ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் பிஜிட்டல் (phygital) என்ற வணிக மாதிரியை (Business Model) இந்தியாவில் செயல்படுத்த திட்டம் தீட்டி வருகிறது. இதனால் முன்னணி மின் வணிக நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. பிஜிட்டல் (Phygital) என்பது பிசிக்கல் (Physical) மற்றும் டிஜிட்டல் (Digital) ஆகிய இரு சொற்களின் கலவையாகும். மின் வணிகத்தில் வணிக நடவடிக்கையானது 100 விழுக்காடு கணினி அல்லது அலைபேசி சார்ந்ததாக இருக்கும். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக மாதிரியில் 50 விழுக்காடு பலசரக்கு கடைகள் சார்ந்ததாகவும் மீதி 50 விழுக்காடு ஜியோ அலைபேசி (Jio Cell Phone) சார்ந்ததாக இருக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ அலைபேசிக்கு ஏற்கனவே 360 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இவர்களுடன், இவர்களுக்கு அருகில் இருக்கும் 30 மில்லியன் உணவு மற்றும் பலசரக்கு கடைகளுடன் 4நி நெட்வொர்க் (4GNetwork) மூலம் இணைக்கப்படும் வாடிக்கையாளர்கள் ஜியோ அலைபேசியில் ஆர்டர் கொடுத்தால் அந்த ஆர்டர், வாடிக்கையாளருக்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடைக்கு கொடுக்கப்படும். அந்த கடை உரிமையாளர் வாடிக்கையாளர் வீட்டிற்கு சென்று பொருளை டெலிவரி செய்வார். இதனால் போக்குவரத்து செலவும் குறையும்.
Also read: வாடகைக்கு கிடைக்கும் ‘யூலு’ மின் சைக்கிள்கள்
வாடிக்கையாளருக்கும் மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும். இந்த வணிக மாதிரியானது ஏறத்தாழ ஓலா (Ola) உபர் (Uber) போன்றதாகும். ஜியோ நெட்வொர்க்குடன் இணைய விரும்பும் உணவு மற்றும் பலசரக்கு கடைகள் தங்களின் சரக்கிருப்பு (Inventory) தகவல்களை ஒளிவு மறைவில்லாமல் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் பொருட்டே அந்த கடைகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ஆர்டர்களை கொடுக்கும். இந்த வணிக மாதிரியை இப்போது சில குறிப்பிட்ட பகுதிகளில் செயல்படுத்தி சோதனை செய்து வருகிறது.
– ஜே. தினேஷ்