“குழந்தை திக்க ஆரம்பித்தால், அதை அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு அதிக பாது காப்புணர்வையும், சரியான அளவு பாராட்டையும் நல்க வேண்டும். திக்குதல் 100 விழுக்காடு சரி செய்யக்கூடிய ஒரு நடத்தை என்பதனைப் புரிந்து கொண்டு, முதலில் விட இப்பொழுது நன்றாகப் பேசுகிறாயே, கெட்டிக்காரி, என்று பாராட்டுவது நன்மை தரும். திக்கிப் பேசும்போது, அதனைப் பெரிதுபடுத்தக் கூடாது”
திக்கித் திக்கிப் பேசுவோரை ராகம் போட்டுப் பாடச் சொல்லுங்கள். எந்தத் தடையும், திக்குதலும் இன்றி நன்றாகப் பாடுவார்கள். மேலும் திக்குதல் சூழ்நிலைக்கு ஏற்ப குறைவாகவும், அதிகமாகவும் இருக்கும். குடும்பத்துடன் அல்லது நெருங்கிய நண்பருடன் பேசும்போது திக்குதல் குறைவாகவும், தெரியாத உயர்ந்த நிலையில் உள்ள மனிதரிடம் பேசும்போது திக்குதல் அதிகமாகவும் இருக்கும். பெரும்பாலும் செல்பேசியில் பேசும்போதும். பயணச் சீட்டு (டிக்கட்) கேட்கும் போதும் அதிகமாக இருக்கும். சிலருக்கு தொடக்கத்தில்தான் திக்கும். சொற்களே வராது. மற்றும் சிலருக்கு தொடங்கிய பிறகு இடை இடையே திக்கும். சில எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் அதிகமாகத் திக்கும். சான்றாகக, தி, சு என்று தொடங்கும் கல்லிடைக்குறிச்சி, திருவள்ளூர், சுந்தரனார் என்ற சொற்கள் அதிகம் திக்கும்.
திக்குதல் ஆண், பெண் வேறுபாடோ; சாதி, சமய, வயது, மொழி வேறுபாடுகளைப் பார்ப்பதில்லை. எல்லோரையும் பாதிக்கும். பெரும்பாலும் படிப்பதைவிட பேசும்போதே அதிகம் திக்குதல் வரும். தாய்மொழியில் பேசும்போது குறைவாகவும், அந்நிய மொழி, சான்றாக ஆங்கிலத்தில் பேசும் போது அதிகமாகவும் இருக்கும். திக்குதல் மலை வாழ் மக்களிடையே இல்லை என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
திக்குதல் காரணங்கள்
திக்குவாய் பரம்பரையாக வருவது அல்ல. இது ஒரு நோய் அல்ல. கூர்ந்து கவனித்தால் குழந்தை 3,4 வயது வரை நன்கு பேசத் தொடங்கிய பிறகுதான் திக்கத் தொடங்குகிறது. தவிப்பு நிலையினைக் குறைக்கும் ஒரு நடத்தையாகத் தொடங்கும் திக்குதல் நாளடைவில் ஒரு பழக்கமாக மாறி விடுகிறது. நாளடைவில் இந்தத் திக்குதல் பழக்கமே தவிப்பு நிலையை அதிகரிக்கவும் செய்கிறது. பாதுகாப்பு அற்ற உணர்வு, பயந்த சுபாவம், தன்னம்பிக்கை குறைவு உள்ள சிறுவர் சிறுமியரே திக்குதல் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். எனவே திக்கு வாய் பெரும்பாலும் உளவியல் காரணங்களால்தான் ஏற்பட்டு, நிலை பெறுகிறது. மூக்கு தொண்டை நாக்கு, வாய் போன்ற உறுப்புகளில் கோளாறு காரணமாகத் திக்குவாய் வருவது மிகமிகக் குறைவு.
திக்குதல் ஏற்படுத்தும் விளைவுகள்
பலவேளைகளில் திக்குதல் மனஉளைச்சலுக்கு இட்டுச் செல்லுகிறது.
குழந்தைகளின் சீரான ஆளுமை வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை இரண்டு. அவை, 1. பாதுகாப்பு உணர்வு 2. நிறை உணர்வு – என்னால் முடியும், எனக்குத் திறமை இருக்கிறது என்ற உணர்வு.
இவை போதிய அளவு கிடைக்காத குழந்தைகளே திக்குதல் போன்ற பல சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். திக்குதல் அறிகுறி தோன்றிய உடனே திக்குதலுக்கு அதிக கவனம் தருவதும் பரிதாபப்படுவதும், கவலைப்படுவதும் தேவையற்றது.
குழந்தை திக்க ஆரம்பித்தால், அதை அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு அதிக பாதுகாப்பு உணர்வையும், சரியான அளவு பாராட்டையும் நல்க வேண்டும். திக்குதல் 100 விழுக்காடு சரி செய்யச் கூடிய ஒரு நடத்தை என்பதனை புரிந்து கொண்டு, முதலில் விட இப்பொழுது நன்றாகப் பேசுகிறாயே கெட்டிக்காரி”, என்று பாராட்டுவது நன்மை தரும். திக்கிப் பேசும்போது, அனுசரணையாக அதனைப் பெரிது படுத்தக் கூடாது.
நீட்டிப் பேசும் பயிற்சி
திக்குபவர் பெரும்பாலும் வேக வேகமாகப் பேசுவார்கள். நிதானமாமக நிறுத்தி, இடையிடையே மூச்சு இழுத்து விட்டு, சொற்களைப் பிரித்து பேச வேண்டும். சான்றாக, ‘எங்கே போகிறாய்’? என்பதனை எ… ங்… கே… போ..கி.. றா…ய்…. என்று மிக நிதானமாகப் பிரித்துப் பேச வேண்டும். படிக்கும் போதும் இவ்வாறே பிரித்துப் பிரித்துப் படிக்க வேண்டும். இதனை “நீட்டிப் பேசும் பயிற்சி” எனலாம். உடல் தசைகளைத் தளர்த்திக் கொள்வதும், இடையிடையே நன்கு மூச்சு இழுத்து விடுவதும் பலன் தரும். திக்கும் போது சிலருக்கு முகத்தில் உள்ள தசைகள் துடிப்பதனை நீங்கள் பார்த்தது இருக்கலாம். இவர்களுக்கு முகத்தின் தசைகளைத் தளர்த்துவதும் மூச்சு இழுத்து வெளிவிடுவதும் மிக முக்கியம். நீட்டிப் பேசும் பயிற்சியினை வீட்டில் நாள்தோறும் ஓரிரு மணி நேரம் மிகுந்த அக்கறையோடு செய்ய வேண்டும்.
அமைதி நிலைப் பயிற்சி
பல உடல் மனச் சிக்கல்களுக்கு மூல காரணம் பதட்டம். இந்த பதட்டத்தை குறைக்க மனதை ஒருமுனைப்படுத்தும் பயிற்சி, அமைதி நிலைப்பயிற்சி ஆகியன மிகவும் சிறந்தவை. மன, உடல் அமைதிக்குப் பின் பேசினால் திக்குதல் குறைவாக இருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.
திரும்பத் திரும்ப பேசும் பயிற்சி
திக்குதல் காரணமாக எழுந்து உள்ள பயத்தைக் குறைப்பதற்கு உரியது திரும்பத் திரும்பப் பேசும் பயிற்சி. செல்பேசியில் பேசும்போது திக்குதல் அதிகமானால் திரும்பத் திரும்ப செல்பேசியில் பேசவேண்டும், அதுவும் நிதானமாக நீட்டி, அமைதியாக, இடையிடையே மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு பேச வேண்டும்,
வகுப்பு எடுக்கும் போது மட்டும் திக்குதலால் அவதியுற்ற ஒரு பள்ளி ஆசிரியருக்கு இந்த பயிற்சி முழுப்பலன் தந்தது. பயிற்சியின் தொடக்கத்தில் 3,4 மாணவர்களை மட்டும் வைத்து அவருக்குப் பிடித்த எளிமையான பாடங்களை வகுப்பில் நடத்தினார். பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. பாடமும் கடினமாயிற்று. திரும்பத் திரும்ப பேசும் பயிற்சியால் பயம் மறைந்து அவர் திக்குதல் முழுவதும் சீராயிற்று.
உணர்தல் பயிற்சி
“பயிற்சி முறைகளால் திக்குதல் எனக்குக் குறைந்து வருகிறது” என்ற நம்பிக்கை, ஆழமான உணர்வு இவர்களுக்கு கண்டிப்பாகத் தேவை. ஐந்து நிமிடம் பேசும்போது, படிக்கும்போது எத்தனை முறை திக்குகிறது என்று முதலில் கணக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 2,3, நாட்களுக்குப் பின் எவ்வளவு குறைந் திருக்கிறது என்பதனை குறித்துக் கொண்டு, மீண்டும் மீண்டும், தேவலை எனக்குத் திக்குதல் குறைந்து உள்ளது” என்று சொல்லிக் கொள்ள வேண்டும். குடும்பத்தினரும் நண்பர்களும் “நிச்சயமாக, நீ நன்றாகப் பேச தொடங்கி விட்டாய், முழுதும் நன்றாகப் பேச முடியும் என்று வளர்ச்சி குறித்துப் பாராட்ட வேண்டும், உணர்த்த வேண்டும். நம்பிக்கைதான் உயர்வு தரும்.
மாற்றி மாற்றி படிக்கும் பயிற்சி
வெயிலில் செல்லும் ஒருவரை அவரது நிழல் பின் தொடர்கிறதல்லவா? நன்றாகப் படிக்கும் ஒருவரைத் தொடர்ந்து நிழல்போல் திக்குதல் உடையவர் படிப்பது நிழற்பயிற்சி. இப்படிப் படிக்க நூலின் இரு பிரதிகள் தேவை. திக்குதல் இல்லாதவர் ஒரு பிரதியை நிதானமாகப் படிக்க, திக்குதல் உடையவர் ஓரிரு நிமிடங்கள் பின் தங்கி நிழல்போல அவரைப் பின் தொடர வேண்டும். தொடர்ந்து பல நாட்கள் இப்பயிற்சியினை மேற்கொள்வதும், ஏற்படும் முன்னேற்றத்தினை உணர்ந்து மகிழ்வதும் அவசியம்.
எதிர்மறைப் பயிற்சி
க- என்ற எழுத்தில் தொடங்கும் கல்லிடைக் குறிச்சி, கமலஹாசன், கண்ணின்மணி – இது போன்ற சொற்களை எப்படித் திக்குகிறதோ அப்படியே திக்கித் திக்கிக் குறைந்தது 20,30 முறை சொல்ல வேண்டும்.
எடுத்துக்காட்டு க..க.க க… கல்லிடைக்குறிச்சி என்று திக்கினால், இதேபோன்று க…………… கல்லிடைக்குறிச்சி க……… என்று வேண்டும் என்றே திக்கித் திக்கிச் சொல்ல வேண்டும். 3,4 முறை திக்கிய பிறகு அதற்குப்பின் திக்காமல் சொல் வந்தாலும் வேண்டும் என்றே திக்கித் திக்கிச்சொல்வது அவசியம். இந்த எதிர் மறைப் பயிற்சியால் திக்கும் சொற்களை எளிதில் உச்சரிக்க முடியும்.
திக்குதலை முழுவதுமாக மாற்ற உளவியல் முறைகள் பல இருக்கின்றன. “எப்படி யாவது நான் திக்குதலிலல் இருந்து விடுபட்டு நல்ல முறையில் கண்டிப்பாகப் பேச வேண்டும்” என்ற மிகப் பெரிய உறுதிதான் திக்குதல் தீர்க்க அடிப்படைத் தேவை.
இப்போது இணையத்திலும் பல பயிற்சிகள் உள்ளன. கணினி முன் அமர்ந்து கொண்டு அந்த பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
– கே.வி. காளியப்பன்