ஒரு நிறுவனத்தில் பணி செய்கின்றவர்களை நான்கு வகைகளாகப் பகுக்கலாம். முதலாவது, தற்காலிகப் பணியாளர்கள் (Casual workers). ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்காக சிலரை வேலைக்கு சேர்ப்போம்.
இரண்டாவதாக, தனித்திறமையில்லாத பணியாட்கள் (Un skilled Workers). மிகுந்த படிப்போ, தனிச்சிறப்புத் திறமையோ இல்லாமல், சிறிது வழிகாட்டுதலோடு செய்யக் கூடிய பணிகளைச் செய்பவர்கள். சான்றாக, தொழிற்கூடத்தைச் சுத்தம் செய்பவர்கள், எடுபிடி வேலை செய்பவர்கள் இருப்புகளைக் கவனிப்பவர்கள். பொருட்களைக் கட்டுபவர்கள் வண்டிகளில் ஏற்றுகின்றவர்கள், அமர்ந்து இடம் மாற்றுகின்றவர்கள் ஆகியோரைக் கூறலாம்.
மூன்றாவது, திறமையான பணியாளர்கள் (Skilled Workers). கல்வி, தொழில் பயிற்சி, ஆக்கத்திறன், அனுபவம் உடைய பணியாளர்கள்.
நான்காவதாக மேற்பார்வைப் பணியாளர்கள் (Supervisory Staff). இவர்கள், இவர்களுக்குரிய பணிகளைச் செய்வதோடு கூட, மற்றவர்கள் எப்படி வேலை செய்கின்றார்கள் என்பதையும் கண்காணிப்பவர்கள்; கவனிப்பவர்கள். இவர்களின் தலைமை இடத்தில் நிர்வாகி இருப்பார்.
ஒரு தொழில் அல்லது வாணிபத்தின் உரிமையாளர் இவர்களை எல்லாம் பணிக்குத் தேர்ந்தெடுப்பதோடு, வெளியில் தெரியாமல் இருந்து கொண்டு, எல்லாவற்றையும் இயக்குகின்ற சூத்திரதாரியாக விளங்குவார். சில நிறுவனங்களில் உரிமையாளரே தலைமை நிர்வாகியாகவும் செயல்படலாம்.
நிர்வாகமும் ஓர் எந்திரம் போன்றதுதான். இது கண்ணுக்குத் தெரியாத நுட்பமான, சூட் சுமங்கள் நிறைந்த அமைப்பு. இது ஒவ்வொரு நிறுவனத்தின் அளவுக்கும் இயல்புக்கும் ஏற்ப மாறுபடும். பொதுவாக தொழில் உற்பத்தி எந்திரங்கள் எல்லாம் ஒரேமாதிரி இயங்கும். இயக்குபவர்களுக்கு எளிதாக வசப்படும். அதில் கோளாறு ஏற்பட்டால், அதனைப் பிரித்து செப்பனிட்டு, மறுபடி இணைத்து எளிதாகச்
செயல்பட செய்யலாம்.
நிர்வாக எந்திரத்தை இயக்க எந்த வாய்ப்பாடும் இல்லை. எங்கோ சிறிய சிக்கலாகத் தோன்றுவது, விரைவில் ‘இடியாப்பச் சிக்கலாகி விடும்”. ஆதலால் மிக கவனமாக நிர்வாகத்தை நடத்துவது தொழிலின் வெற்றிக்கு மிகவும் தேவையாகும்.
ஒரு தொழிலின் உரிமையாளர் எந்தப் பணிக்கு யாரை நிர்ணயிப்பதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தொழிலில் வேலைக்கு ஆட்களைச் சேர்க்கின்ற பொழுது, ”இவர்கள் தொழிலின் வெற்றிக்குத் துணை செய்கின்றவர்கள்,” என்பதை மறக்கக் கூடாது. ”இவர்கள் பணியாளர்கள் தானே; சரியாக இல்லாவிட்டால் மாற்றிக் கொள்ளலாம். இப்பொழுது இவர்களை வைத்து சமாளிக்கலாம்” என்று எளிதாக எண்ணிச் செயல்பட்டால், பின்னால் அதன் விளைவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆதலால் ஒவ்வொரு நியமனத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக மக்களை ஐந்து வகைகளாகப் பகுக்கலாம்.
முதல்வகை, அறிவுத் திறன் மிக்கவர்கள். இவர்கள் எதனையும் நுட்பமாக அலசி ஆராய்ந்து பார்ப்பார்கள். இவர்கள் நிலை நோக்கோடு தொலைநோக்கும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களிடமிருந்து அறிவுரைகளை, வழி காட்டுதலைப் பெறலாம்.
இரண்டாம் வகையினர் ஆக்கத்திறன் (Creativity) உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் புதுமையைப் புகுத்துவதில் தனியார்வம் உடையவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பகுதியில் நியமித்தால் விரைந்து முன்னேற்றம் ஏற்படும்.
மூன்றாவது உழைப்பாற்றல் மிக்கவர்கள், இவர்களுக்கு உழைப்பதில் ஆர்வமும், ஈடுபாடும் மகிழ்ச்சியும் இருக்கும். கொடுத்த பணியை உரிய காலத்தில் செய்து முடிப்பார்கள். நிறுவனத்தின் தேவையை அறிந்து நேரம் பார்க்காமல் பணி செய்வார்கள். இவர்கள் தான் நிறுவனத்தின் சொத்துகள்.
இப்படிப்பட்டவர்களை நிரந்தர ஊழியர்களாகக் கொண்டு செயல்படுத்துவதில் தான் நிறுவனத்தின் வெற்றி இருக்கின்றது.
நான்காவது, ஏவலாளர்கள். இவர்கள் தாங்களாக எந்தப் பணியையும் செய்யமாட்டார்கள். மேலாளர்கள் ஏவுகின்ற வேலைகளைச் செய்வார்கள். இவர்கள் முடுக்கி விடுவதற்கேற்ப வேலைகள் செய்வதால், இவர்களின் வேலைத் தரம் மேலாளர்களை ஒட்டி அமையும்.
ஐந்தாவதாக, எதிர்மறைப் பணியாளர்கள். இவர்கள் தாங்களும் வேலை செய்யமாட்டார்கள்; வேலை செய்பவர்களையும் வேலை செய்ய விட மாட்டார்கள். ”மேய்கின்ற மாட்டை நக்குகின்ற மாடு கெடுக்கும்,” என்பது தமிழ்ப் பழமொழி. இவர்கள் யாரையாவது குறை கூறிக்கொண்டிருப்பவர்கள். இவர்களிடம், நன்றி, நம்பிக்கை, விசுவாசம் எதுவும் இருக்காது.
read also: எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?
வேலையாட்களை வேலைக்கு அமர்த்திய பின்பும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகின்றார். ஏனென்றால் வேலையாளிடம் மாற்றம் ஏற்படுமாம். இந்த உண்மையை நடைமுறை வாழ்க்கையில் பார்க்கலாம்.
தொழில் முனைவோர் வேலையில் சேர்க்கின்றபோது ஒரு பணியாளர் எப்படி இருந்தாரோ அப்படியே தொடர்ந்து இருப்பாரென எதிர் பார்க்க முடியாது. மாற்றம் வரும். மாற்றம் பெறுதல் மனித இயல்பு. ஆனால் அந்த மாற்றம் தொழில் நிறுவனத்துக்கு ஏற்றதா, இல்லையா என்பதைத் தொழில்முனைவோர்தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்த நுட்பமான உண்மையினை வள்ளுவப் பெருந்தகை,
எனைவகையான தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறு ஆகும் மாந்தர் பலர்
என்கின்றார். அதாவது, ஒருவரை எப்படி எல்லாம் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும், அவர் ஒரு செயலைச் செய்யும்போது அதன் மூலமாக அவரிடம் மாற்றம் ஏற்படலாம் என்பது நடைமுறை உண்மை.
பணியாளின் பணியை அவ்வப்போது குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறையாவது மதிப்பீடு செய்ய வேண்டும். நல்ல முன்னேற்றம் இருந்தால் தக்க ஊக்கத் தொகை வழங்கிப் பாராட்ட வேண்டும். தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ள வழிகாட்ட வேண்டும்.
சிறந்த வெற்றி பெற்ற தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் ஒரு உண்மை விளங்கும். அவர்கள் நல்ல ஊழியர்களை இனங்கண்டு தங்கள் நிறுவனத்தில் தக்க வைத்துக் கொள்வார்கள்.
ஒரு தொழிலின் வெற்றி என்பது பலவற்றைச் சார்ந்தது. அவற்றில் முதன்மையானவற்றில் ஒன்று பணியாள் தேர்வு.
– டாக்டர். மா. பா. குருசாமி