உலகெங்கிலும் பரந்து, விரிந்து உள்ள வால்மார்ட் வணிக நிறுவனம், இந்தியாவில் ஃபிளிப்கார்ட் என்ற இணைய தள வர்த்தக நிறுவனத்தின் 77 சதவீதம் பங்கை வாங்க உள்ளது என்ற அறிவிப்பு, இந்தியாவில் உள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்களிடம், அச்சத்தை யும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
சிறு, குறு சில்லறை வணிக நிறுவனங்கள், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் பொருட்களை மிகவும் குறைவான விலையில் விற்று, நுகர்வோர்களை அவர்களிடம் ஈர்க்க முடியும் என்று அஞ்சுகின்றனர்.
பல விதமான விலை குறைப்பு போன்ற சலுகைகளையும் அவ்வப்போது அறிவித்து தங்களது விற்பனை அளவை பெரிதளவு கூட்டிக் கொள்ள முயல்வார்கள் என்றும், அதனால் தங்களது விற்பனை அளவு பாதிக்கப் படும் என்றும், எண்ணி சிறு, குறு சில்லறை வர்த்தக நிறுவனங்கள் வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் வருகையை எதிர்க்கின்றனர்.
மேற்கண்ட அச்ச உணர்வு கொண்ட எண்ணங்களை அறவே நிராகரிக்க முடியாது. அதே நேரம், இத்தகைய போட்டியின் விளைவுகளை சமாளிக்க தேவையான அனுபவங்களும், ஆற்றலும் மற்றும் பல ஆதரவான சூழ்நிலைகளும் சில்லறை வணிகத் துறைக்கு உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும், நுகர்வோர்களுக்கு உடனே தேவைப்படும் பொருட்களை வழங்கு வதை சில்லறை வர்த்தக நிறுவனங் களால்தான் நிறைவு செய்ய முடியும். இணைய தள வர்த்தக சந்தையில் பொருட்கள் கிடைக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை அடிக்கடி ஏற்படக் கூடும்.
தற்போது, இந்தியாவின் வணிகம் ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூபாய் 45 லட்சம் கோடியளவு உயர்ந்து நிற்கிறது. இவற்றில் இணைய தள சந்தையின் அளவு சுமார் 2.5 சதவீதம் தான். அதாவது சுமார் 97.5 சதவீதம் வர்த்தகம் நேரடியாகவும், சில்லறை வர்த்தக வணிக நிறுவனங்கள் மூலமாகவும் தான் நடத்தப்படுகிறது.
ஒன்றின் வளர்ச்சியை மற்றொன்றால் தடுக்க முடியாது.
வரும் காலங்களில், இணைய தள வர்த்தகமானாலும், சில்லறை வணிக மானாலும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, இணைய தளத்தில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, தங்களது செயல் பாட்டினை மாற்றிக் கொள்வது அவசியம். இது தவிர்க்க முடியாததது. காலத்தின் கட்டாயம்.
– என். எஸ். வெங்கட்ராமன்,
தொழில் ஆலோசகர்