வியாபாரத்தில் முன்னேற விரும்புகிறவர் களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர், பேச்சாளர், தொழில் ஆலோசகர் ‘வெற்றி விடியல்’ திரு. சீனிவாசனுடன் பேட்டி கண்ட போது அவர் கூறிய சில முதன்மையான செய்திகள் –
”வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் கவனம் செலுத்துவார்கள். தினசரி உற்பத்தி போன்றவற்றில் ஈடுபாட்டோடு இருப்பார்கள். ஆனால் வரவு செலவு கணக்கோடு பிணக்கு இருக்கும். எட்டிக்காயைப் போல் எட்டத்தில் வைத்து விடுவார்கள். அதைக் கவனிக்கவே மாட்டார்கள்.
பெரும்பாலான வியாபாரத் தோல்விகளுக்கு இதுவே காரணம். அதை வலியுறுத் தியே ஃபேஸ்புக்கில் STM – Entrepreneur சிறுதொழில் முனைவோர் குழு தொடங்கப் பட்டது. குழுவில் தற்போது 11 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எல்லோருமே தொழில்முனைவோர் அல்ல. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் செய்வதற்குத் தயாராக இருப்பவர்கள்.
தொழில் முனைவோர் கணக்கு வழக்குகளைப் பார்க்காமல் அலட்சியமாக இருப்பது ஒரு பக்கம் என்றால், அடுத்ததாக சந்தையைச் சரியாக ஆய்ந்தறியாமல உற்ப தியில் இறங்குவது. ஆழம் தெரியாமல் காலை விடும் முயற்சி இது. மூன்றாவது ஆர்வக் கோளாறில் அதிக வட்டிக்குக் கடனை வாங்கி மூச்சிறைத்து மூலையில் உட்கார்ந்து விடுவது.
இந்த மூன்றுமே பெரிய தடைகள். அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதைச் சொல்லித் தர வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே தொழில் பயிற்சி முகாம்களை ஏறத்தாழ 25 ஆண்டு களாக நடத்தி வருகிறேன். அல்லது பலரும் நடத்துகின்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறேன். அதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் உரையாற்றி உள்ளேன்.
‘மேடைப் பேச்சு’த் திறனை வளர்க்க நாங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். அதற்கான போடியம் அமைப்பு என் வழிகாட்டுதலோடு நடக்கிறது. கள நடவடிக்கைகளை நண்பர் திரு. வெங்கட் பார்த்துக் கொள்கிறார். திறன் படைத்த பல மேடைப் பேச்சாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள்.
தற்போது குறுகிய காலப் பயிற்சி அளிக்கிறோம். இரண்டு நாள்கள் நடக்கும். அரை நாள் இந்தத் திறன் பற்றிய விவரங்கள். மீதமுள்ள நேரம் முழுவதும் பங்கு பெறுபவர் கள் மேடையேறிப் பேச வேண்டும், சுழற்சி முறையில். ஒவ்வொருவருடைய வலுவான திறன் கூறுகளைக் கண்டறிந்து சொல்வோம். கூர் தீட்ட வேண்டிய விஷயங்களையும் சுட்டிக் காட்டுவோம்.
Also read:என்ன செய்தால், எப்படி செயல்பட்டால் நாம் வளரலாம்?
சீனிவாசன் என்பது ரொம்ப காமனான பெயர். ‘காமனான’ என்பதற்கு வேறு அர்த்தம் கொண்டு விடாதீர்கள். பரவலாக இருக்கும் பெயர் என்று சொல்ல வந்தேன். டெலிபோன் டைரக்டரியில் சீனிவாசனும், சுப்பிரமணியமும்தான் அதிகம் இருக்கிறது. அதனால் தனியாக அடையாளப் படுத்தும் போது சிரமம் இருக்கும். நான் ஆடிட்டர் சீனிவாசன் பேசுகிறேன் என்று ஃபோனில் சொன்னால் ‘எனக்கு அந்த பேர்லயே ஆறு ஆடிட்டரைத் தெரியும் சார்’ என்று கேட் போடுவார்கள். அதனால் ‘வெற்றி விடியல்’ அடைமொழியைச் சேர்த்துக் கொண்டேன். ‘வெற்றி விடியல்’ என்பது மாணவர்களுக்காக நான் நடத்தும் சுய முன்னேற்றப் பயிற்சியின் தலைப்பு. அவ்வளவே. இது விருதோ பட்டமோ அல்ல.
ஒரு கூடுதல் செய்தி. ஃபேஸ்புக்கில் சீனிவாசன் என்று தேடிப் பாருங்கள். ஆயிரக் கணக்கில் புரொஃபைல் வரும். மாறாக Vetri Vidiyal என்று மட்டும் தட்டச்சு செய்யுங்கள் போதும். Srinivasan என்று கூட தட்டச்சு செய்ய வேண்டாம். என் படம் தோன்றும். நான் எழுதிய இரண்டு நூல்கள் வெளி வந்து உள்ளன. சேமிப்பிற்காக ஒன்று. ‘பைசா கோபுரம் கட்டுவோமே.’ இன்னும் ஒன்று, சிறுதொழில் முனைவோருக்காக ‘பிசினஸ் ரகசியங்கள்.’
மூன்றாவது ஒரு மொழிபெயர்ப்பு. மும்பையைச் சேர்ந்த மேலாண்மைப் பயிற்சியாளர் திரு ஷாரு ரங்கனேகர் எழுதிய Learn Management from your wife என்னும் புத்தகம். தமிழில் ‘மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம்’ என்னும் தலைப்பில் மொழி பெயர்த்து உள்ளேன். மூன்றையுமே சென்னையைச் சேர்ந்த ‘கற்பகம் புத்தகாலயம்’ வெளியிட்டு உள்ளது.
புதிய தேடல் என்பது ஒரு சுவையான பணி. சான்றாக வானொலி நிலையத்தார் ஒரு முறை, பூட்டு என்பதையும் இன்னொரு முறை, பறவைகளின் கூடுகள் என்பதையும் தலைப்பாகக் கொடுத்தனர். ஒவ்வொரு தலைப்பிலும் 50 நிமிடங்கள். அப்போது நான் சேகரித்த விவரங்கள் பல டஜன் வியப்புக் குறிகளை என் தலைக்கு மேல் நடனமாட வைத்தன.
என்னுடைய முதன்மையான இலக்கு, வியாபாரம் செய்து வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு ‘முன் ஏர்’ போன்று இருக்க வேண்டும் என்பதே!” என்றார், வெற்றி விடியல் திரு. சீனிவாசன்
-சு. கணேஷ்குமார்