்கப்படும். தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும்.
Also read: சிமென்ட் விற்பனைக்கான டீலர்ஷிப் பெறுவது எப்படி?
மூலப் பொருளான முந்திரிக் கொட்டைகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, அதை வாங்கி உடைப்பவர்களுக்கும், விற்பவர்களுக்கும் தொழில் வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. இதன் மூலம் தொழிலில் ஒரு தொடர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது. மூலப் பொருட்களின் விலை, விற்பனை விலையைப் பொறுத்தே லாப அளவு அமைகிறது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இறக்குமதி தடைபட்டு இருக்கிறது. இதனால் உள்நாட்டு முந்திரிக் கொட்டைகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டி இருக்கும்.
முந்திரிப் பருப்பு உற்பத்தியில் ஒருவார சுழற்சி இருப்பதால் நடப்பு முதலீடு அதிகம் தேவைப்படுகிறது. முந்திரிப் பருப்பு உடைக்கும் தொழிலாளர்களுக்கு அன்றன்றைக்கே கூலி கொடுக்க வேண்டி இருக்கும்.
இன்றைக்கு முந்திரிப் பருப்பு பயன்பாடு அதிகரித்து உள்ளது. புரதம், நல்ல கொழுப்பு தேவைக்கு முந்திரிப் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு உணவியல் வல்லுநர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். உள்ளிட்ட விழாக் காலங்களில் மற்ற இனிப்புப் பண்டங்களுடன் முந்திரிப் பருப்புகளையும் அன்புப் பரிசாக வழங்கும் வழக்கம் பழக்கத்தில் இருப்பதால் தரம் பிரிக்கப்பட்ட முந்திரிப் பருப்பை வாங்கி விற்பவர்களுக்கும் வணிக வாய்ப்பு உள்ளது.
– திரு.ரவிச்சந்திரன்( முந்திரிப் பருப்பு ஆலை உரிமையாளர் -9787104876)