Latest Posts

கட்டிடங்கள் சீரமைப்பு – ஒரு புதிய தொழில் வாய்ப்பு உருவாகிறது

- Advertisement -

சென்னையில் உள்ள ஐஐடி, ‘இண்டியன் காங்கிரீட் இன்ஸ்டிட்யூட் (ICI)’ அண்மையில் நடத்திய ஒரு நாள் கருத்தரங்குக்கு சென்றிருந்தேன். Structural Design of Building Systems என்ற தலைப்பில் இது நடைபெற்று இருந்தாலும்., இந்த கட்டுரை கட்டுமானம், கட்டிட வடிவமைப்பு போன்ற துறை சார்ந்த செய்திகள் குறித்தல்ல.

இந்த நிகழ்ச்சியில் ஐஐடியின் சிவில் எஞ்சினியரிங் துறை பேராசிரியர்கள் இருவர் பேசினர். இதில் இறுதியாக இடம் பெற்ற பேரா. சி. வி. ஆர். மூர்த்தி பேச்சு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அவருக்கு தரப்பட்ட தலைப்பு என்னவோ ‘Challenges in Structural Design’ என்பதுதான். ஆனால், அவரது பேச்சின் பொருள் புரிந்தவர்கள் அதை Challenges before India என்றோ…. Challenges to our future generations என்றோ குறிப்பிட்டால் தவறு இல்லை. நான் அப்படித்தான் புரிந்து கொண்டேன்.

அவரது பேச்சின் மொத்த உள்ளடக்கத்தை தொடக்கத்திலேயே மூன்று வெவ்வேறு தலைப்புகளில் பகுத்து இருப்பாக சொன்னார்.

  • கல்வி (Education),
  • செயல்முறை பயிற்சி (Practice),
  • வழிகாட்டும் கட்டமைப்பு (Regulatory Frame work).
    -இவைதான் அவரது பட்டியல்.

கல்வி என்ற தலைப்பில் பேசிய போது அவரது கருத்துகள் பலவும் தற்போதைய பொறியியல் கல்வி நிறுவனங்களை மனதில் வைத்து சொல்லப்பட்டதாக இருக்கும் என நாம் நினைத்துக் கொண்டாலும், அது இன்று உள்ள நிலையில் பொதுவாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் – ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துக்கும் பொருந்தும்.

Also read: மணல், செங்கல், சிமென்ட், கம்பி – இவற்றை பயன்படுத்தாமல், சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடுகளைக் கட்டித் தருகிறோம்!

“இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களை ஈர்ப்பவர்களாக இல்லை என்பது முதல் கருத்து. அவர்களது செயலால்… உரையால்…. நடைமுறையால்… மாணவர்களை ஈர்க்க வேண்டும். சோதனைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க இதுவும் ஒரு வேலை என்ற நோக்கில் இருப்பவர்களால், மாணவர்களை ஈர்க்க முடியவில்லை” என்றார்.

“கல்லூரி ஆசிரியர்கள் இன்னும் பழைய புத்தகங்களையே படிக்கக் கூடாது. அந்நாளைய நடைமுறைகளுக்கு உருவான புத்தகங்கள் இன்றைய தேவைகளுக்கு ஈடு கொடுப்பது இல்லை” என்று சொன்ன அவர், “அதனால், நான் அடிப்படைகள் மாறி விட்டன என்று சொல்லவில்லை. நியூட்டனின் விதிகள் மாறி விட்டதா என்று கேட்கக் கூடாது. அது மாறவில்லை. அதில் மாற்றம் இல்லை. ஆனால், அதை அவர் படித்த காலத்தில் எப்படி சொல்லிக் கொடுக்கப்பட்டதோ, அதே போல சொல்லிக் கொடுக்க முயற்சிக்க கூடாது என்று சொல்கிறேன்” என்று விளக்கமும் சொன்னார்.

இன்று இணையம் உள்ளிட்ட இன்னும் எத்தனையோ தகவல் தொடர்பு சாதனங்கள், வழிமுறைகள் மல்ட்டி மீடியா வசதிகள் வந்து விட்டன. அவற்றை எல்லாம் பயன்படுத்திப் பாடம் நடத்த… மாணவர்களை எளிதாக தொட்டு விட வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன. எனவே, அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு.

அதோடு, பள்ளிகள் தொடங்கி, கல்லூரிகள் வரை பல இடங்களில் இன்னும் வலுவான ஆய்வுக் கூடங்கள் இல்லை. அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றார். மத்திய அரசின் CSIR -ன் கீழ் வரும் சென்னையில் உள்ள SERC அதாவது, Structural Engineering Research Centre-யிலேயே மிகப் பெரிய ஆய்வுகளை மேற்கொள்ளும் வசதிகள் இல்லையே என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். புதிய பாடத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து கற்க வசதிகளைச் செய்து தர வேண்டும். அதற்கு வழிகாட்ட ஆசிரியர்களும் தங்களைத் தயார் செய்து கொண்டு முன்வர வேண்டும். மொத்தத்தில் ஆசிரியர்களின் Attitude… Skill… Knowledge உள்ளிட்ட மூன்றிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.

பொறியியல் பாடமோ, மற்ற தொழில் கல்வியோ எதுவானாலும், அதை அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு பயன்படுத்தும் நடைமுறை…, அல்லது செயல்முறை பயிற்சியிலும் (Practice) நாம், அதாவது இந்தியா பின் தங்கியே இருப்பதாகக் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்து எழுபத்து ஐந்து ஆண்டுகளில் பல துறைகளிலும் ஏற்பட்டு இருக்க வேண்டிய மாற்றம் ஏற்படாமலேயே இருக்கிறது. அதுவே தொழில்நுட்பக் கல்வி மற்றும் நடைமுறையிலும் தொடர்கிறது. சான்றாக, கட்டுமானப் பணிகளில் கடைப்பிடிக்க வேண்டிய செயல்முறைகள் குறித்த வழிகாட்டு ஆவணம் (Standard codes of Practice) பல ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இன்றி இன்னும் பழைய கதையையே பேசிக் கொண்டிருக்கிறது. சில துறைகளில் அத்தகைய வழிகாட்டு ஆவணமே உருவாக்கப்படவில்லை. அவை ஏன் குறித்த கால இடைவெளிகளில்ல் மேம்படுத்தப்படவில்லை என்றோ…., இதுவரை இல்லாத பிரிவுகளில் அவை ஏன் இன்னும் உருவாக்கப்படவில்லை என்றோ யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக, கட்டுமான நிறுவனங்களோ…., பிற நிறுவனங்களோ. எப்படி இத்தனை நாளும் காலத்தை ஒட்டுகிறார்கள். எதைக் கடைப்பிடிக்கிறார்கள் என்றால்….. மிக எளிதான பதில் “அமெரிக்க….. ஐரோப்பிய….. ஜப்பானிய… வழிகாட்டு ஆவணம் என்கிறார்கள்.

Also read: மாற்று மணல் உறுதியான கட்டுமானத்துக்கு ஏற்றதா?

மொத்தத்தில் இந்தியாவில் நம் நாட்டுக்கான வழிமுறையை இன்னும் உருவாக்காத இடங்களில் தற்காலிகமாக மற்ற நாடுகளின் ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டது சாதகமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. அதனால், நமது நாட்டுக்கான… நமது சூழலை அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டு ஆவணத்தை உருவாக்க…. ஏற்கனவே உள்ளதை கால நேர சூழல் மாற்றத்துக்கு ஏற்ப மேம்படுத்த தொடர்ந்து தவறிக் கொண்டு இருக்கிறோம்.

சாதாரன காங்கிரீட் தள வீடுகளில் இருந்த நமது வாழ்க்கை மெல்ல அடுக்கு மாடி வீடுகளுக்கு மாறி…., அவை இப்போது எந்த திசையில் திரும்பினாலும் உயர் கோபுர பல டுக்கு மாடி வீடுகளாக மாறிவிட்டன. இந்த நிலையில் நில நடுக்க பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்ன…? எவ்வளவு பாதிப்பு….? எவ்வளவு இழப்பு….?
ஒருமுறை புஜ் நில நடுக்க பாதிப்பு தந்த பாடம் போதுமானதாக இல்லையா….? ஆனால், அதைப் பற்றி எல்லாம் தீவிரமாக சிந்திக்கவோ…, மாற்றங்களைக் கொண்டு வரவோ. முயற்சி நடக்கவில்லை. அப்படி மாற்றங்கள் கொண்டு வர வேண்டியவர்கள் அதை ஏன் செய்ய வில்லை….? எப்போது செய்யப் போகிறீர்கள் என்று கேட்க ஆளில்லை.

பல பொறியியல் துறை தொடர்பான செயல்முறை வழிகாட்டு ஆவணங்கள் உருவாக்கப்படாமலும், மேம்படுத்தப் படாமலும் பல ஆண்டுகளாக தொடர்கின்றன. வெளிநாட்டு ஆவணங்களைப் பயன்படுத்துவது தற்காலிகத் தீர்வாக இருக்கலாம். அது நிரந்தமானதாக இருக்க முடியாது; கூடாது.

காரணம் – அந்த ஆவணங்களை உருவாக்க அவர்கள் கையாண்ட அணுகுமுறைகளுக்கும், இந்தியாவில் நாம் கையாளும் அணுகுமுறைகளுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. எனவே, அதில் இருந்து கொஞ்சம்…., மீதி நமது ஆவணங்கள் என்றோ….., இதன் தலைகீழ் நடைமுறையோ…., எதுவானாலும் சிக்கல்தான்.

மறுபுறம், இந்தியாவில் உள்ள கட்டிடங்களின் நிலையும் மெல்ல மெல்ல பாழாகிக் கொண்டு உள்ளன. கடந்த காலங்களில் கட்டிய ஏராளமான கட்டுமானங்களுக்கு இன்று சீரமைப்பு தேவைப்படுகிறது. Retrofitting எனப்படும் வலு ஊட்டும் நடவடிக்கைகள் பல கட்டிடங்களுக்கு தேவைப்படுகின்றன.

இதுவே வரும் நாட்களில் மிகப் பெரிய வேலையாக… வேலை வாய்ப்பாக உருவெடுக்கும் அளவு சூழல் உள்ளது. எனவே, அவற்றுக்கு எல்லாம் சேர்த்து வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

– ஆர். சந்திரன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news