தமிழகத்தின் பிரபல குளிர்பான நிறுவனமான காளிமார்க், இந்த ஆண்டு கோடையை ஒட்டி, மென்பானங்கள், பழரசங்கள், இளநீர், மினரல் வாட்டர், சோள ரவை, சோள மாவு உள்ளிட்ட 30 வகையான புதிய பொருட்களை அண்மையில் அறிமுகம் செய்து உள்ளது. இது பற்றி காளிமார்க் குழுமத்தின் தலைவர் திரு. கே.பி.ஆர். தனுஷ்கோடி கூறும்போது,
” நூற்று மூன்று ஆண்டுகள் கால பாரம்பரியம் கொண்ட காளிமார்க் குழும நிறுவனங்கள், ஏற்கனவே ‘பொவன்டோ மற்றும் விப்ரோ(Vibro)ஆகிய பிராண்ட் பெயர்களில் முன்னணி மென்பானங்களை விற்பனை செய்து வருகின்றன. தற்போது புதிய பிராண்டாக ‘ஜிப்சி’ (Zypsy) என்ற பெயரில் சில உணவுப் பொருட்கள் மற்றும் பழச் சாறுகள், ‘இளநி’ (Ilani) என்ற பெயரில் சில இயற்கை பானங்கள் போன்றவற்றோடு, ‘பொவன்டோ’ என்ற பிராண்ட் பெயரிலேயே மேலும் சில புதிய சுவை மென்பானங்கள் என மொத்தமாக முப்பது வகையான பொருட்களை சந்தைக்கு அறிமுகம் செய்து உள்ளோம்.
இளநி பிராண்ட் பெயரில் பைனாப்பிள், மா, லிச்சி ஆகிய பழச் சாறுகளை அறிமுகம் செய்து உள்ளோம். சாக்லெட் மற்றும் வெனிலா சுவை சேர்க்கப்பட்ட தேங்காய்ப் பால் டெட்ரா பேக்குகளையும் அறிமுகம் செய்துள்ளோம். இவை அனைத்தும் 180 மில்லி அளவுகளில் கிடைக்கும். இளநி பிராண்ட்டில் கிடைக்கும் எல்லா பொருட்களும் முற்றிலும் தூய்மையான இயற்கையான இளநீரைக் கொண்டவை. இரசாயனப் பொருட்களோ, பானத்தின் நிறத்தை மாற்றிட உதவும் நிறமிகளோ இன்றி, இவை பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
தென்னை அடிப்படையிலான எங்களது பானங்கள் 100 சதம் இளநீரைக் கொண்டவை. அவற்றில் சர்க்கரை சேர்க்கப்படுவதில்லை. மணம், சுவை, நிறம் என எதற்காகவும் செயற்கை இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. வெனிலா சுவை பானங்களிலும் கூட, தாவர வெனிலா சாறே சேர்க்கப்படுகிறது.
ஜிப்சி என்ற பிராண்ட் பெயரில் ஏழு வெவ்வேறு விதமான சுவை மற்றும் அளவுகளில் பழச் சாறு பானங்களை வெளியிட்டு இருக்கிறோம். மா, கொய்யா, புளிச் சுவைகளில் வரும் இவை, 180 மில்லி டெட்ரா பேக்குகள் மட்டுமின்றி, 200 மில்லி, 500 மில்லி பெட் பாட்டில்களிலும் கிடைக்கின்றன.
சோள ரவை மற்றும் சோள மாவு வகைகளையும் அறிமுகம் செய்து உள்ளோம். இவை இருமுறை வறுக்கப்பட்டவை மற்றும் நீண்டநாள் பாதுகாக்க சேர்க்கப்படும் செயற்கை இரசாயனங்கள் கலக்கப்படாதவை. வீட்டுத் தேவைக்காக அரை கிலோ பாக்கெட்களாகவும், உணவகங்களின் தேவைக்காக 25 கிலோ மூட்டைகளாகவும் இந்த ரவை மற்றும் மாவு கிடைக்கும்.
புதுச் சுவையுடன் கூடிய பொவன்டோவை 200 மில்லி பெட் பாட்டில்களில் அறிமுகம் செய்து உள்ளோம்.இவை மட்டுமின்றி விப்ரோ, சிம்சோ, ஜிஞ்சி, மற்றும் டிகோ போன்ற பிராண்ட்களில், பல வகை மென்பானங்களை 200 மில்லி பெட் பாட்டில்களில் வெளியிட்டு உள்ளோம். இவற்றில் டிகோ என்பது ஆரஞ்சு சுவையுடனும், ஜிஞ்சி என்பது இஞ்சு சார்ந்ததாகவும், சிம்சோ என்பது எலுமிச்சை சுவையுடனும், விப்ரோ பன்னீர் சோடாவாகவும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.
Also read:ஐம்பதாயிரம் ரூபாயில் ஒரு வணிக வாய்ப்பு, காமதேனு மசாலா தருகிறது!
இது தவிர பொவன்டோ, விப்ரோ, ஜிஞ்சி, கிளப் சோடா போன்றவற்றில் கரும்புச் சாறின் சுவை, மணம் சேர்க்கப்பட்ட பானங்களை 250 மில்லி அளவுகளில் அறிமுகம் செய்து உள்ளோம். பிரிஸ்டிலி என்ற பெயரில் 300 மில்லி, 500 மில்லி, 1 லிட்டர் அளவுகளில் மினரல் வாட்டர் மற்றும் கரும்புச் சாறு சுவையுடான கிளப் சோடா போன்றவற்றையும் வழங்குகிறோம்.
எங்களது நீண்ட வணிகப் பயணத்தில், அடுத்தகட்ட விரிவாக்கத்தில் நாங்கள் இறங்கியுள்ளது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்து உள்ளது. விலை, சுவை, மணம் போன்ற அம்சங்களில் பல்வேறு வகை ஆய்வுகளுக்குப் பின், இந்த பொருள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்த கோடைக் காலத்திலேயே நமது மென்பான சந்தையில் கணிசமான அளவை எங்களால் பிடித்து விட முடியும் என நம்புகிறோம்” என்றார்.
– ராகு