Latest Posts

மீன் சந்தை எப்படி இயங்குகிறது?

- Advertisement -

எழுத்தாளர் திரு சரவணன் சந்திரன், சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் ஃபிஷ்இன் (FISHIN) என்ற பெயரில் ஒரு மீன்கள் விற்பனையகத்தை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். தொடர்ந்து கட்டுரைகளை, கதைகளை எழுதிக் கொண்டே தனது விற்பனையகத்தையும் சிறப்பாக நிர்வகித்து வருகிறார். தனது தொழில் வளர்ச்சி பற்றி அவர் கூறும்போது,

”ஃபிஷ்இன் தொடங்கிய தொடக்க காலக் கட்டதில் புதிதாகத் தொழில் தொடங்கி நடத்தும் பலருக்கும் இருப்பது போன்ற அந்த பதட்டம் எனக்கும் இருந்தது. அப்போது எல்லாம் பக்கத்துத் தெருவிலோ, பக்கத்து ஏரியாவிலோ யாராவது மீன் கடை தொடங்கப் போகிறார்கள் என செய்தி வந்தாலே பதறுவோம். உளவாளிகளை அனுப்பிக் கண்காணிப்போம். மனதில் ஒரு சஞ்சலம் இருந்தபடியே இருக்கும்.

இதைக் கவனித்த மூத்த மொத்த வியாபாரி ஒருவர் அழைத்தார். சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மூன்று தலைமுறைகளாக வியாபாரம் செய்யும் குடும்பத்தில் மூத்தவர். அந்த மார்க்கெட்டில் பக்கத்து பக்கத்திலேயே கடை போட்டு இருப்பதைக் காண்பித்து, “ஒருத்தருதுல இன்னொருத்தர் தலையிட மாட்டோம். கஸ்டமர்களின் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டோம். எங்கள் தரத்தில் மட்டும் கவனமாக இருப்போம்” என்றார். எனக்கு அது புது திறப்பாக இருந்தது. போட்டியும் தேவை என்பதை உணர்ந்தேன். பதற்றம் குறையத் தொடங்கியது.

Also read: பண்ணையில் மீன் வளர்ப்பு

எங்கள் தரத்தில் கவனம் செலுத்தினோம். கஸ்டமர்களுக்காகக் கவலைப் பட்டோம். சண்டையிட்டுக் கொண்டோம். கஸ்டமர்கள்தான் கடவுள் என்றார் காந்தி. பல நேரங்களில் கடவுள்களே சோதனை கொடுப்பார்கள். நாங்கள் வீடுகளுக்கே சென்று அவர்கள் கேட்கும் கடல் உணவுகளைக் கொடுக்கும் சேவையையும் செய்து வருகிறோம். அவர்களில் சிலர் வேண்டுமென்றே சந்தேகத்தோடு திருப்பி அனுப்புவார்கள். சிலர் வீட்டுச் சண்டையை எல்லாம் இதில் காண்பிப்பார்கள். “அவ என்ன சொல்றது வேண்டாம்னு. நான் சொல்றேன் வேண்டாம்”என்பார்கள். சிலருக்கு ஆர்டர் பண்ணிய பிறகு மட்டன் சாப்பிட ஆசை வந்து விடும். நாம் டெலிவரி கொடுக்கப் போய்க் கொண்டிருக்கும் போதே அழைத்து, “அவசரமா குடும்பத்தோட வெளியே போறோம்” என்பார்கள். வெட்டியது விலை போகாது. கூடிச் சாப்பிட்டு திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். நஷ்டம் என்று சொல்லிப் புலம்பத் தயாராகயில்லை.

பின்னர் வாடிக்கையாளர்களுக்கு கற்பித்தோம். எங்கள் தரப்பை எடுத்துச் சொன்னோம். எங்கள் தரத்தில் உறுதியாக இருந்தோம். சுவற்றில் அடித்த பந்து போலக் வாடிக்கையாளர்கள் திரும்ப வந்தார்கள். கடவுள்கள் காப்பாற்றினார்கள். சோதிப்பதை நிறுத்தினார்கள். இந்த மந்திரத்தைத்தான் அந்த மூத்த பாய் எனக்குப் போதித்தார்.

என்னுடைய நாவல்களையும், மீன்களாகத்தான் பார்க்கிறேன். பெரிய பத்திரிகைகள், தொடர்பு பலங்கள் எல்லாம் எங்களை மாதிரி சிறு வணிகர்களுக்குக் கிடையாது. எங்களால் முடிந்த அளவிற்கு எங்களது பட்ஜெட்டிற்குத் தோதாக விளம்பரப்படுத்திக் கொள்கிறோம். அதற்காக எங்கள் மீன் மட்டும்தான் உலகத்திலேயே சிறந்தது என்று சொல்லவே மாட்டோம். நாங்களும் கடை போட்டு இருக்கிறோம். மீனின் தரத்தில் மட்டும் குறியாய் இருக்கிறோம். அது தரமாக இருக்கும் பட்சத்தில் கஸ்டமர்கள் கைவிட மாட்டார்கள். வேர்ட் ஆஃப் மவுத்தை விட பெரிய விளம்பரம் எதுவும் கிடையாது. அது ஆதி காலத்திலிருந்து இருக்கும் சக்சஸ்ஃபுல் விளம்பர மாடலும் கூட.

சொல்லி வைத்தாற் போல வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது வஞ்சிரம் மீனைத்தான். இத்தனைக்கும் பாரம்பரியக் கடலோடிகள் இந்த மீனைச் சக்கை என்று சொல்லி ஒதுக்கி விடுவார்கள்.

அவர்கள் சத்தானதாகவும் சுவையானதாகவும் கருதுபவை சிறிய மீன்களான அயிலா, சங்கரா, மத்தி, பாறை, வவ்வால், கேரை போன்றவற்றையே.

விற்பனையகம் தொடங்கிய காலத்தில் காசிமேட்டிற்கு அதிகாலை ஏலம் எடுக்கச் செல்வேன். வரிசையாக சங்கரா உள்ளிட்ட மீன் கூடைகளைப் பரப்பி இருப்பார்கள். எல்லாவற்றையும் எடுத்து விட வேண்டும் என்கிற வேகத்தைக் கண்களில் காட்டிக் கொண்டிருப்பேன். அதைக் கவனித்த, வழக்கமாக என்னோடு ஏலம் எடுக்கும் வியாபாரி, “எதிர்பார்ப்ப வியாபாரத்தில கண்ல காட்டக் கூடாது. பேரம் பேசறவன் பராக்கு பார்க்கக் கூடாது. பாக்கெட்டுல இருக்கறத விட்டுருவ” என்றார்.

கடைசியில் எனக்குத் திருப்தியான விலையில் பேரத்தை அவரே முடித்துக் கொடுத்தார். இதைத்தான் எனக்கு காசி மேட்டில் அந்த வியாபாரி எனக்குக் கற்றுத் தந்தார். வியாபாரம் என்று மட்டும் இல்லை. எல்லா விஷயங்களிலும் இப்படி அப்பட்டமாக (obvious) இருக்கக் கூடாதென ஒரு தியரியும் இருக்கிறது.

விளங்கி விட்டது எனக்கு. அதற்கடுத்து கண்டு கொள்ளாமல் கூடைகளைக் கடப்பேன். கையைப் பிடித்து வெத்தலை பாக்கு வைத்து விலை பேசுவார்கள். பொதுவாகவே வணிகத்தில் சென்டர் பேட்டில் பந்து வருகிற வரை காத்துக் கொண்டு இருக்க வேண்டும். உண்மையாகவே பரபரத்துத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் வணிகத்தில் எதுவும் நடந்ததில்லை எனக்கு.

பந்தைக் கவனிக்கிற லாவகம் கூடுகிற வரை அடித்து ஆடக் காத்துக் கொண்டு இருக்க வேண்டும். இப்படி அலைந்த காலங்களில் நிறைய இழப்பை சந்தித்து இருக்கிறேன். நான் வாங்கும் விலைகள் எப்போதும் அதிகமாக இருக்கும்.

இங்கேதான் இந்தத் துறை செயல்படும் விதம் குறித்துச் சொல்ல வேண்டி இருக்கிறது. தமிழகக் கடற்கரையோர மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு எல்லாவிதமான மீன்களும் விலை கொஞ்சம் கூடினாலும் கிடைத்து விடும்.

ஆறுகள், கண்மாய்கள் அருகி விட்டதால், கடற்கரை மாவட்டம் அல்லாத மக்கள் இன்று கட்லா, ரோகு, திலேப்பியா போன்ற வளர்ப்பு மீன்களை அதிகமாக உண்டு கொண்டு இருக்கின்றனர். பொள்ளாச்சியில் ஒரு மீன் உணவகத்தில் கொடுவா என்று சொல்லி கட்லாவை கொண்டு வந்து வைத்தார்கள். தொண்டிக்குப் பக்கத்தில் இப்போது ஒரு படி அயிரை மீனின் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல். தமிழகத்தின் கடற்கரை ஓர மாவட்டங்களில் கடலுணவு பழக்கம் தவிர்க்க இயலாதது. அப்படியே கொஞ்சம் முன்னேறி வந்தால் விருதுநகரில் கடலுணவு பழக்கம் வேறு மாதிரியாக இருக்கும்.

தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களை, மிகச் சரியான கடலுணவு எப்போதுமே எட்டியது இல்லை. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. கடற்கரையில் இருந்து தள்ளி இருப்பவர்கள் ஆறுகள் மற்றும் கண்மாயில் இருந்து வரும் நன்னீர் மீன்களை உண்டு பழகியவர்கள். இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், விரால், ஜிலேபிக் கெண்டை, அயிரை என்று சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் போய் கருப்பு வவ்வால் என்றால் புரியாது. ஒட்டு மொத்த தமிழகமுமே கடலுணவை ஒரு காலம் வரை ரெண்டாம் பட்சமாகத்தான் வைத்து அணுகி இருக்கிறது.

Also read: வாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு

இங்கே வாழ்ந்தாலும் மட்டன், தாழ்ந்தாலும் மட்டன். இப்போது. மருத்துவர்கள் மீன் சாப்பிடச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். இப்போதெல்லாம் ஒமேகா 3 என்கிற சொல் சமூகத்தில் இயல்பாகப் புழங்குகிறது. கடலுணவுத் திருவிழாக்களை நட்சத்திர விடுதிகள் நடத்திகின்றன.

ஆகவே ஒமேகா 3, விட்டமின் டி போன்ற சத்துகளைத் தரும் கடலுணவை எடுத்துக் கொள்வது நல்லது என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்து உள்ளது. குறிப்பாய் மத்தி, காளா, சூரை, பால்சுறா, காரப்பொடி, குதிப்பு போன்ற மீன் வகைகளை அதிகம் வாங்குகிறார்கள். இப்போதெல்லாம் எல்லா பருவங்களிலும் எல்லா மீன்களும் ஓரளவிற்குக் கிடைத்து விடுகின்றன.

திடீரென கடலுணவின் பக்கமாய் ஒட்டு மொத்த பார்வையும் குவிந்ததால் இங்கே ஒரு மிகப் பெரிய சந்தை உருவாகி இருக்கிறது. தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் என்ற அரசு சார்ந்த அமைப்பு இந்த ஒட்டு மொத்த மீன் பிடியையும் கட்டுப்படுத்துகிறது.

இந்தியாவில் மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மீன் சந்தை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கிறது. வெளிநாட்டு ஏற்றுமதியும் பெருகி இருக்கிறது. சிந்தாதிரிப் பேட்டையில் இருந்து பல நாடுகளுக்கும் மீன்கள் போகின்றன.

இரண்டு கிலோ அளவில் பச்சை நண்டு இருக்கிறது. ஒரு டைகர் எறாலின் எடையே நானூறு கிராம் இருக்கும். இதே மாதிரி லாப்ஸ்டர், வெள்ளை வவ்வால் எனப் பல ஏற்றுமதி வகைகள் இருக்கின்றன. ஆயிரம் ரூபாயில் தொடங்கி பத்தாயிரம் ரூபாய் வரை விலை போகின்ற மீன்களும் இருக்கின்றன.

பெரும்பாலும் இவை பொது வணிகத்திற்கு கரைக்கு வருவதில்லை. எங்களைப் போன்ற கடைகள் அதற்கான வாடிக்கையாளர்களிடம் கடை விரிக்கிறோம். மற்றபடி கடற்கரையோர மக்களைத் தவிர வேறு யாரும் இவற்றை அறிவதில்லை இப்போது கடற்கரை மக்களே காசு போய் விடும் என்பதற்காக ஒரு சிங்கி இறாலைக்கூட எடுத்துச் சாப்பிடுவதில்லை என மீனவ நண்பர்கள் கூறுகிறார்கள்.

காசி மேட்டில் கேரள வண்டிகள் நிற்கும். ஒடிசா கடற்கரையில் தமிழக வண்டிகள் நிற்கும். இது இந்திய அளவிலான பன்னாட்டு வணிகம். விலைகூடிய சரக்குகள் ஏற்றுமதி ஆகின்றன. தமிழகத்தை கடலுணவு, வளர்ப்பு மீன்கள் என இரண்டு விதமான பழக்கம் பிரிக்கிறது. இறால், விரால், திலேப்பியா, கட்லா, ரோகு போன்றவை வளர்க்கப்படுகின்றன. இவை முழுக்கவே உள்நாட்டு நுகர்விற்காகத் தயாரகுபவை.

கடலுணவை பொறுத்தவரை, வாகன வசதிகள் பெருகி விட்டதால் இப்போது கடற்கரை இல்லாத நகரங்களுக்கு உள்ளும் நுழைகின்றன. ஒரு செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். கடற்கரை பகுதியில் இல்லாமல் இருப்பவர்களால் ஒரு போதும் அன்று பிடித்த மீனை உண்ணவே முடியாது.

மீன்பிடி படகுகளிலேயே நொறுக்கப் பட்ட ஐஸை எடுத்துக் கொண்டுதான் தொழிலுக்கே போகின்றனர். இரண்டு நாளில், ஐந்து நாளில், பதினைந்து நாளில், ஒரு மாதத்திற்கு மேல் கடலுக்குள் தொழில் பார்க்கப் போய்த் திரும்பி வருகிறவர்கள் இருக்கிறார்கள். அது கரைக்கு வரும் போது எட்டாவது நாள் மீன் அல்லது பதினாறாவது நாள் மீன். ஆனால் தரமான ஐசில் இருப்பதால் அவை தகுதியான மீன்களும்.

கரைக்கு வந்த பிறகு அவை ஏலச் சந்தையில் கடை பரப்பப்படுகின்றன. மீன் விலையும், தங்கத்தின் விலையைப் போலத்தான். இப்போதெல்லாம். அன்றன்றைக்கு ஏறி இறங்கும் விலை. கேரளாவில் தடை என்றால் இங்கிருந்து அங்கே போகும். இங்கே தடையென்றால் மும்பையிலிருந்து இங்கே வரும்.

எப்போதும் தட்டுப்பாடு நிறைந்த துறை இது என்பதால் இங்கும் கூட சின்ன அளவில் பதுக்கல்கள் இருக்கும். விலை போகா விட்டால் படகில் இருந்தே மீனை இறக்காத நிலையும் உண்டு. ஆனால் பரபரப்பான இத்துறையில் அப்படி எப்போதாவதுதான் நடப்பதுண்டு.

எதற்காக இதை விளக்கிச் சொல்கிறேன் என்றால், என்னுடய வீட்டிற்குக் கூடையில் எடுத்துக் கொண்டு வரும் மீன் எனக்கு எதிரே இருக்கிற கடலில் இருந்து பிடித்தது என நான் நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக. சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து நொச்சிக் குப்பம் கடற்கரையில் போட்டு மண் தூவி, இப்பப் பிடிச்சது என்பார்கள்.

இப்படித்தான் ஒரு இலைமறை காய் வணிகம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. கடலுணவு என்று வருகையில் இவற்றில் கலப்படம் என்பது பெரிய அளவிற்கு இருப்பதில்லை. இன்னொரு மீனின் பெயரைச் சொல்லி இன்னொன்றை விற்பார்கள். வளர்ப்பு இறாலை கடல் இறால் என நம்பித்தான் இப்போதும் மக்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கட்லா கடலில் நீந்தும் என நினைக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இறைச்சி வாங்கும் போது வெள்ளாட்டின் வாலா எனப் பார்க்கப் பழகியவர்களுக்குக் கடலுணவை பரிசோதிக்கத் தெரியாது. இப்போதுதான் கடலுணவு பக்கமே நெருங்கி வந்து இருக்கிறார்கள். எனவேதான் கடலுணவின் தரம் என்று வருகையில், மக்களிடம் குழப்பம் எஞ்சுகிறது.

Also read: வேளாண் தொழில் முனைவோருக்கு உதவும் இணைய தகவல் தளங்கள்

இங்கே கொஞ்சம் பரவலாக, விலை குறைந்த டி. சி. இறால்களை வாங்கி வந்து கெட்ட வாடை போவதற்கு ஒரு கெமிக்கலையும், வெள்ளையாய்ச் சதை மாறுவதற்கு ஒரு கெமிக்கலையும் போட்டு அலசுவது உண்டு. அதே போல் நாள்பட்ட மீன்கள் பளபளப்பாகத் தெரிய ஃபார்மாலினை தெளிப்பதும் உண்டு. கேன்சரை உண்டு பண்ணுகிற கெமிக்கல்கள் அவை என்பது எல்லோருக்குமே தெரியும்.

அந்த மீன் எங்கே போகும் என யாராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. அதே சமயம் எல்லோரும் இதைச் செய்கிறார்கள் என்றும் சொல்லி விட முடியாது. கூடவே கரைக்கு வந்த பிறகு மீனவனுக்கு மீன் சொந்தமில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். அப்படியான இடங்களில் மீன் எடுப்பதை விவரமான வியாபாரிகள் எப்போதும் தவிர்த்து விடுவார்கள். விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காகக் கண்ட இடத்தில் வாய் வைக்கத் துணியாதவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசுத் துறை வழக்கம் போல வேறொரு கவனத்தில் இருக்கிறது. தமிழக அரசின் மீன் வளத்துறை சார்பாக நடத்தப்படும் கடைகளில் விற்கப்படும் மீன்களை அவர்கள் சோதனைக்கு அனுப்பத் தயாரா? என மீன்வளத் துறையில் இருக்கும் நேர்மையான அதிகாரி ஒருத்தர் உள்ளிருந்தபடியே மனம் கசிந்து கேள்வி எழுப்பினார் என்னிடம்.

இன்னமும் முற்றிலும் தமிழக வணிகம் சீரழிந்து விடவில்லை. தரமானவைகளும் இங்கே கொட்டித்தான் கிடக்கின்றன. கடை, வணிகம் என்பதை எல்லாம் தாண்டி தரமான மீனை நான் அதன் கண்ணைப் பார்த்தே வாங்குகிறேன். நாள்பட்ட மீன்களின் கண்களில் மஞ்சள் படலம் உருவாகத் தொடங்கும். உயிர்ப்பான கண்களோடேயே நான் வணிகமும் செய்கிறேன்.

.எங்கள் கல்லூரி கால நண்பர்கள் இணைந்து புதிய முயற்சியைச் செய்து பார்க்க ஆசைப்படுகிறோம். எல்லோரும் வெவ்வேறு துறையில் இருப்பவர்கள். அவ்வப்போது பேசும் போது, ஏதாவது சேர்ந்து செய்யலாம் என்பார்கள். நீண்ட நாட்களாக யோசனையில் இருக்கும் திட்டம், ஒரு தரமான காஃபி டேபிள் மேகசின் கொண்டு வருவது. ஒரு வகையில் இலவச கிளப் மேகசின் மாதிரி.

லைஃப் ஸ்டைல், பல்வேறு துறை சார்ந்த புதிய செய்திகள், ஆய்வுச் செய்திகள், உச்சம் தொட்டவர்களைப் பற்றிய விவரங்கள், பேட்டிகள், ஃபிஷ்ஷிங் க்ளப் செயல்பாடுகள் என வெவ்வேறு துறை சார்ந்த நண்பர்கள் தங்களது அனுபவங்களைக் கொட்டத் தயாராக இருக்கிறார்கள். நிறைய நேரம் எடுத்து உழைக்க வேண்டும் இதற்கு. தமிழகக் கடலுணவு பழக்கம் குறித்த அடிப்படையில் இருந்து அதைத் தொடங்க வேண்டும் என்று கருதுகிறேன்” என்கிறார், திரு. சரவணன் சந்திரன்.

– எவ்வி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news