`நொடிக்கு நொடி புதிய புதிய பிராண்ட்கள் சந்தையில் அறிமுகம் ஆகிக் கொண்டு இருக்கின்றன. அத்தனை பிராண்ட்களில் புகுந்து, நமது பிராண்ட் வெற்றி பெறுவது என்பது, பரபரப்பான தி. நகர் ரங்கநாதன் தெருவில், திருவிழா நாட்களில் புகுந்து வருவது போன்றது. ஆனால் இந்த நெருக்கடியான, குழப்பமான சூழலிலும், நமது பிராண்டை வெற்றிபெற வைப்பது எப்படி என்பதை, டாம் பீட்டர்ஸ் என்பவர், தனது த்ரைவிங் ஆன் சாவோஸ் (Thriving on Chaos) என்ற புத்தகத்தில் விரிவாக சொல்லி இருக்கிறார்.
முன்பெல்லாம் உள்ளூர் பொருட்கள் மட்டுமே நம்முடன் போட்டி போட்டன. இன்றைய திறந்த சந்தையில், பன்னாட்டுப பொருட்களும் நம்முடன் மோதிக் கொண்டு இருக்கின்றன. அந்த பன்னாட்டுப் பொருட்களுடன் மோத முடியாமல், பல உள்ளூர் பொருட்கள் குழப்பமான புதை குழியில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றன.
விளம்பரம் செய்வது என்றால், ஆயிரக்கணக்கான சேனல்கள், இதழ்கள், பண்பலை வானொலிகள் கண்முன் வந்து நிற்கின்றன. சேனல்கள் பெருகப் பெருக, அவற்றைப் பார்க்கும் ஆட்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். இத்தகைய குழப்பமான சூழலில், வழுக்கும் வணிகச் சந்தையில், நம் வண்டியை பேலன்ஸ் செய்து ஓட்டிச் செல்ல, டாம் பீட்டர்ஸ் தரும் ஆலோசனைகள் இதோ,
நம் வர்த்தகத்தில் புதுமையைப் புகுத்துவதை, ஆர்வமாகச் செய்யுங்கள். மற்றவர்களை விட, தரமானதாக, அதிகம் உழைப்பதாக, மற்றவர்களை விட, அதிக வசதி கொண்டதாக, நம் பொருட்களை உற்பத்தி செய்யுங்கள். சந்தைக்கு தனி தொழில் நுட்பக் குழுவை அமையுங்கள். மற்ற பொருட்களைப் பார்த்தாவது புதுமையைப் புகுத்தலாம். சந்தைக்கு படைப்பாளுமை மிக்க தனி வல்லுநரை நியமிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் உங்கள் பிராண்டில் நீங்கள் செய்த புதுமை என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
நம் பொருட்களின் பயனாளிகளிடம் அடிக்கடி கருத்துக் கணிப்புகள் நடத்துங்கள். அவர்களைத் தேடிப் போய், நம் பொருட்களில் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம், என கேள்வி கேளுங்கள். அதற்கேற்ப தரமான பொருட்களை உற்பத்தி செய்யுங்கள்.
உங்கள் பிராண்டிற்கு ஓர் இலக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வல்லுநர் குழுவிற்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுங்கள். உங்கள் பணியாளர்களுக்கு பரபரப்பான உற்சாகத்தைக் கொடுங்கள்.
உள்ளூர் மட்டும் போதும் என கையை இறுக்கமாக கட்டிக் கொள்ளாதீர்கள். உலகம் முழுவதும் உங்கள் பிராண்டின் வேர்களை படர விடுங்கள். அதற்காக, விற்பனையாளர்கள், கண்காணிப்பாளர்களை அதிகரியுங்கள்.
அடிக்கடி அவர்களுக்கு நல்ல வல்லுநர்களைக் கொண்டு, இதே தொழிலின் புதிய உத்திகளையும், உலக மாற்றத்தையும் பயிற்சியாகக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.
உங்களின் ஒவ்வொரு பணியாளர்களையும் உங்கள் பங்குதாரர்களாக எண்ணுங்கள்.
அதற்கேற்ப அவர்களுடன் கூட்டுறவாக செயலாற்றுங்கள். அவர்களை தங்களது சொந்த நிறுவனமாக உணர வையுங்கள். இவை அனைத்தையும் செய்தால், உங்கள் பிராண்ட் வெற்றி பெறுவது நிச்சயம்.
– ஆனி லினியா