வாழ்க்கை என்பது தொடர் ஓட்டம், நிற்காமல் ஓட வேண்டிய ஓட்டம். நின்றால் தேக்கம் ஏற்படும். இந்த ஓயாத ஓட்டத்தை வெற்றிகரமாக நடந்த சில காரணிகள் வேண்டும். அவற்றில் ஒன்று தொடர் கற்றல்.
உண்மையான கல்வி
கற்ற, பெற்ற அறிவை நடைமுறையில் பயன்படுத்துகின்ற பொழுது உண்மையான கல்வி கிடைக்கின்றது. இதனைப் பட்டறிவு என்கின்றோம். ஒன்றைச் செய்கின்ற பொழுது தவறுகள் ஏற்படலாம். கருத்தியல் அடிப்படையில் ஒன்றை அறிந்திருப்பது வேறு. அதனைச் செயல்படுத்துவது வேறு. ஒவ்வொரு நிலையிலும் புதியவர்களோடு, புதுப்புது நிகழ்வுகளோடு, சூழல்களோடு நமக்கு தொடர்பு ஏற்படுகின்றது. அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.
Also read: ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்
விழிப்பும் வேட்கையும்
ஒரு தொழிலை செய்கின்றவர்களிடம் முன்னேற வேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும். இந்த வேட்கை வந்து விட்டால் ஓய்ந்திருக்க மாட்டார்கள். தனக்கு முன்னால் இருப்பவர்களின் செயல்பாட்டைக் கவனிப்பார்கள். கற்றல் தொடங்கி விடும். தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்குவார்கள். இந்த வேட்கை வளர, வளர முன்னேற்றம் ஏற்படும்.
நம்மிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும். இதற்கு தன் மதிப்பீடு தேவை. நமது செயல்பாடுகளை மூன்றாவது மனிதராக இருந்து மதிப்பிட வேண்டும். இது நாம் எழுதிய தேர்வுத்தாளை நாமே திருத்துவது போன்றது.
ஒவ்வொரு நாள் இரவிலும் தூங்குவதற்கு முன்பு நமது அன்றையப் பணிகளை எண்ணிப் பார்த்தால் நமக்கு சில படிப்பினைகள் கிடைக்கும். தவறுகள் செய்து இருந்தால் அவற்றைத் திரும்பச் செய்யாமல் தற்காத்துக் கொள்ளலாம். சிறப்பாகச் செய்தவற்றில் கையாண்ட முறைகளைத் திரும்பத் திரும்ப பின்பற்றலாம்.
விழிப்புணர்வோடு செயல்பட இந்த தன் மதிப்பீடு துணை செய்யும். இதனால் நமக்கு புதிய ஆற்றல் கிடைக்கும். ‘கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்,’ என்பது ஒரு பழமொழி. ‘பார்க்கின்ற நூலை எல்லாம் படிப்பவன் அறிஞன் ஆவான்,’ என்று விளக்கம் கூறுவார்கள். இதற்கு இன்னொரு பொருளும் கூறலாம். ‘நாம் காண்கின்ற ஒவ்வொன்றிலிருந்தும் பாடம் கற்றல் மூலம் நாம் வல்லவன் ஆகலாம்.
மதுரையில் ஒரு தனிப் பயிற்சிக் கல்லூரி முதல்வர். அந்தக் காலத்தில் ஏறத்தாழ மூவாயிரத்திற்கு மேல் மாணவர்களை வைத்து கல்லூரி நடத்திய பேராசிரியர். அவரது மேசை மீது தடியாக ஒரு நோட்டு. அதில் அவர் அன்று செய்ய வேண்டிய பணிகளை, பார்க்க வேண்டியவர்களை குறித்து வைத்து இருப்பார். பார்த்தவுடன், செய்தவுடன் அதை ‘டிக்’ செய்வார். கற்றுக் கொண்டதன் பயன் நமது செயல்பாட்டில் வெளிப்பட வேண்டும். இதற்கு ஆர்வம் தேவை. கற்றவற்றைத் தொழிலில் பயன்படுத்துகின்ற பொழுது அதில் திறமை வளரும். எவை நமக்கு ஏற்றதென்று புரியும். எவை நமக்கு ஏற்றதாக இல்லையோ, அவற்றை விட்டு விடலாம்.
வயது வரம்பில்லை
ஒரு வயதுக்கு மேல் புதியனவற்றைக் கற்றுக் கொள்ள முடியாது என்று பரவலாக ஓர் எண்ணம் இருக்கின்றது. ஆனால் எந்த வயதிலும் கற்றல் சாத்தியப்படும். ஆர்வம்தான் வேண்டும்.
இப்பொழுது கணிப்பொறியை சில வயதான தொழில் முனைவோர் அருமையாகப் பயன்படுத்துவதைக் காணலாம். டேலியில் கூட அசத்துகிறார்கள். எப்படி? தேவையை ஒட்டி அவர்கள் வளர்த்துக் கொண்ட ஆர்வம்.
Also read: அச்சுத் துறையில் மகளிருக்காக பொறியியல் பட்டப்படிப்பு
காலத்தேவை
இப்பொழுது ஒவ்வொரு துறையிலும் விரைவாக மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. கால மாற்றத்திற்கு ஏற்ப தொழிலும், வாணிபமும் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. கிராமங்களில் சிறிய கடைகள் நடநத்துகின்றவர்களில் தொடங்கி, நகரங்களில் பெரிய தொழில் நடத்துகின்றவர்கள் வரை கால மாற்றத்திற்கேற்ப கற்றல் தொடர வேண்டும். மாற்றங்களை அறிந்தாக வேண்டும். இப்போழுது ஊடகங்கள் பெருகி விட்டன. தொலைத் தொடர்புகள் வளர்ந்து விட்டன. நாட்டின் நடப்புத் தெரியாமல் தொழில் செய்ய இயலாது. இப்போது கொரோனா கால பாதிப்புகளை வேறு சமாளிக்க வேண்டி இருக்கிறது.
நாட்டின் அரசியல், பொருளாதார, சமுதாய, சமய நிகழ்வுகளுக்கும் நமது தொழிலுக்கும் தொடர்பு இருக்கும். இதனைப் புரிந்து செயல்படுவதற்கு உதவுவதும் கற்றல்தான்.
– டாக்டர் மா.பா.குருசாமி