பற்சொத்தை எப்படி ஏற்படுகிறது? எப்படி தடுக்கலாம்?
பற்சொத்தை பாக்டீரியாக்கள் எனப்படும் நுண் உயிரிகளால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில், பல் இடுக்குகளில் உணவு துகள்கள் தங்கும்போது, பாக்டீரியாக்கள் உணவுத் துகள்களின் மீது பல்கிப் பெருகி அவற்றில் உள்ள மாவுப் பொருள்கள், சர்க்கரைச் சத்தை உண்டு ஒரு வகை அமிலத்தை உண்டு பண்ணுகின்றன. அந்த அமிலம் பல்லில் உள்ள சிப்பி(எனாமல்), தந்தினி போன்ற பகுதிகளை தாக்கி சிதைக்கின்றன. இந்த சிதைவு பற்களின் நடுவில் உள்ள பற்கூழைச் சென்று அடையும் போது வலியை ஏற்படுத்துகின்றன.
பற்சொத்தை வராமல் தடுக்க மாவுப் பொருட்கள், இனிப்புகளை உண்ட பின் பல்துலக்கி வாயைக் கொப்பளிக்க வேண்டும். அந்த நேரத்தில் பல்துலக்கும் வாய்ப்பு இல்லாவிட்டால் வாயையாவது நன்றாக கொப்பளித்து விட வேண்டும். நார்ச் சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை நிறைய உண்ண வேண்டும். புரதம், கால்சியம் உள்ள முட்டை, மீன் போன்ற உணவுகளையும் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நாள்தோறும் காலையில், இரவில் பல்துலக்க வேண்டும். மென்மையான பிரஷ்களைப் பயன்படுத்த வேண்டும். மென்மையாக தேய்க்க வேண்டும். நீண்ட நேரம் தேய்த்துக் கொண்டிருக்கத் தேவை இல்லை. சில நிமிடங்கள் தேய்த்தாலே போதும்.
ஒருவேளை பற்சொத்தை வந்து விட்டால், அது மேலும் பெரிது ஆவதற்குள் மருத்துவரிடம் சென்று அடைத்துக் கொள்ள வேண்டும்.
பற்காரை ஏன் உண்டாகிறது?
உணவுப் பொருட்கள் பற்களின் மீது படிந்து, அவற்றின் மீது பாக்டீரிக்கள் குவிந்து பற்படலத்தை ஏற்படுத்துகின்றன. இது நாட்பட நாட்பட உமிழ் நீரில் உள்ள கால்சியத்தை ஈர்த்து கெட்டிப்பட்டு காரையாக மாறுகிறது. பல் மருத்துவரிடம் சென்றால் காரையை அகற்றுவது பற்றி ஆலோசனை வழங்குவார்.
பற்கள் ஏன் நிறம் மாறுகின்றன?
புகை பிடித்தல், பான்பராக் மெல்லுதல், அடிக்கடி பீடா போடுதல், கைனி பயன்படுத்துதல் போன்றவற்றால் பற்கள் நிறம் மாறும். க்ளோர் ஹெக்டின் என்ற வாய் கொப்பளிக்கும் மருந்தை அடிக்கடி பயன்படுத்தினாலும் பற்கள் நிறம் மாறும். மிகச் சிலருக்கு பாரம்பரிய வளர்ச்சிக் குறைபாடுகளாலும், கர்ப்ப காலத்தில் கொடுக்கப்படும் மருந்துகளாலும், சில நோய்களாலும் கூட பற்கள் மஞ்சள், பிரவுன் நிறத்தில் காட்சி அளிக்கும். மாறிய நிறத்தை வெண்மையாக தோன்றச் செய்ய டூத் பாலிஷிங் போன்ற மருத்துவ முறைகள் வந்து உள்ளன. இது தவிர வேறு சில முறைகளும் உள்ளன. மருத்துவர் ஆலோசனை கூறுவார்.
பற்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
முதன்மையாக உணவுத் துணுக்குகள் பற்களுக்கு இடையே தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக உணவு உண்டபின் வாய் கொப்பளிக்க வேண்டும். நீரைப் பீய்ச்சி அடித்து பற்களுக்கு இடையே உள்ள உணவுத் துணுக்குகளை அகற்றும் கருவிகள் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் இந்த கருவியை வாங்கிப் பயன்படுத்தலாம். இரவில் படுக்கப் போகும் முன் கண்டிப்பாக பல் துலக்க வேண்டும். ஈறுகளை உள்ளேயும், வெளியேயும் விரல்களால் அழுத்திக் கொடுக்க வேண்டும். நல்ல மென்மையான மூலிகைப் பற்பொடியை ஈறுகளில் தடவி பின்னர் மென்மையாக மசாஜ் செய்வதும் பயன் அளிக்கும். இவ்வாறு மசாஜ் செய்யும்போது விரல்களின் நகங்களை வெட்டி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈறுகளில் நகங்கள் குத்தி காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை இரவில் தூங்கப்போகும் முன் வாய் கொப்பளிக்கப் பயன்படுத்துவதும் பாக்டீரியாக்கள் வளர்ச்சியை தடுக்கும். எண்ணையை வாயில் ஊற்றி பதினைந்து நிமிடங்கள் கொப்பளித்து துப்ப வேண்டும்.
– டாக்டர். ஜெயச்சந்திரன்