சான்றாக அ என்பவர் திருப்பூரில் பனியன் உற்பத்தி செய்யும் சிறுதொழில் நிறுவனர். அவர் நிறுவனத்தின் ஆண்டு விற்பனை வருமானம் புதிய விற்பனை வருமான வரம்பு ரூ. 40 இலட்சங்களுக்குள் வருவதால் ஜிஎஸ்டி பதிவு எண் பெறாமல் தன் தொழிலை நடத்தி வருகின்றார்.
இவர் தன் உற்பத்திப் பொருட்களை தமிழ் நாட்டிற்குள் அல்லது மற்ற மாநிலங்களுக்கு அனுப்பும் போது சரக்குடன் இ-வே பில் (மின்னணு வழி பட்டியல்) அனுப்ப வேண்டுமா? ஆம் எனில் ஜிஎஸ்டியில் பதிவு எண் பெறாத அவரால் இந்த இ-வே பில்லை தயார் செய்து தன் உற்பத்திப் பொருட்களை அனுப்ப முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறானவர்களுக்கு உதவுவதற்காகவே ஜிஎஸ்டி இணைய தளத்தில் இ-வே பில் ஃபார் சிட்டிசன்ஸ் (E-Way Bill for Citizens) எனும் வாய்ப்பு இருக்கின்றது.
இ-வே பில் என்பது ஜிஎஸ்டியில் பதிவு எண் பெற்று வியாபாரம் செய்யும் ஒருவர் அல்லது ஜிஎஸ்டிஏயில் (GSTA) பதிவு பெற்ற பொருள் போக்குவரத்து செய்யும் ஒருவர் பொருட்களை கொண்டு செல்லும் போது கூடவே அவைகளுக்கான ஆதார ஆவணமாக கொண்டு செல்வதே இந்த பில் ஆகும்.
ஒரு மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையே ரூ. 50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) மதிப்பிற்கு மேல் பொருட்களை கொண்டு செல்லும் போது கண்டிப்பாக இந்த பில் உடன் மட்டுமே பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். இந்த பட்டியலை உருவாக்குவதற்காக தனியாக இ-வே பில் சிஸ்டம் (E-Way Bill System) எனும் தளம் உதவுகின்றது.
ஜிஎஸ்டியில் பதிவு பெற்றவர் ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்பிற்கு மேல் பொருட்களை கொண்டு செல்லும் போது இந்த தளத்தில் இவ்வாறான பில்லை உருவாக்கி அச்சிட்டு கொண்டு செல்லலாம். ஜிஎஸ்டியில் பதிவு பெறாதவரிடம் இருந்து, ஜிஎஸ்டியில் பதிவு பெற்றவர் ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்பிற்கு மேல் பொருட்களை பெறும் போது பொருட்களை பெறுபவர் இந்த பில்லை உருவாக்கி அச்சிட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.
சாலைவழி, தொடர்வண்டி வழி, வான்வழி ஆகியவற்றின் வாயிலாக ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்பிற்கு மேல் பொருட்களை கொண்டு செல்லும் பொருள் போக்குவரத்தாளர் கண்டிப்பாக இந்த பில் உடன் மட்டுமே அவைகளை கொண்டு செல்ல வேண்டும். ஜிஎஸ்டியில் பதிவு பெறாதவர் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி இந்த மின்னணு வழி பட்டியலை உருவாக்கி அச்சிட்டு கொள்ளலாம்.
முதலில் இ-வே பில் சிஸ்டம் எனும் தளத்திற்குள் செல்ல வேண்டும். பின்னர் அதில் உள்ள ரெஜிஸ்ட்ரேஷன் (Registration) எனும் பட்டியில் இ-வே பில் ஃபார் சிட்டிசன்ஸ் எனும் வாய்ப்பை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து விரியும் திரையில் Generate New EWB எனும் பொத்தானை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் விரியும் விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு விவரங்களை நிரப்பும் போது மிக முக்கியமாக நாம் பொருட்களை கொள்முதல் செய்கின்றோம் எனில், இன்வேர்ட் ஆப்ஷன் (Inward Option) எனும் வாய்ப்பையும், நாம் பொருட்களை விற்பனை செய்கின்றோம் எனில், அவுட்வேர்ட் ஆப்ஷன் (Outward Option) எனும் வாய்ப்பையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும். நாம் ஜிஎஸ்டியில் பதிவு பெறாதவர் என்பதால் ஜிஎஸ்டிஐஎன் (GSTIN) எனும் புலத்தில் யூஆர்பி (URP) என உள்ளீடு செய்து, இறுதியாக சப்மிட் எனும் பொத்தானை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும்.
இதனை தொடர்ந்து நமக்கான இ-வே பில் ஒன்று உருவாகி திரையில் தோன்றும். அதை அச்சிட்டுக் கொள்ள வேண்டும். பொருள் போக்குவரத்தாளர் இந்த பில் உடன் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்லலாம்.
– முனைவர் ச. குப்பன்