வளர்ப்பு நாய்களைச் சுற்றி உருவாகி வரும் வணிக வாய்ப்புகள் வியப்பு அளிப்பவை ஆக உள்ளன. வகைவகையான நாய்க்குட்டிகளை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் தொழிலில் பலர் ஈடுபட்டு இருக்கிறார்கள். இத்தகைய நாய்க்குட்டிகளை நல்ல விலைக்கு இவர்களால் விற்பனை செய்ய முடிகிறது. இதற்குக் காரணம் பெரும்பாலும் நாய் வளர்ப்பு, வருமானம் அதிகமாக உள்ளவர்களின் விருப்பத் தேர்வாக இருப்பதுதான்.
நாய்கள், தங்களை வளர்க்கும் மனிதர்களிடம் காட்டும் உறவு, அவர்கள் சொல்வதை புரிந்து கொண்டு செயலாற்றுவது, அவர்களுடன் விளையாடு வது போன்றவை வளர்ப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. மேலும் வீட்டில் தனியாக இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு பொழுது போக்குக்கான விலங்காகவும் இருக்கிறது. வளர்ப்பு நாய்களை பராமரிப்பதை அவர்கள் விரும்பிச் செய்கிறார்கள்.
வீட்டில் போதுமான இடவசதி இருப்பவர்களே செல்ல விலங்குகளை வளர்க்க முடிகிறது. நாய்களை பராமரிப்பவர்கள், இவற்றுக்கு செலவு செய்யவும் தயங்குவது இல்லை. விலை உயர்ந்த கழுத்துப்பட்டை, சங்கிலிகள், நாய்களுக்கு எனவே தயாரிக்கப்பட்டு வரும் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள், அவை கடித்து விளையாட உதவும் ரப்பர் எலும்புகள் என்று எண்ணற்ற பொருட்கள் சந்தைப் படுத்தப் படுகின்றன. இவற்றுக்கு எனவே தனி மருத்துவமனைகளும் பெரிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.
வளர்ப்பு விலங்குகளைச் சுற்றி உள்ள வணிக வாய்ப்புகளைப் புரிந்து கொண்ட சிலர், இத்துறையில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். ‘பெட்டெக்ஸ் இந்தியா’ என்ற பெயரில் ஐதராபாத்தில் நடைபெறும் வளர்ப்பு விலங்குகள் தொடர்பான பொருட்காட்சிக்கு ஆயிரக் கணக்கான மக்கள் வருகிறார்கள். வளர்ப்பு விலங்குகளுக்கான பொருட்கள் சந்தை ஆண்டுதோறும் பத்து விழுக்காடு அளவுக்கு வளர்ந்து வருவதாக கணித்து உள்ளார்கள். எனவே இத்துறையில் உள்ள வணிக வாய்ப்புகள் குறித்து தொழில் முனைவோர் சிந்தித்துப் பார்க்கலாம்.
Also read: கால்நடைகள், கோழி வளர்ப்பு: சில பொதுவான செய்திகள்
ஹெட்ஸ் அப் ஃபார் டெயில்ஸ் என்ற பெயரில் நாடு முழுவதும் நாய் பராமரிப்புக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் இருபத்தெட்டு மையங்களை நடத்தி வரும் ராஷி சனோன் நவ்ரங் என்ற பெண், தன்னுடைய முயற்சி எப்படி தொடங்கியது என்பதைக் கூறும்போது,
”நான் பிறந்து என் கண்களைத் திறக்கும்போதே என் வீட்டில், செல்ல நாய்க்குட்டிகளும் இருந்தன. எங்கள் வீட்டில் அப்போது இருந்தே செல்லமாக நாய்களை வளர்த்து வந்தோம். எனக்கு திருமணம் ஆனபிறகு, நான் லாபரேடர் இன நாய் ஒன்றை சாரா என்ற பெயரில் பராமரித்து வந்தேன். சாராவுக்குத் தேவையான தரமான கழுத்துப் பட்டி போன்றவற்றை வாங்க அலைந்து திரிந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் நானே அவற்றை வடிவமைத்து தயாரித்துப் பயன்படுத்தினேன்.
இதைப் பார்த்த நாய்களைப் பராமரிக்கும் எங்கள் உறவினர்களும், நண்பர்களும், தங்கள் நாய்களுக்கும் இவற்றைப் போன்ற தரமான பொருட்கள் வேண்டும் என்று கேட்கத் தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து எனக்குள் இதையே ஒரு தொழிலாக செய்யலாம் என்ற எண்ணம் உதித்தது. ஹெட் அப் ஃபார் டெயில்ஸ் பிறந்தது. முதலில் டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டிவாக் மாலில் ஒரு சின்ன கடையாகத்தான் தொடங்கினேன். இப்போது சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, ஐதராபாத் என்று இருபத்தெட்டு இடங்களில் எங்கள் விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன.” என்கிறார்.
அரியானா, குர்கானில் டாக்கி டப்பாஸ் என்ற பெயரில் வளர்ப்பு விலங்குகளுக்கான உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார், ராஷி குச்ரூ என்ற பெண். இவர் தன் நாய்க்கு கடைகளில் விற்கப்படும் பேக்கிங் உணவுகளை வாங்கிக் கொடுத்த போது, அவை அவரது நாய்க்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே, தானே அதற்குக் தேவையான உணவை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்தார்.இதனால் நாயின் உடல்நலம் கூடியதோடு, பளபளப்பும் அதிகரித்தது.
இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்களும், தங்கள் நாய்களுக்கும் உணவு தயாரித்துத் தர முடியுமா என கேட்கவே, டாக்கி டப்பாஸ் என்ற பெயரில் நாய்களுக்கான சமைத்த உணைவை தயாரித்து வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கி விட்டார். முதலில் ஆர்டர் கொடுப்பவர் களின் வீடுகளுக்கே கொண்டு சென்று சமைத்த உணவை டெலிவரி செய்தார். ஆனால் காலப்போக்கில் இந்த முறையில் உள்ள குறைபாடுகளை அறிந்தார். இதுபற்றி அவர் கூறும்போது,
”சமைத்து உடனுக்குடன் கொடுக்கும் முறையில், சில் நேரங்களில் உணவு பழையதாகி விடுகிறது. இன்னும் நீண்ட தொலைவில் உள்ள வீடுகளாக இருந்தால் உணவு கெட்டும் விடுகிறது. எனவே உடனுக்குடன் வாங்கி அப்போதே நாய்களுக்கு உண்ணக் கொடுக்கும் முறை சரியாக வரவில்லை. எனவே உணவைச் சமைத்து வேக்குவம் முறையில் பேக்கிங் செய்து கொடுத்து அனுப்பத் தொடங்கினேன்.
பொதுவாக நாய்களுக்கு இனிப்புச் சுவையுள்ள பிஸ்கட்களை கொடுக் கிறார்கள். இவை நாய்களின் உடல் நலத்துக்கு உகந்தவை அல்ல. நாங்கள் நாய்களின் உடல்நலனுக்கு ஏற்ற வகையில் சிக்கன் ஜெர்க்கி, மீன் ஜெர்க்கி ஆகிய புரோட்டீன் மிகுந்த உணவுகளை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்து அனுப்புகிறோம்.
எங்கள் நிறுவனத்துக்கு நாங்கள் பெயர் வைக்கும்போது, பெயரே நாங்கள் செய்யும் தொழிலைக் குறிப்பிடும்படி இருக்க வேண்டும் என்று கருதினோம். டப்பா வாலாக்கள் என்றால் உணவுகளை டெலிவரி செய்பவர்கள் என்று அனைவருக்கும் தெரியும். எனவே டாக்கி டப்பாஸ் என்றால் அனைவருக்கும் நாய்களுக்கான உணவுகளை டெலிவரி செய்பவர்கள் என்று உடனே புரிந்து கொள்வார்கள் என்று கருதினோம். அதனாலேயே இந்த பெயரை தேர்வு செய்தோம். பெயரைக் கேட்ட உடனேயே நாங்கள் கருதியபடி எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.
நாய்களுக்கு ஏற்ற உணவுகளை சமைத்து வேக்குவம் பேக்கிங் செய்து அனுப்பும் பிரிவுகளை இன்னும் சில இடங்களுக்கும் விரிவு படுத்த எண்ணி இருக்கிறோம். இப்போது டெல்லியிலும், மும்பையிலும் செயல்பட்டு வருகின்றன.” என்றார்.
பொதுவாக நாய்களுக்கு இறைச்சி, மீன் உணவுகள்தான் பிடிக்கும் என்றாலும், வீட்டில் அசைவம் உண்ணாதவர்களுக்கு, நாய்களுக்கு அசைவம் சமைத்துப் போடுவதில் சிக்கல் இருக்கிறது. இந்த சிக்கலுக்கு தீர்வாக புபேந்திரா கானல் என்பவர், நாய்களுக்கான சைவ உணவுகளைத் தயாரிக்கும் ஐடியாவை செயல்படுத்தி வெற்றி பெற்று இருக்கிறார்
இது பற்றி இவர் கூறும்போது,
”எனக்கு உணவு சார்ந்த தொழிலில்தான் ஈடுபட வேண்டும் என்ற ஆவல் அதிகம். நேபாள மக்களின் உணவு வகைகளைத் தயாரித்து இந்தியாவில் விற்பது தொடர்பான பயிற்சிக்கு இமாலயா சென்றேன். ஆனால் அங்கே நாய்களுக்கு கடினமாக்கப்பட்ட சீஸ் கொடுக்கப் படுவதைப் பார்த்தேன். நாய்கள் அவற்றை ஆர்வத்துடன் மென்று கொண்டு இருப்பதையும் பார்த்தேன். அதன் பிறகு என்னுடைய சிந்தனை மாறியது. நாம் ஏன் நாய்களுக்கான இந்த சைவ உணவை மற்ற இடங்களுக்கு அறிமுகப்படுத்தக் கூடாது என்று நினைது என்னுடைய முடிவை மாற்றினேன்.
நாய்களுக்கான உணவுச் சந்தை பெரியது. நான் இந்த புதுமையான மெல்லும் சீசை அறிமுகப்படுத்தும் போது இது ஒரு புதுமையான, நாய்கள் விரும்பி மெல்லும் உணவாக விளங்கியது. அதுவரை இப்படி ஒரு சைவ உணவு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. சைவ வீட்டுக்காரர்கள் இதை தங்கள் நாய்களுக்கு வாங்கிக் கொடுத்தார்கள். என் டாக்சீ சீவ் சந்தை விரிவடைந்தது.
இந்த உணவுப் பொருள் நாய்களின் உடல் நலனுக்கு உகந்தது. குறிப்பாக அவற்றின் பற்களுக்கு நல்லது. இதை மெல்லும்போது நாய்களின் பற்கள் தூய்மை ஆவதோடு, அவற்றுக்கு தேவையான புரதமும் கிடைத்து விடுகிறது. தற்போது இந்த மெல்லும் சீஸ் அமெரிக்கா, ஸ்பெயின், கனடா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.
இதைத் தொடர்ந்து தற்போது உலர் பழங்கள், காய்கறிகளைப் பயன்படுத்தி நாய்களுக்கான உணவுகளைத் தயாரித்து சந்தைப் படுத்தி வருகிறேன்.” என்று கூறும் புபேந்திரா தயாரிக்கும் அனைத்து உணவுகளும் சைவம் சார்ந்தவை.
குணால் கன்னா என்பவர், விவால்டிஸ் என்ற பெயரில் நாய்களுக்கான மருந்தகங்களை நடத்தி வருகிறார். ”இதற்காக நாங்கள் சொந்தமாக ஆய்வுக் கூடம் வைத்து இருக்கிறோம். இங்கே நாய் களுக்கு ஊட்டம் அளிக்கும் உணவுகள் மற்றும் அவற்றுக்கு ஏற்படும் நோய் களுக்கான மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் உணவுகளும், மருந்துகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
Also read: ஆடு வளர்ப்பு சில அடிப்படைச் செய்திகள்!
நாய்களுக்கான நோய்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் இத்தகைய பன்னிரெண்டு ஆய்வுக் கூடங்களை அமைத்து உள்ளோம். நாய் களையும் டயபெட்டிஸ், ஆர்த்ரைட்டிஸ், கேன்சர் போன்ற நோய்கள் தாக்குகின்றன. இந்தியாவில் நாய்களுக்கு ஏற்படும் கேன்சருக்கான மருந்தை நாங்கள்தான் எங்கள் ஆய்வுக் கூடத்தில் கண்டு பிடித்து அறிமுகம் செய்தோம். வளர்ப்பு விலங்குகள் தொடர்பான பயிற்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
ருக்மணி வைஷ் என்ற பெண், இன்னொரு கோணத்தில் நாய்கள் தொடர்பான ஒரு தொழிலைத் தொடங்கி நடத்தி வருகிறார். பெரும்பாலும் சுற்றுலா செல்வோருடன் அவர்களின் வளர்ப்பு நாய்களை அழைத்துச் செல்ல முடியாது. தங்கும் விடுதிகளில் இதற்கான அனுமதி கிடையாது. ருக்மணி, காலர் ஃபோல்க் என்ற தன் நிறுவனம் மூலம் எந்த விடுதிகளில் வளர்ப்பு நாய்களுடன் தங்குவதற்கு அனுமதிக்கிறார்களோ, அந்த விடுதிகளை சுற்றுலா செல்வோருக்கு பதிவு செய்து கொடுக்கிறார். விடுதிகளின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வளர்ப்பு நாய்களுடன் தங்குவதற்கான அனுமதிகளை வழங்கச் செய்கிறார். இது பற்றி அவர் கூறும்போது,
”வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், சுற்றுலா செல்வதை தள்ளிப்போடுவதற்கான முதன்மையான காரணங்களில், தங்களுடன் இவற்றையும் அழைத்துச் செல்ல முடியாது; இவற்றை விட்டுச் செல்ல சரியான இடமும் கிடையாது என்பவை ஆகும். ஒரு விடுமுறை சுற்றுலாவின்போது கோல்டன் ரிட்ரீவர் வகை கிக்கி செல்ல நாயை எங்களுடன் அழைத்துச் சென்றோம். விடுதிகளிலும், ரிசார்ட்டுகளிலும் அனுமதிக்க மறுத்து விட்டார்கள். பெட் ஃப்ரண்ட்லி ரிசார்ட்டுகளையே பார்க்க முடியவில்லை. இந்த தேவையை நான் தொழில் நோக்கில் சிந்தித்ததால் காலர் ஃபோல்க் நிறுவனம் பிறந்தது. காலர் ஃபோல்க் ஒரு ஆன்லைன் சேவை நிறுவனம். செல்ல விலங்குகளுடன் தங்க அனுமதிக்கும் ஓட்டல்களையும், ரிசார்ட்களையும் இதில் பதிவு செய்து கொள்ளலாம். மாதத்துக்கு சுமார் ஐம்பது பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.” என்கிறார்.
இத்தகைய சிக்கல்களுக்கு இன்னும் சிலர் வேறு வகையான தீர்வுகளைத் தருகிறார்கள். அவர்கள் வளர்ப்பு நாய்களுக்கான விடுதிகளை நடத்துகிறார்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்பவர்கள், இங்கே தங்கள் நாய்களை விட்டுச் செல்லலாம். அவர்கள் அவற்றுக்குத் தேவையான உணவுகளைக் கொடுத்து பராமரித்து, குடும்பத்தினர் வெளியூரில் இருந்து வந்தவுடன் அவர்களிடம் ஒப்படைக்கின்றனர். இதற்கான கணிசமான கட்டணங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். சென்னையில் உள்ள ஒரு வளர்ப்பு நாய்கள் பராமரிப்பு விடுதியில் ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் கட்டணம் வாங்குகின்றனர்.
தமிழ் நாட்டைப் பொறுத்த வரை சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் இத்தகைய வளர்ப்பு நாய்களுக்கான பராமரிப்பு சார்ந்த தொழில்களுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. செல்ல விலங்குகள் வளர்ப்பது என்பது சற்று செலவு பிடிக்கும் விருப்ப வேலை என்பதால் பெரும்பாலும் வருமானம் அதிகம் உள்ளவர்களே செல்ல விலங்குகளை வளர்க்கிறார்கள். இவர்கள் தங்கள் செல்ல விலங்குகளுக்கான பொருட்களுக்கு செலவு செய்யத் தயங்குவது இல்லை. இந்த மனப்பான்மைதான் இந்த தொழிலுக்கான அடிப்படை. எனவே வருமானம் அதிகம் உள்ளவர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே வளர்ப்பு நாய்கள் பராமரிப்பு தொடர்பான தொழில்களுக்கு வாய்ப்பு கூடுதலாக இருக்கும். நடுத்தர மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இத்தகைய தொழிலுக்கு வரவேற்பு குறைவாகவே இருக்கும் என்பதை தொழில் முனைவோர் மனதில் கொள்ளலாம்.
– எவ்வி