நிறைய மனிதர்கள் தங்களுக்கு ஸ்ட்ரெஸ் எனப்படும் மன பதட்டம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கருதுகிறார்கள். நிரந்தரமான மன பதட்டம் நம் மகிழ்ச்சியை கெடுத்து விடும். ஸ்ட்ரெஸ் என்ற ஆங்கில சொல்லுக்கு மன பதட்டம், மன அழுத்தம் என்பது போன்ற சொற்கள் மிகவும் பொருத்தமாக அமையவில்லை என்பதால் நாம் இந்த கட்டுரையில் ஸ்ட்ரெஸ் என்ற சொல்லையே பயன்படுத்துவோம். ஸ்ட்ரெஸ் இல்லாத மனிதர்களே கிடையாது. எனவே ஸ்ட்ரெஸ்சே இல்லாத வாழ்க்கை வாழ முடியாது. ஸ்ட்ரெஸ்சை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்வதுதான் புத்திசாலித் தனமானது.
உங்கள் ஸ்ட்ரெஸ் சார்ந்த நடவடிக்கைகள் காரணமாக உறவுகளை இழப்பீர்கள், நட்புகளை இழப்பீர்கள். கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது உங்கள் நேரத்தை உறிஞ்சி விடும். பதட்டப்பட்டு எடுக்கும் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால் ஸ்ட்ரெஸ்சை மேலாண்மை செய்யக் கற்றுக் கொண்டால் போதும், ஸ்ட்ரெஸ்சால் வரும் சிக்கல்களை புறம் தள்ளி விடலாம். இதற்கான ஒரு ரகசிய ஃபார்முலா உள்ளது. அதை நான் உங்களுக்கு கற்றுத் தரப் போகிறேன். அந்த ஃபார்முலாவின் பெயர் ’90:10 ஃபார்முலா’. இதைக் கடைப்பிடித்தால் உங்களுக்கு வரும் ஸ்ட்ரெஸ்களை ஊதித் தள்ளி விடுவீர்கள்.
நீங்கள் உங்கள் காரில் சென்று கொண்டு இருக்கிறீர்கள். வழியில் திடீரென்று கார் நின்று விடலாம். நீங்கள் விமான நிலையம் செல்கிறீர்கள். நீங்கள் ஏற வேண்டிய விமானம் நான்கு மணி நேர தாமதம் என்கிறார்கள். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் நமக்கு ஒரு கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் இது 10% தான்.
மீதி உள்ள 90% நம் கையில்தான் இருக்கிறது. நீங்கள்தான் அதற்குத் தலைவர். அது எப்படி என்று பார்ப்போமா? ஒரு எடுத்துக் காட்டைப் பார்க்கலாம்.
காலையில் எழுந்து குளித்து விட்டு நல்ல உடைகளை உடுத்திக் கொண்டு வேலைக்குக் கிளம்புகிறீர்கள். உணவு மேசையில் உணவு பரிமாறப்படுகிறது. நீங்களும், உங்கள் குழந்தையும் உட்காருகிறீர்கள். நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டும்; குழந்தை பள்ளிக்கு செல்ல வேண்டும். இருவருக்கும் அவசரம்தான். குழந்தையின் கை தவறுதலாக காப்பி தம்ளர் மேல் பட்டு காப்பி உங்கள் சட்டையில் கொட்டி விடுகிறது. இந்த 10% நடந்து விட்டது. இதில் உங்களுக்கு என்ன கட்டுப்பாடு உள்ளது?
ஆனால், அதன் பின்னர் நடக்கப் போவது உங்கள் கையில்தான் உள்ளது. பொதுவாக என்ன நடக்கும்? மனப் பதட்டத்தில் உடனே நீங்கள் குழந்தையைத் திட்டுவீர்கள். குழந்தை அழத் தொடங்கி விடும். குழந்தையைத் திட்டி முடித்த பிறகு, உங்கள் கோபம் உங்கள் மனைவி மீது திரும்பும். காப்பித் தம்ளரை மேசையிர் ஓரத்தில் ஏன் வைத்தாய், உள்ளே தள்ளி வைக்க வேண்டியதுதானே என்று கத்துவீர்கள். அவர் அதற்கு ஏதாவது பதில் கூறுவார். வாய்ச் சண்டை சிறிது நேரம் நீடிக்கும்.
எரிச்சலுடன் சென்று வேறு சட்டையை மாட்டிக் கொள்வீர்கள். குழந்தையை சமாதானப்படுத்தி பள்ளிக்கு கிளப்பி விட்டாலும், பள்ளி பேருந்து நிற்குமா? அது போய் விட்டிருக்கும். காரில் குழந்தையை அழைத்துச் சென்று விட்டு விடலாம் என்று காரில் ஏற்றிக் கொண்டு அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் பறப்பீர்கள். அப்படியும் பள்ளிக்கு லேட்தான். குழந்தை காரில் இருந்து இறங்கிய உடனேயே உங்களுக்கு கை அசைத்து டாடா கூட சொல்லாமல் பள்ளியை நோக்கி ஓடி விடும். நீங்கள் அலுவலகத்துக்கு செல்லும்போது உங்களுக்கும் அரை மணி நேரம் தாமதம். அவசரத்தில் உங்கள் பேக்-ஐ மறந்து விட்டு வந்ததைக் கண்டு பிடிப்பீர்கள். இன்னும் ஸ்ட்ரெஸ் ஆவீர்கள்.
எல்லாவற்றிற்கும் காரணம், உங்கள் உணர்ச்சியை காலையில் நீங்கள் வெளிப்படுத்திய விதம்தான். காப்பி சட்டையில் கொட்டி விட்டது. இதில் உங்களுக்கு கட்டுப்பாடு ஒன்றும் இல்லை. நீங்கள் என்ன செய்து இருக்க வேண்டும்? குழந்தையிடம், கண்ணே, பரவாயில்லை. இனி கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, வேறு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி இருந்தால், உங்கள் பேக்-ஐ மறந்து இருக்க மாட்டீர்கள், குழந்தையும் உங்களுக்கு கை அசைத்து டாடா சொல்லி விட்டு பேருந்தில் ஏறி இருப்பாள். நீங்களும் மகிழ்ச்சியுடன் பத்து நிமிடங்களுக்கு முன்பே அலுவலகம் சென்று இருப்பீர்கள். உங்கள் மனைவியும் இயல்பாக அவர் அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்று இருப்பார். இதை 90% என்று வைத்துக் கொள்ளலாமா?
இரண்டு முறைகளையும் கவனியுங்கள். முடிவில் ஏன் இந்த வேறுபாடு? நீங்கள் உங்களுக்கு ஏற்பட்ட ஸ்ட்ரெஸ்சை எப்படி எதிர்கொண்டீர்கள் என்பதில்தான் முடிவு அமைகிறது. தாமரை இலை மீது தண்ணீர் நிற்காது என்பது நமக்கு தெரியும். அதைப் போல, நமக்கு வரும் ஸ்ட்ரெஸ்சையும் தண்ணீர் தாமரை இலை மீது வழுக்கிக் கொண்டு செல்வதைப் போல செல்ல விட வேண்டும். அதற்கு பதிலாக ஸ்பாஞ்ச் எல்லாவற்றையும் உறிஞ்சிக் கொள்வதைப் போல உறிஞ்சி வைத்துக் கொள்ளக் கூடாது.
நீங்கள் காரில் சென்று கொண்டு இருக்கிறீர்கள். முந்தக் கூடாத இடத்தில் ஒரு கார் உங்களை முந்திச் செல்கிறது. இந்த இடத்தில் ஒன்று, நீங்கள் ஸ்ட்ரெஸ் ஆகி, அவரைத் திட்டவீர்கள். அவர் பதிலுக்கு உங்களைத் திட்டுவார். ஸ்ட்ரெஸ் இன்னும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக, அதைப் பற்றி சற்றும் ஸ்ட்ரெஸ் அடையாமல் நீங்கள் பாட்டுக்கு உங்கள் காரை ஓட்டிச் சென்றால், அமைதி உங்கள் உள்ளத்தில் நிரம்பும். அந்த கார் உங்கள் நாளைக் கெடுப்பானேன்?
இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போமா? உங்கள் விமானம் தாமதம் என்று தெரிந்து விடுகிறது. அதற்காக அந்த விமான நிறுவன கவுன்டரில் உள்ளவரிடம் உங்கள் ஸ்ட்ரெஸ்சைக் கொட்டி என்ன ஆகப் போகிறது? அவரால் அந்த தாமதத்தை தவிர்த்து இருக்க முடியுமா, என்ன? அதற்கு பதிலாக, உங்கள் லேப்டாப்பில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யுங்கள். படிக்க வேண்டிய புத்தகத்தைப் படியுங்கள். சகபயணிகளுடன் பேசி நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு இந்த 10%:90% ஃபார்முலா தெளிவாகப் புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். இதை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். அதன் விளைவுகளைப் பார்த்து வியப்பீர்கள்.
– சு. வெங்கடாசலம்