Latest Posts

பேக்கரி தொழில் நுட்ப பயிற்சி, மற்றும் கன்சல்டன்சி வழங்குகிறார், ‘செஃப்’ நரசிம்மன்

- Advertisement -

பேக்கரி உணவு பொருள்கள் தொடர்பான பயிற்சியாளராக வளர்ந்து வருகிறார், செஃப் திரு. நரசிம்மன். எண்ணற்ற பயிற்சிகளை நாடு முழுவதும் சென்று வழங்கி வருவதோடு, ப்யூரட்டோஸ் (Puratos) என்ற பேக்கரி மூலப் பொருள்கள் விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனத்தில் தெற்கு மண்டலத்துக்கான ஆலோசகராகவும் (டெக்னிக்கல் அட்வைசர்) இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணல்மேல்குடி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவரின் இன்றைய வளர்ச்சிக்குப் பின் உள்ள செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது.

”எனது தந்தை ஒரு விவசாயி. மிகவும் எளிய குடும்பம். எனக்கு ஒரு அண்ணன். ஒரு தங்கை. அப்பா,அம்மா எங்களை மிகவும் சிரமப்பட்டுதான் படிக்க வைத்தார்கள். அண்ணன் மருத்துவம் படித்தார். நான் டிப்ளமோ இன் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்தேன். எனக்கு சமையல் கலை மிகவும் பிடிக்கும். நான் அந்த துறையில் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து, என் உறவினர்களும், நண்பர்களும் என்னை சமையல்கலை வல்லுநர் என்று அழைத்துப் பெருமைப்படுத்துவார்கள்.

படிப்பை முடித்த உடன் பெரிய ஓட்டல்கள், ஏர்லைன் கேட்டரிங், சுற்றுலா கப்பல் போன்றவற்றில் பணி புரிந்ததில் நல்ல அனுபவம் கிடைத்தது. அடிப்படையில் நான் ஒரு செஃப்(Chef). பணி புரிந்து கொண்டே தொலைநிலைக் கல்வியில் பி. எஸ்சி., டூரிசம் அண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட், எம்பிஏ (ஹோட்டல் மேனேஜ்மென்ட்) படித்தேன். அடுத்து ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷன் படித்தேன். இப்படி இந்த துறை சார்ந்த செய்திகளை படிப்பு வாயிலாகவும், அனுபவம் வாயிலாகவும் கற்றுக் கொண்டே இருந்தேன்.

அண்ணனும் நானும் வேலைக்கு செல்ல தொடங்கிய காலகட்டத்தில் அப்பா தவறி விட்டார். எங்களின் தாய் மாமா எப்பொழுதும் எங்களுக்கு உறுதுணையாக நின்றார். தேவைப்பட்ட நேரங்களில் எல்லாம் உதவினார்; வழிநடத்தினார்.

அபுதாபி, சவூதி மற்றும் இத்தாலியில் உள்ள நிறுவனங்களில் பேஸ்ட்ரி செஃப் (Pastry Chef) ஆக வேலை செய்தேன். அங்கு வேலை செய்த போது எனக்கு நல்ல சம்பளம் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் எனக்கு கீழ் நிறைய பேர்கள் வேலை செய்தார்கள். அவர்களுக்கு நான்தான் தலைவர். .நான் 2012 -ல் விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தேன். மீண்டும் இத்தாலி செல்வதற்கான பயணச்சீட்டு மற்றும் விசா கிடைத்தும் அம்மாவின் உடல்நலக் குறைவு காரணமாக நான் இத்தாலி செல்லவில்லை. அப்பா இல்லாத நிலையில் அம்மாவின் பாசத்தையும் அன்பையும் மீறி என்னால் வெளிநாடு செல்ல இயலவில்லை. அப்பொழுது பணம் எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.

எனவே இந்தியாவிலேயே வேலை செய்ய முடிவு செய்தேன். மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு உணவுத் தொழில் தொடர்பான பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி வழங்குநர் ஆக பணி புரிந்தேன், அங்கு உணவு பதப்படுத்துதல் பொறியியல் மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள், வேளாண்மைத் துறை மாணவர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளித்தேன். அங்கு என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதுவரை சுமார் பன்னிரெண்டாயிரம் பேர்கள் அளவுக்கு பயிற்சி அளித்து இருக்கிறேன்.

மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் அங்கு பணியாற்றினேன். அதன் பிறகு பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா(PMKVY), நேஷனல் ஸ்கில் டெவலப்மென்ட் திட்டம்(NSDC), ஃபுட் இண்டஸ்ட்ரி கெப்பாசிட்டி அண்ட் ஸ்கில் இனிஷியேட்டிவ் (FICSI) போன்றவற்றில் பேக்கரி தொழில் நுட்ப வகுப்புகளுக்கு பயிற்றுநராக சென்றேன். அதைத் தொடர்ந்து பிஎம்கேவிஒய் பயிற்சிகளான க்ராஃப்ட் பேக்கர், மிக்சிங் டெக்னீஷியன், ஊறுகாய் தொழில் நுட்பம் ஆகிய மூன்று பயிற்சிகளுக்கு க்கும் 450 கேள்விகள் உள்ளங்கிய வினா வங்கி தயார் செய்தேன். அதில் க்ராஃப்ட் பேக்கர் (Craft Baker course) பயிற்சிக்கு நான் தயாரித்த கேள்விகளை தேர்வு செய்திருந்தார்கள். இந்தியா முழுக்க நடைபெற்ற அந்த தேர்வில் நான் தயாரித்த கேள்விகள் இடம் பெற்று இருந்தன.அந்த தேர்விற்கு நானும் ஒரு தேர்வு மேற்பார்வையாளர் ஆக சென்று இருந்தேன்.

செஃப் திருமதி. கீதா கிருஷ்ணன், திரு. ப்ரிஜேஷ் எட்வர்ட் ஆகிய இருவரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஐதராபாத்தில் பேக்கர்ஸ் டெக்னாலஜி பொருட்காட்சி நடைபெற்றது. .இந்த பொருட்காட்சி இந்தியாவில் ஆண்டுக்கு இரு முறை, இரு நகரங்களில் நடைபெறும். ஒன்று கோயம்புத்தூர். மற்றொன்று ஐதராபாத். ஒரு முறை ஐதராபாத்தில் நடைபெற்ற பொருட்காட்சிக்கு என்னை பங்கு கொள்ளுமாறு திருமதி. கீதா கிருஷணன், திரு. ப்ரிஜேஷ் எட்வர்ட் இருவரும் அழைத்து இருந்தார்கள். அந்த பொருட் காட்சியில் நானும் எனது நண்பர்கள் இருவரும் பங்கு பெற்று இருபத்தைந்து வகையான ஐசிங் (Icing& Frosting) தயாரிப்புகளை செய்து காட்டி பயிற்சி அளித்தோம். 2018-ல் ஒரு முறை பார்வையாளர்கள் நடுவே நூறு வகையான சிறுதானியம் மற்றும் பருப்பு வகைகளை வைத்து உடல் நலனை மேம்படுத்தும் அடுமனைப் பொருட்களை செய்து காட்டி அவர்களின் பாராட்டுகளைப் பெற்றேன்.

தற்போது நான் தொழில் நுட்ப ஆலோசகராக இருக்கும் ப்யூரட்டோஸ் நிறுவனம் பெல்ஜியம் நாட்டை தலைமை இடமாகக் கொண்டது. 1919 ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் நூறு ஆண்டுகளைத் தொட்டு விட்டது. உலகளவில் பத்தாயிரம் பேர்களுக்கும் மேல் இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். இந்தியாவில் இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. ப்யூரட்டோஸ் சார்ந்த பணிகளுக்காக சென்னை தவிர பெங்களூரு, கேரளா, ஐதராபாத்துக்கும் செல்ல வேண்டி இருக்கும்.

ஒருமுறை இராமநாதபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சிறு தானியங்களில் கேக் மற்றும் குக்கீஸ் தயாரிக்க பயிற்சி கொடுத்தேன். அதில் நூற்று இருபது சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டார்கள்.

மைதா மாவு அறவே இல்லாமல் எப்படி குக்கீஸ்களையும், கேக்குகளையும் தயாரிப்பது என பயிற்சி கொடுத்தேன். மைதா இல்லாமல் இத்தகைய பொருட்களை உருவாக்க முடியும் என்பதை அறிந்த அவர்கள் வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள். நான் வழங்கிய பயிற்சி அடிப்படையில் அவர்களை குக்கீஸ்களையம், கேக்குகளையும் சிறப்பாக தயாரித்தார்கள்.

Also read:பீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை

நான் படித்த கல்லூரியின் கேட்டரிங் மாணவர்களுக்கு இது போன்ற பயிற்சி அளிக்க அக்கல்லூரி முதல்வர் அரிமா திரு. சயத் என்னை அழைத்திருந்தார். இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது
மனிதர்களின் வாழ்க்கையில் உணவு, உடை, வீடு ஆகியவை இன்றயமையாதவை. அப்படி இருக்கையில் உணவுத் துறையை தேர்ந்து எடுப்பவர்களுக்கு எப்பொழுதும் வேலை இருந்து கொண்டேதான் இருக்கும். சொந்தமாக உணவுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு கள் ஒளி மிகுந்ததாகவே இருக்கும்.

உணவுத் தொழில் முயற்சிகள் ஈடுபடுபவர்களுக்கு நான் சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன். மக்களிடையே உணவுகள் தொடர்பான விழிப்புணர்ச்சி அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட உணவு உடல்நலனுக்கு உகந்ததா, புதிதாக உள்ளதா, தரமாக உள்ளதா என்று கவனத்துதான் வாங்குகிறார்கள்.

ஒரு உணவகம் நடத்தினாலும், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மனநிறைவு கொள்ளும்படி உணவுப் பொருட்களை சமைத்து, தூய்மையான சூழலில், தூய்மையான முறையில் வழங்க வேண்டும். உணவகத்தில் பணிபுரிபவர்களில் சமையல் வல்லுநர்கள் மீது செலுத்தப்படும் கவனம் போலவே பாத்திரம் கழுவுகிறவர்கள் வரை செலுத்த வேண்டும். நீங்கள் என்னதான் சுவையாக, தரமாக தயாரித்து பரிமாறினாலும், பரிமாறப்படும் தட்டு சரியாகக் கழுவப்படாமல் இருந்தால் அத்தனையும் வீணாகி விடும். வாடிக்கையாளர்களின் முகச் சுழிப்பே பரிசாகக் கிடைக்கும்.

புதிய உணவுகளை அறிமுகப்படுத்த விரும்பினால், அவற்றை தயாரித்து நாம் சாப்பிட்டுப் பார்த்து நமக்கு சுவையாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர் களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். உணவு சார்ந்த தொழில்களை பெரிய அளவில்தான் தொடங்கி நடத்த வேண்டும் என்பது இல்லை. முயற்சியும், உழைப்பும் இருந்தால் சிறிய அளவில் தொடங்கியும் வளர முடியும்.

நான் தமிழ் வழியில் படித்தவன் என்பதை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பின்னர் தேவைக்கேற்ப சில மொழிகளைக் கற்றுக் கொண்டேன். இன்று நான் சரளமாக ஆங்கிலம் பேசுவேன். மேலும் இந்தி, மலையாளம், அரபிக் மற்றும் ஸ்பேனிஷ் போன்ற மொழிகளில் நன்றாக பேசுவேன். எந்த ஒரு மொழியும் பேசப் பேசத்தான் வரும்.

சென்னையில் லீட் அகாடமி பயிற்சி நிறுவனமும், நானும் இணைந்து பேக்கரி தொழில் தொடர்பான பயிற்சிகளை வழங்க இருக்கிறோம். வரும் செப்டம்பர், 29 ஞாயிறு அன்று இத்தகைய ஒரு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், பேக்கரி தொடங்க, பேக்கரி பொருள்கள் தயாரித்து கடைகளுக்கு வழங்கும் நிறுவனங்கள் தொடங்க, காஃபி ஷாப் தொடங்க, ஒட்டல்கள் தொடங்க, பார் உடன் இணைந்த ஓட்டல்கள் தொடங்க என்று அவற்றுக்குத் தேவையான ஆலோச னைகளையும், ஆலோசனைக் கட்டணம் பெற்று வழங்கிக் கொண்டிருக்கிறேன்.
ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத் தருகிறேன்.

உணவுத் தொழில் சார்ந்த விரிவான நூல் ஒன்றை எழுதும் ஆசையும் இருக்கிறது. ஓட்டல் மேனேஜ்மென்ட் – கேட்டரிங் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்த துறை சார்ந்த தொழில் முனைவோருக்கும் பயன்படும் வகையில் எழுத வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறேன்.” என்றார், திரு. நரசிம்மன். (9626585358)

– இளங்கதிர் யோகி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news