அமெரிக்காவில் அரசின் பொதுப் பள்ளிகளே அதிகம்!

“அமெரிக்காவில் அனைத்துப் பள்ளிகளும் தனியார் பள்ளிகள்தாமே?”, “அமெரிக்காவில் பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில்தானே படிக்கின்றனர்?” என்றெல்லாம் நண்பர்கள் கேட்பதுண்டு. ஆனால், இங்குள்ள நிலைமையோ நாம் நினைப்பதற்கு நேர்மாறானது.

அமெரிக்காவில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 5 கோடியே 60 இலட்சம் பேர். இவர்களுள் 5 கோடியே 7 இலட்சம் பேர், அதாவது ஏறத்தாழ 90% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர்.
இங்கு அரசுப் பள்ளிகள் பொதுப் பள்ளிகள் (Public Schools) என்று அழைக்கப்படுகின்றன. 10% மாணவர்கள் மட்டுமே தனியார் பள்ளிகளில் பயில்கின்றனர்.

Advertisement

2017-18 ஆண்டில் 33 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்களும், 3 இலட்சம் தனியார் பள்ளி மாணவர்களும்+2 முடிக்கின்றனர். பள்ளிப் படிப்பை முடிப்பவர்களில் ஏறத்தாழ 70% பேரே கல்லூரியில் சேருகின்றனர்.
அமெரிக்காவில் மொத்தம் 98,200 அரசுப் பள்ளிகளும், 34,600 தனியார் பள்ளிகளும் உள்ளன. அரசுப் பள்ளிகளோடு ஒப்பிடும்போது தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

32 இலட்சம் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் பணிபுரிகின்றனர். அரசுப் பள்ளிகளில் சராசரியாக ஓர் ஆசிரியருக்கு 16 மாணவர்களும், தனியார் பள்ளிகளில் ஓர் ஆசிரியருக்கு 12 மாணவர்களும் உள்ளனர்.
2017-18 ஆண்டில் பள்ளிக் கல்விக்காக அரசுக்கு ஆன செலவு 623.5 பில்லியன் டாலர்கள் இன்றைய ரூபாய் மதிப்பில் 43 இலட்சத்து 64 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்குச் சமம்.

ஒரு கல்வி ஆண்டில் ஒரு மாணவருக்கு ஆகும் செலவு 12,300 டாலர்கள் (ஏறத்தாழ 8 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய்) ஆகும். மாவட்ட, மாநில, மத்திய அரசமைப்பின் மொத்தச் செலவில் 32% பள்ளிக் கல்விக்காகச் செலவிடப்படுகின்றது. அமெரிக்காவின் மொத்த ஜிடிபி-யில் 7 சதவீதத்துக்கும் மேல் கல்விக்காகச் செலவிடப்படுகின்றது. அதிகபட்சமாக 2009-ஆம் ஆண்டில் 7.6% செலவிடப்பட்டது. 2016-இல் 7.2% செலவிடப்பட்டுள்ளது.

இங்கு என் பேரன் முதல் வகுப்புப் படித்த அரசு தொடக்கப் பள்ளியில் நான் நேரில் பார்த்தவையும், தெரிந்து கொண்ட தகவல்களும்:
பெரிய பெரிய வகுப்பு அறைகள். ஒவ்வொரு மாணவர்க்கும் தனி மேஜை, நாற்காலி.
ஒரு வகுப்பில் 20 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள். போதுமான எண்ணிக்கையில் ஆண்/பெண் கழிப்பு அறைகள். மிகப்பெரிய நூலகம். ஏராளமான புத்தகங்கள், கணினிகள். மிகப்பெரிய விளையாட்டுத் திடல். அழகான கலையரங்கம்.
அரசுப் பள்ளிகளில் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் மட்டுமே படிக்க முடியும். கல்வி ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். ரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைக்கவே பெற்றோர் விரும்புகின்றனர். அதற்காக, அரசுப் பள்ளி இருக்கும் பகுதிக்கு மாறிக் கொள்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் இலவசக் கல்வி. புத்தகம், நோட்டு எதுவும் வாங்க வேண்டாம். யூனிஃபார்ம் கிடையாது. ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு உண்டு. மற்றவர்கள் மாதத் தொடக்கத்தில் ஒரு தொகையைச் செலுத்திவிட்டு, தேவையான நாட்களில் மதிய உணவு பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மாணவரும் டஜன் கணக்கில் பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றை வாங்கி ஆண்டுத் தொடக்கத்தில் பள்ளியில் கொடுத்துவிட வேண்டும். ஏழை மாணவர்கள் தர வேண்டியது இல்லை. அவற்றை மொத்தமாகப் போட்டு அனைத்து மாணவர்களும் பகிர்ந்து கொள்வர்.
புத்தகம், நோட்டுகள் எதையும் சுமந்து செல்ல வேண்டியது இல்லை. தினமும் ஒன்றிரண்டு ஹோம்-ஒர்க் தாள்களை ஒரு கோப்புறையில் வைத்துத் தருவர். அவற்றைச் செய்து முடித்து அடுத்த நாள் திருப்பித் தரவேண்டும்.
நொறுக்குத் தீனி, மதிய உணவு எடுத்துச் செல்லலாம். தூய்மையான குடிநீர் உண்டு.
சனி, ஞாயிறு, புதன் அரைநாள் பள்ளி விடுமுறை. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கின்ற வீட்டுக் குழந்தைகளை மாலை 6 மணிவரை பார்த்துக் கொள்ளும் வசதி உண்டு. அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.
தனியார் பள்ளிகளில் பள்ளிப் பேருந்து வசதி கிடையாது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உண்டு.

ஒரு பேருந்து நிறுத்தத்தில் பள்ளிப் பேருந்து நிற்கும்போது, சாலையின் இரு புறங்களிலும் செல்லுகின்ற வாகனங்கள் அனைத்தும் அப்படியே நின்றுவிட வேண்டும். பள்ளிப் பேருந்தைக் கடந்து எந்த வாகனமும் செல்லக் கூடாது. பிள்ளைகள் இறங்கி அல்லது ஏறி முடித்துப் பள்ளிப் பேருந்து கிளம்பிய பிறகே பிற வாகனங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்.

– அருணகிரி (மு. சிவலிங்கம் பதிவில் இருந்து..)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here