உழவன் கைபேசி செயலியில், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் ‘எனது பண்ணை வழிகாட்டி சேவை’, ‘இயற்கை பண்ணையம்’, ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்’ ஆகிய 3 சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக வேளாண் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான முதன்மைத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் ‘உழவன்’ கைபேசி செயலி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிமுகப்படுத்தப் பட்டது. இதுவரை 5 லட்சம் பயனாளிகள் இச்செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
Also read: தமிழர்களின் வேளாண் பொறியியல் சிந்தனைகள்
வேளாண்மை மற்றும் இதர சகோதரத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றி அறிந்து கொண்டு, இதுவரை 88,987 விவசாயிகள் உயர் மதிப்புள்ள இடுபொருட்களை மானியத்தில் பெறும் வகையில் இந்தச் செயலி மூலம் பதிவு செய்துள்ளனர்.
தற்போது கூடுதலாக ‘எனது பண்ணை வழிகாட்டி’, ‘இயற்கை பண்ணையம்’ மற்றும் ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்’ ஆகியமூன்று சேவைகள் ‘உழவன்’ செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தச் சேவை மூலம் விவசாயிகள் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ள பயிர், பரப்பு, நடவு நாள் மற்றும் சாகுபடி முறையைத் தேர்வு செய்தால், விதைப்பு முதல் அறுவடை வரை தினசரி, அந்த பயிருக்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து சாகுபடி முறைகளையும், எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
மேலும், சாகுபடிக்கு தேவைப்படும் விதை, ரசாயன உரங்கள், களைக்கொல்லி போன்ற இடுபொருட்கள், பயிர்க் கடன், பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை உள்ளிட்ட விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், இடுபொருள் கள், நிதிஉதவி, லாபகரமான விலையில் விற்பனை செய்வதற்கான சந்தை போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்பு களாக உருவாக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Also read: உயிரி தொழில் நுட்பம் பற்றிய சில கேள்விகளும், பதில்களும்!
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங் களால் உருவாக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை நல்ல முறையில் சந்தைப் படுத்துவதற்கு உதவும் வகையில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் ‘உழவன்’ கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் தாங்கள் மதிப்பு கூட்டிய பொருட்களின் தரம், அளவு, விலை போன்ற விவரங்களை படத்துடன் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்து சந்தைப் படுத்திக் கொள்ளலாம்.
பொதுமக்களும் இந்தச் செயலியால் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்புகூட்டிய பொருட்களை வாங்க வசதி ஏற்படுத்தப் பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-மலர்