Latest Posts

கார் ஓட்டுநர் கவனிக்க சில குறிப்புகள்

- Advertisement -

பொதுவாக அனைத்து கார் நிறுவனங்களும், தங்களிடம் கார் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் வழங்கும் குறிப்பேட்டில், பாதுகாப்பான கார் பயணம் குறித்த சில யோசனைகளையும் வழங்கி வருகின்றன. கார் ஓட்டுநர் அல்லது கார் ஓட்டுநர் பயிற்சி மேற்கொள்ளுபவர்கள் ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இதோ:

சீட் பெல்ட்

பாதுகாப்பான பயணத்திற்கான முதல் பாடம், கார் ஓட்டுநர் தனது சீட் பெல்ட்டை’ அணிந்து கொள்வதுதான். அமெரிக்காவில் பல ஆண்டுகளாகவே கார் ஓட்டுநர் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய விதிகளில் இது ஒன்று. நமது நாட்டிலலும் இந்த விதி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

ரியர் வ்யூ கண்ணாடி

இதைத்தவிர இன்னும் சில சின்னச் சின்ன பாதுகாப்பு விதிமுறைகளையும் மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.  ‘ரியர் வ்யூ’ கண்ணாடியின் மூன்றில் ஒரு பங்கில் தனது காரும், மீதி இரண்டு பங்கில் பின்னால் வரும் வாகனங்களும் தெரியும்படி சரி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். காரை நகர்த்தும் முன் காரின் கதவுகள் அனைத்தும் சரியாக மூடப்பட்டு இருக்கின்றனவா என்பதை கார் ஓட்டுநர் உறுதி செய்து கொள்ள வேண்டும். கார் ஓட்டும் போதே கார் ஓட்டுநர் தனது இருக்கையை சரி செய்து கொள்ள முயலக்கூடாது. அதே மாதிரித்தான் ‘ரியர் வ்யூ ‘ கண்ணாடி மற்றும் பக்கக் கண்ணாடியை வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போது சரி செய்யக்கூடாது. வண்டியை நிறுத்தி விட்டு சரி செய்ய வேண்டும்.

ஈரச் சாலைகளில் கவனம் தேவை 

சாலை ஈரமாக இருக்கும்போது காரை மெதுவாகவே ஓட்டவேண்டும். ஏனெனில் ஈரமான சாலையில் சக்கரங்களுக்கு பிடிப்பு இருக்காது. அதுவும் பிரேக் போடும்போது, தேவையான அளவு பிடிப்பு சக்கரங்களுக்கு ஈரச் சாலைகளில் கிடைக்காது.

அதனால் கார் ஓட்டுநர் இந்த மாதிரி நேரங்களில் வேகத்தை திடீரென்று கூட்டுவதோ, திடீரென்று பிரேக் போடுவதோ கூடாது. அதே போன்று வண்டி வேகமாகப் போய் கொண்டிருக்கும் போது திடீர் திடீரென்று ஸ்டியரிங்கை வளைப்பது, பிரேக்கை அழுத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபடக் கூடாது.

தேய்ந்து போன டயர்கள் என்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை அதிகமாகவே வழுக்கும். கால் பிரேக்கை மூன்று நிலைகளாக பயன்படுத்த வேண்டும். முதலில் பின்னால் வரும் வாகனத்திற்கு வண்டியை நிறுத்தப் போவதாக எச்சரிக்கை செய்ய வேண்டும். பின்னர் பிரேக்கை அழுத்தி அதன்பின் வண்டியை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.

ஒவ்வொரு கார் ஓட்டுநரும், கார் ஓட்டுநர் பயிற்சி பெறுபவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டிய இன்னும் சில யோசனைகள் உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் சூழ்ந்த சாலைகளில் வாகனத்தை ஓட்டிச் செல்ல நேர்ந்தால், வாகனத்தை மெதுவாகச் செலுத்தி பிரேக் சரியாக இயங்குகின்றதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் போல் முழு திறனோடு பிரேக் இயங்கா விட்டால் மெதுவாக காரை செலுத்தியபடியே அடிக்கடி பிரேக்கை அழுத்தி அதன் ஈரம் காயுமாறு செய்ய வேண்டும். சரியான இயக்கத்திற்கு பிரேக் வரும் வரை இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

நீண்ட தூரப் பயணம் 

நீண்ட தூரப் பயணத்தின் போது, பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னால் சில பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து வாகனத்தை ஓட்டும் போது ஏற்படும் களைப்பு மற்றும் தூக்கத்தை தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தூங்கி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு பகலை விட இரவுப் பயணத்தில் வாகனத்தை மெதுவாகவே ஓட்ட வேண்டும். இரவு நேரங்களில் மற்ற வாகனங்களை முந்திச் செல்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். மேற்புற ஹெட்லைட்டுகளை பயன்படுத்துவதையும் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

ஜன்னல் கண்ணாடிகளை பளிச்சென்று தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். முன்புறக் கண்ணாடிகள் ஈரமில்லாமல் இருக்கும் போது துடைப்பான்களை (Wipers) பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் துடைப்பான்கள், கண்ணாடிகள் இரண்டுமே சேதமடையும்.

Also Read: என்னுடைய ஆர்வம் சார்ந்த தொழில்!

குறிப்பிட்ட வேகங்களில் ஓட்டுவதால் எரி பொருளை சிக்கனமாகப் பயன்படுத்த இயலும். நீண்ட தூரம் அல்லது செங்குத்தான மலைச் சரிவுகளில் இறங்குவதற்கு முன்பு வேகத்தை குறைத்து கடைசி கியருக்கு மாற வேண்டும். ஏனெனில் திடீரென பிரேக் போட வேண்டியிருந்தால் உங்களுக்கு சிரமம் இருக்காது. பிரேக்கை அழுத்திக் கொண்டே இருக்கவும் கூடாது. அப்படிச் செய்தால் அது அதிக சூடடைந்து பழுதாகி விடும்.

சாலை சந்திப்புகளில் அதிக நேரம் எஞ்சினை ஓட விடுவதால் எரி பொருள் செலவு அதிகமாகும். சான்றாக சாலை சந்திப்புகளில் பத்து நிமிடம் எஞ்சினை ஓட விட்டால் 100 சி.சி எரிபொருள் அதனால் வீணாகிறது. அதே போன்று, டாப் கியரில் 45 லிருந்து 55கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பயணம் செய்தாலும் எரி பொருள் அதிகமாக செலவாகும்.

வாகனம் ஓட்டுனர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இந்திய சட்டங்கள்

ஏர்ஃபில்டர் அடைத்துக் கொண்டாலோ, அல்லது க்ளட்ச் (Clutch) தேய்ந்து விட்டாலோ அதனாலும் சிக்கல்கள் உருவாகும். அதேபோல், சரியாக ‘ட்யூன்’ செய்யப்படாத எஞ்சின் மற்றும் அதிகப் புகையும் கூட எரிபொருளை வீணடிக்கும்.

அதிகபட்ச எரிபொருள் சிக்கனத்திற்கு, கார் ஓட்டுநர் எந்த கியரில் எந்த வேகம் உகந்தது என்பதை அறிந்து செயல்பட வேண்டும். உங்கள் காருக்கான கையேட்டில் இந்த விவரம் இருக்கும்.

இன்னொரு இன்றியமையாத செய்தி, காரை நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து காரை நகர்த்தும் முன் காரின் அடியில் நாய் அல்லது பூனை படுத்து இருக்கிறதா என்பதை கவனித்த பிறகே காரை நகர்த்த வேண்டும்.

English Title: Tips to make car driving a pleasure.

க.ராசு

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news