Latest Posts

உள்ள உறுதி இருந்தால் தடைகளைத் தகர்க்கலாம்

- Advertisement -

உறுதி என்னும் சொல் உறுதல் என்னும் வினைச் சொல்லை ஒட்டிப் பிறந்த சொல்லாகும். உறுதல்-உறுதி.

உறுதல் என்னும் சொல்லுக்கு, அடைதல், உண்டாதல், கிடைத்தல், கூடல், பொருந்துதல், சேர்தல், தங்குதல், வருதல், மிகுதல், ஒத்தல் முதலிய பொருட்கள் உண்டு.

ஒரு செயலைச் செய்யும் முன்னம் அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உண்டாகும். அவ்வாறு உண்டான எண்ணம், அந்தச் செயல் செய்து முடிக்கப்படும் வரை உள்ளத்திலேயே தாங்கியிருத்தல் வேண்டும்.

இன்னும் சொன்னால் அந்த எண்ணம் உண்டாகி. தோன்றிய அளவோடு நில்லாமல், அந்தச் செயல் செய்து முடிக்கப்படும் வரை உள்ள கால நீட்டிப்பு, உழைப்பு மிகுதி, தேவை நிலைகள், எதிர்தாக்கங்கள் முதலியவற்றிற்கு ஏற்றபடி மேலும் மேலும் மிகுந்து வலிவாகிக் கொண்டே (அந்த உணர்வு) உள்ளத்தை விட்டுப் பெயராமல் அல்லது நீங்கி விடாமல் அல்லது குறைத்து விடாமல் நிலைத்து நிற்க வேண்டும்.

அத்தகைய மிகுந்து வளரும் எண்ணத்தின் வலிவுணர்வுக்கே உறுதி என்று பெயர். இந்த உணர்வுக்கு ஊக்கம் என்று வேறு பெயரும் உண்டு. ஊக்குதல்-மிகுதல். அஃதாவது தோன்றிய அளவில் மெலியாது, மேலும் மேலும் வலிவு பெறுதல்.

Also read: தொழில் வளர்ச்சிக்கு உதவும் தொடர் கற்றல்

ஒரு செயலைச் செய்ய முற்படும் பொழுது அதற்கு வேண்டிய உழைப்பின் அளவு நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரு பெரிய கல்லைப் பார்த்தவுடன் அதை நாம் ஒருவரே புரட்டி அல்லது அப்புறப்படுத்தி அல்லது தூக்கி விடலாம் என்று கருகலாம். ஆனால் அதை நெருங்கி அசைத்துப் பார்த்த பின்தான் இன்னொருவரும் அதற்கு வேண்டும் என்பது நமக்கு தெரியவரும். இனி, இன்னொருவருடன் முயல்கின்ற பொழுதுதான் மேலும் ஒருவர் தேவைப்படுவது தெரியும். இப்படி ஒருவர் இருவராக அசைத் தசைத்துப் பார்த்த பின் ஐந்து பேர் வந்துதான் அதை நகர்த்த முடியும் என்று ஒரு நிலை ஏற்படும். இதுதான் அந்த வேலையைச் செய்வதற்குரிய உழைப்பு அளவு.

இந்த அளவைக் கண்டு பிடிக்க ஓரளவு காலத்தை நாம் செலவிட்டு இருக்கிறோம். இது நாம் நினைத்திருந்த காலத்திற்கும் மேலான காலத்தை எடுத்துக் கொண்டது. இது கால நீட்டிப்பு ஆகும். இந்த உழைப்பு அளவு முன்பே நமக்குத் தெரிந்திருந்தால் அந்தக் காலத்தை நாம் மீதி பண்ணியிருக்க முடியும். வேலையும் முன்னரே முடிந்திருக்கும்.

இனி, அந்தக் கல்லை ஐந்து ஆட்களைக் கொண்டு புரட்ட வேண்டி வந்து ஐந்து ஆட்கள் நமக்குக் கிடைக்காமல் போனால், இரண்டு ஆட்களையும் ஒரு கடப்பாரையையும் கொண்டு புரட்டி விடும்படி ஒரு நிலையும் இருக்கும். அப்பொழுது இரண்டு ஆட்கள், ஒரு கடப்பாரை நமக்குப் போதும். அது தேவைநிலை.

இந்த நிலையும் நமக்கு முன்பே தெரிந்திருந்தால், மேலும் மூன்று ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அப்பொழுது காலம் இன்னும் நமக்குக் குறையும், முயற்சியும் குறையும். இனி, அந்தக் கல்லை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுதுதான் அது நிலத்தின் மேல் கிடப்பதாகத் தெரிந்திருக்கும். ஆனால் அதைப் புரட்ட முயற்சி செய்யும் பொழுதே, அது நிலத்தினுள் சில அடிகள் கீழே புதைந்து இருப்பதும் நமக்குத் தெரிய வருவதாக வைத்துக் கொள்வோம். அதுதான் நம் செயலுக்கு நேர்ந்த எதிர் தாக்கம் ஆகும்.

அஃதாவது, நாம் ஒரு செயலை இயல்பாக எண்ணிச் செய்துவிட முயற்சி செய்கையில், நாம் நினைத்திராத படி இயற்கையாகவோ, அல்லது ஓர் ஆள் வழியிலோ நமக்கு வரும் தடையோ, எதிர்ப்போ எதிர் தாக்கம் ஆகும். நாம் ஒரு செயலைச் செய்ய வெளியே புறப்பட்டுக் கொண்டிருப்போம். உடனே மழை வரும். புறப்பட முடியாமல் போகும். இஃது இயற்கை எதிர் தாக்கம்.

நாம் ஒரு வாணிபம் செய்ய ஓர் இடத்தைத் தேர்ந்தெடுப்போம். அதே இடத்துக்குப் பக்கத்தில் இன்னொருவர் அதே வாணிபத்தைச் செய்ய முற்படுவார். அஃது ஆள் எதிர் தாக்கம்.

இவ்வாறன்றி வேறு ஒருவர் நம் மேல் பொறாமை கொண்டு அல்லது பகை கொண்டு, நாம் செய்ய எடுத்துக் கொண்ட செயலுக்கு முட்டுக் கட்டை போடுவார்; அல்லது தடை செய்வார், அல்லது நம் வேலையைக் கெடுக்கும் படியான சூழலை உருவாக்குவார். இவையெல்லாம் ஆள் எதிர் தாக்கந்தாம்!

இவ்வாறு ஒவ்வொரு செயலுக்கும் அஃது எந்த வகைச் செயலாக இருந்தாலும். அதற்கு இயற்கையாகவும், செயற்கையாகவும் பல தடைகள், எதிர்ப்புகள், கேடுகள், தேவை நிலைகளில் பற்றாக் குறைகள், உழைப்பு அளவை நிறைவு செய்ய இயலாமை முதலிய நிலைகள் கட்டாயம் முழு அளவிலோ, சிறு அளவிலோ நாம் எடுத்துக் கொண்ட வேலைக்குத் தக்கபடி வந்தேதான் தீரும்.

எதிர்ப்பு வராத எந்தச் செயலும் உலகத்தில் இல்லை. அறிவியலில் ஒர் உண்மை உண்டு. ஒவ்வொரு செயலுக்கும் ஒர் எதிர்ச் செயல் உண்டு (For every action there is a reaction) என்பதை நாம் எப்பொழுதும் எந்த நிலையிலும் மறந்து விடக் கூடாது. உலகமும் அதிலுள்ள அனைத்து ஆற்றல்களும் நேர் ஆற்றல் எதிராற்றல் என்ற அளவிலேயே இயங்குகின்றன என்று நாம் முன்பே அறிந்திருக்கிறோம்.

அந்த உண்மை எல்லாச் செயல்களுக்குமே பொதுவானது. எனவே ஒரு செயலைச் செய்யத் தொடங்கியவுடன் அதற்கு ஏற்படும் தடைகளைப் பார்த்து நம் உள்ளம் சோர்ந்து விடும். துவண்டு விடும், வருத்தம் கொண்டு விடும்.

பின்னர் படிப்படியாக இந்தச் செயலே வேண்டாம் என்று அமைந்து விடும். ஆனால், அவ்வாறு சோர்ந்து விடாமல், துவண்டு விடாமல், வருத்தம் கொள்ளாமல், அமைந்து விடாமல், மேலும், மேலும் அந்த செயலை செய்வதில் ஆர்வமும் முனைப்பும் கொண்டு ஈடுபடுதல் வேண்டும். அதையே உறுதி, ஊக்கம் என்னும் சொற்கள் குறிக்கின்றன.

இந்த இரண்டு சொற்களும் நம்முடைய இரண்டு வகையான தன்மையையும், ஊக்கம் என்பது உள்ள உணர்வுத் தன்மையும் குறிக்கும். அவ்வாறு குறித்தாலும் உடலில் உள்ளமும் உள்ளத்தோடு உடலும் பொருந்தி இருப்பதால், பொதுவாக இரண்டின் தன்மைகளையுமே இவ்விரண்டு சொற்களும் குறிக்கக் கூடியன. அவ்வாறு ஒன்றுக்கே உரிய சொல்லை இன்னொன்றுக்குக் குறிக்கும் பொழுது, அதனதன் இயல்பான தன்மைகள் இன்னும் மிகுந்து தோன்றும் படியான உணர்வுகளை அவை உணர்த்துவதை அறிந்து மகிழலாம்.

அதேபோல், உள்ளம் ஊக்கமாக இருக்கிறது என்கிற பொழுது இயல்பான நிலையில் அது செயல் செய்யும் விருப்பத்தில்-ஆர்வத்தில் அஃது இருக்கிறது என்பதை உணர்த்தும். உள்ளம் உறுதியாக இருக்கிறது. என்னும் பொழுது, அச்செயல் செயல் முடிக்கும் வரை அந்த விருப்பம் தளராமல் இருக்கும் என்பதை அஃது உணர்த்தும்.

தமிழில்தான் இத்தகைய நுண்பொருளை உணர்த்தும் சொற்களை நாம் பார்க்க முடியும். ஆகவே, நாம் எந்த செயலைச் செய்வதற்கு முற்பட்டாலும், அந்தச் செயல் முடியும் வரை, அதனால் வரும் எவ்வகை இடர்பாடுகளையும், எதிர்ப்புகளையும், தொல்லைகளையும், பற்றாக்குறைகளையும் கால நீட்டிப்பையும் கண்டு சோர்வு கொள்ளாமல், அச்செயலைத் தொடங்கிய அதே ஆர்வத்துடன் இன்னும் சொன்னால், மேலும் மேலும் மிகுந்த முனைப்புடன் உள்ள உறுதியுடனும், உடல் ஊக்கத் துடனும் செய்து முடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இதனை இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்கமாகப் பார்ப்போம்.

ஊக்கம் என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர், மனம் மெலிதலின்றி, வினை செய்தற்கண் கிளர்ச்சி உடைத்தாதல் என்று பொருள் தருகிறார். ஒரு செயலிலோ, நோக்கிலோ, உள்ளமானது படிந்து அல்லது பற்றி அதைப் பெயராது அதிலேயே இறுதி வரை உறுதி கொண்டிருப்பதால், அதற்கு ”ஒருவந்தம்” என்னும் ஒரு சொல் திருக்குறளில் ஆளப் பெறுகிறது.

ஒரு செயல் முயற்சி கொண்டு உழைக்குங்கால், அதில் ஊதியம் வரவில்லை யென்றோ, அல்லது முன்னரே இட்ட முதலை இழந்து விட்டோமே என்றோ, ஊக்கமுடையவர்கள் துன்பப்பட மாட்டார்கள். மேலும் மேலும் முயற்சி செய்வார்கள்.

மக்களுக்கு உறுதியாக இருக்க வேண்டியவை மூன்று. அறிவு, உள்ளம், உடல். இந்த மூன்று பொருள்களும் உறுதியாக இருந்தால்தான், இந்த உலக வாழ்க்கை மிக நிறைவாகவும், சிறப்பாகவும் நடைபெறும்.

அறிவு, உறுதி என்பது, ஒரு செயலையோ பொருளையோ பற்றித் தெரிந்திருக்கின்ற அறிவு. அதில் ஈடுபாடு கொண்ட பின் தவறாகவோ நெகிழ்ச்சி அடைந்தோ போகுமானால், அந்த அறிவால் பயனில்லை. அஃது உறுதியற்ற அறிவாகும். நாம் தெரிந்த அறிவு நிலை இறுதி வரை சரியானதாகவே இருந்தால்தான் அஃது இறுதியான அறிவு ஆகும்.

அதே போல் நம் உடலும் ஒரு செயலைத் தொடங்கும் பொழுது இருப்பது போல், அச்செயல் முடிவடையும் வரை உறுதியாக இருத்தல் வேண்டும். அதுவே உடலுறுதி.

இனி, இரண்டிற்கு மேலாக உள்ளம் உறுதியுடன் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அறிவுறுதியும் குலையா திருக்கும். உடலுறுதி குறைந்தாலும் சரி செய்து கொள்ளலாம். உள்ளம் உறுதியிழந்து போனால், அறிவும், உடலும் உறுதியாக இருந்தும் பயனில்லை. படிப்படியாக அவையும் உறுதி குலைந்து போகும்.

உள்ளம் உறுதியாக இருப்பின், அறிவும், உடலும் தொடக்கத்தில் உறுதியற்றி ருந்தாலும் கூட படிப்படியாக அவை உறுதி பெற்று விட முடியும். எனவே உறுதி என்னும் உணர்வுக்கே உள்ளந்தான் நிலைக்களம் ஆகும்.

Also read: கார் ஓட்டுநர் கவனிக்க சில குறிப்புகள்

ஆகையால், உறுதி என்பதற்கு உள்ளம் என்றே பெயர் கொடுத்து விடுவார் திருவள்ளுவர். ஒருவனுக்குச் செல்வம் என்பது வேறு இல்லை; உள்ளத்தின் உறுதியே செல்வம் ஆகும். மேலும் உறுதி, அஃதாவது ஊக்கம் இல்லாத அறிவு செயலுக்குப் பயன்படாது. வெறும் அறிவால் மட்டும் பயனில்லை. இது செயலுக்குப் பயன்பட வேண்டும். எனவே, மேலும் மேலும் அறிவைப் பெறுவதையே ஒருவன் விரும்பிக் கொண்டிராமல், இது வரை பெற்ற அறிவுக்குரிய செயலைச் செய்து கொண்டே, மேலும் அறிவு பெறுவதுதான் வாழ்க்கைக்குரிய பயனைத் தருவது ஆகும்.

மன உறுதி உள்ளவன், ஒரு பொழுதும் தான் மேற்கொண்ட செயலை, அது தொல்லை கொண்டது, இழப்புத் தருவது, கடினமுடையது, பல இடர்ப்பாடுகளை அடுக்கடுக்காகத் தருவது என்பன போன்ற காரணங்களுக்காக கைவிட மாட்டார். செயலுக்கே, உள்ள உறுதிதான் அடிப்படை.. மற்றனவாகிய செயலுக்குரிய பொருள், துணை, கருவிகள், இடம், காலம் எல்லாம் மனவுறுதிக்குப் பின்னால் வைத்து எண்ணத் தக்கவைதாம்.

இத்தகைய துணைப் பொருள்கள் இல்லை என்றாலும் மனவுறுதி இருந்தால் அவற்றை ஒவ்வொன்றாகப் படிப்படியாகத் தேடிக் கொள்ள முடியும். இனி, இத்தகைய உள்ள உறுதி, சில செயல்களை மேற்கொள்ளுவதால் மேலும் மேலும் வலிவு பெற்று, வேறு சில செயல்களைச் செய்வதால் சிறிது சிறிதாகக் குறைந்து மெலிவு பெறும் – என்னும் ஒர் உண்மையையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

எந்தச் செயல் நம் உள்ளத்தை மேலும் மேலும் வலிவு பெறச் செய்கிறதோ, அந்தச் செயலே நமக்குப் பொருத்தமான செயல் என்று கொள்ள வேண்டும். அந்தச் செயலையே நாம் தொடர்ந்து செய்யவும் வேண்டும்.

ஊக்கமே செல்வம்; ஒருவன் பொருள் இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் ஊக்கம்- உறுதிப்பாடு இல்லாதவனாக இருக்கக் கூடாது. உள்ள உறுதியே செல்வம்; பிற செல்வங்கள் ஒருவனிடம் ஏதோ ஒரு வகையில் வந்து சேர்ந்தாலும், அவை அவன்பால் தொடர்ந்து நில்லாமல், படிப்படியாக அவனை விட்டு நீங்கி விடும்.

ஆகவே அனைத்து முயற்சிகளுக்கும், செயல்களுக்கும் உள்ள உறுதியே மிகத் தேவையானது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளல் வேண்டும்.

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news