வேதி உரங்கள், வேதி பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கை உரம், இயற்கை பூச்சி மருந்துகள் பயன்படுத்தி விளைவிக்கப்படும் ஆர்கானிக் வேளாண் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றை விற்பனை செய்வதற்கு என்றே பல ஆர்கானிக் வேளாண் பொருட்கள் விற்பனை நிலையங்கள் தோன்றி வருகின்றன. இயற்கை வேளாண்மை செய்வது என்பது தற்போது ஒரு இயக்கமாகவும் வளர்ந்து வருகிறது.
மக்களுக்கு நஞ்சில்லா உணவுப் பொருட்களை வழங்குவதற்கு இயற்கை வேளாண்மை மிகச் சிறந்த வழியாகும். மேலும் தற்போது இதன் வணிக வாய்ப்பும் அதிகரித்து வருவதால் நல்ல லாபமும் கிடைக்கும்.
Also read: உள்ள உறுதி இருந்தால் தடைகளைத் தகர்க்கலாம்
இதனால் கணினித் துறையில் இருந்து, வேளாண் துறைக்கு வரும் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். தங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் என்று நிலங்களை வாங்கி வேளாண்மை செய்கிறார்கள்.
நிலத்தை வாங்கியதுமே செப்பனிட்டு முதலில் பண்ணைக் குட்டைகளை அமைக்க வேண்டும். ஒரு பகுதியில் தேக்கு, குமிழ், மருது, புங்கன் முதலான மரங்களை நடலாம். மரங்கள் அனைத்தும் நீண்ட கால அடிப்படையில் நல்ல பணப் பயன் தரக்கூடியவை. புங்கன் போன்ற மரங்களின் இலைகள் நல்ல இயற்கை உரமாகும்.
இவை தவிர சுமார் மூன்று ஆண்டுகளில் பயன் தரக்கூடிய மா, கொய்யா போன்ற பழ மரக்கன்றுகளை நடலாம். இன்னொரு பகுதியில் மூன்று முதல் ஆறு மாதங்களில் பயன் தரத்தக்க கத்தரி, தக்காளி போன்ற காய்கறிகளையும், ஊடு பயிராக நிலக்கடலை, உளுந்து ஆகியவற்றையும் பயிரிடலாம். ஒரு மாதப்பயிராக கீரை வகைகளையும் விளைவிக்கலாம். அகத்திக் கீரையையும் வளர்க்கலாம்.
முதல் மூன்று ஆண்டுகள் பெரிதாக லாபம் எதுவும் வராது. காய்கறிகளில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான். ஆனால் நான்காம் ஆண்டில் இருந்து கணிசமான லாபம் வரத் தொடங்கி விடும். இப்போது வயல் வருமானத்தைக் கொண்டே செலவுகளையும் செய்து கொள்ள முடியும். முதல் மூன்று ஆண்டுகள் கையில் இருந்துதான் பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும்.
கீரை, காய்கறிகள், பழங்கள் என்று சுழற்சி முறையில் அறுவடை செய்து விற்பனை செய்யலாம்.
பண்ணையில் மாடுகள், கோழிகளளையும் வளர்க்கலாம். இவற்றின் மூலம் கிடைக்கும் எரு மற்றும் ஏராளமாகச் சேரும் இலைதழைகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்துக் கொள்ளலாம்.
நெல், வேர்க்கடலை போன்றவற்றையும் விளைவிக்கலாம். அதற்கேற்ப நிலத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டும். இயற்கை வேளாண்மையில் வெற்றி பெறுபவர்களைப் பார்த்து அருகில் உள்ள விவசாயிகளும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இயற்கை வேளாண்மையுடன் நவீன தொழில்நுட்பத்தை இணைக்கும்போது பெரும் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
எங்கோ தொலைவில் உள்ள வயலின் மின்மோட்டாரை செல்பேசி வாயிலாக இயக்கவும், நிறுத்தவும் முடியக்கூடிய தொழில் நுட்பம் இப்போதே நடைமுறைக்கு வந்து விட்டது. எதிர்காலத்தில் நிலத்தின் ஈரப்பதம், காற்றின் தன்மை இவற்றை உணர்ந்து மின்மோட்டாரை கணினி தானாகவே இயக்கி, நிறுத்தும் தொழில் நுட்பம் வந்து விடும். இல்லத்தில் அல்லது அலுவலகத்தில் அமர்ந்தபடியே பண்ணை நிலம் முழுவதையும் அங்கு பொருத்தப்பட்டு இருக்கும் கேமராக்கள் வாயிலாக பார்த்து, தேவைப்படும் ஆலோசனைகளை அங்குள்ள ஊழியர்களிடம் கூறி வேலை வாங்கும் காலக்கட்டம் வரும் காலங்களில் நிச்சயம் உருவாகும்.
Also read: நாட்டுக் கோழி வளர்த்து நல்ல லாபம் பெறுவது எப்படி
அண்மைக் காலமாக நகரங்களில் உள்ளவர்களுக்கு தங்கள் இல்லத்தின் மாடிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கும் ஆவல் வந்து உள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் மாடி வீடுகளில் வசிப்போருக்கு மண்தொட்டி வைத்து பராமரிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. அதற்காக தென்னைநார் நிரப்பிய தொட்டிகள், பைகள் விற்பனைக்கு வந்து உள்ளன. இவற்றை வாங்கி அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
வேம்பு, நொச்சி, ஆடாதோடை, தும்பை போன்ற மூலிகைத் தாவரங்கள் மூலம் பூச்சி விரட்டிகள் தயாரித்து சிலர் பயன்படுத்துகிறார்கள்.
இயற்கை வேளாண்மைக்குத் தேவைப்படும் உரம், பூச்சி மருந்துகள், விதைகள் போன்றவற்றையும், இயற்கை வேளாண் விளை பொருட்களையும் விற்பனை செய்வதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் விற்பனை மையங்கள் இருக்கின்றன. பொருட்களை முன் எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும். இந்த துறையிலும் போலி நிறுவனங்கள் சில உள்ளன.
– பா. செந்தில் குமார்.(99400 28160).