கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரங்களைப் பெற தமிழ்த் தளங்களுக்கும் வாய்ப்புன்

பொதுவாக இணைய தளங்களைக் காணும் போது அவற்றில் விளம்பரங்களையும் காண நேரிடுகிறது. அந்த விளம்பரங்கள் நேரடியாக தள உரிமையாளர் மூலம் வெளிவருவது இல்லை. ஒரு இணைய தளத்தின் உரிமையாளர் இணைய விளம்பரங்களை வழங்கும் ஒரு நிறுவனத்தில் பதிவு செய்து தனது தளத்தில் ஒரு பகுதியை வாடகைக்கு விடுகிறார்.


அதில் விளம்பரங்கள் அந்த நிறுவனத்தால் காட்டப்பட்டு ஒரு சன்மானத் தொகை தள உரிமையாளருக்கு வழங்கப்படும். இது இணைய விளம்பர வர்த்தகமாகும். இணைய தளத்துடன் நிற்காமல், குறுஞ்செயலி வரை இந்த விளம்பர வாய்ப்பு வளர்ந்து உள்ளது.


இதில் கூகுள் நிறுவனத்தால் விளம்பரங்களைப் பெற்று வழங்கி வரும் ஒரு பிரிவுக்கே ஆட்சென்ஸ் (ad-sense) என பெயரிட்டு உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மொழித் தளங்களுக்கு கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரங்கள் வழங்கியது இல்லை.


இந்திய மொழிகளில் கூகுள் பங்களிப்பின் தொடர்ச்சியாக இந்தி, வங்காள மொழிக்குப் பிறகு தமிழ் மொழித் தளங்களுக்கு கூகுள் ஆட்சென்ஸ் வசதியை கடந்த மாதம் வழங்கியது.


மேலும் இணைய விளம்பர வணிகத்தில் தமிழும் இடம் பிடிக்கப் போகிறது. இதனை விளக்கவும், விளம்பரப் படுத்தவும் கூகுள் நிறுவனம், சென்னையில் கடந்த மார்ச் 13 அன்று “Google for தமிழ்” என்ற நிகழ்ச்சியை நடத்தியது.


இணையத்திற்கு வரும் புதுப் பயனர்களின் ஒன்பதில் மூவர் மாநில மொழிப் பயனர்களாவர். பத்தில் ஒன்பது விளம்பரங்களை மாநில மொழி விளம்பரமாகக் கொடுக்கவே விளம்பரதாரர்கள் விரும்புகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தளங்களுக்கு இந்த வசதி கிடைத்து உள்ளது.


கலந்துரையாடலில் டெட்டாயில், ஒன்இந்தியா, ரீட்எனிவேர், மெட்ராஸ் சென்ட்ரல் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.


அந்த கலந்துரையாடலின்போது, தமிழ்ப் பயனர்கள் அதிகமாக மறுமொழி இடுகிறார்கள், தமிழ்ப் பயனர்களின் ஆண், பெண் விகிதாச்சாரம் உயர்வு, ஜியோ வருகைக்குப் பின்னர் யூடியூப் பார்வையாளர் அதிகரிப்பு, தமிழில் அரசியல் மற்றும் சினிமா வாசகப் பரப்பு அதிகம் போன்ற செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.


தமிழ் தளங்களாக பிளாகர் மூலமாகவோ, பிற வழியிலோ செலவில்லாமல் தொடங்கி, எழுதி வருவாய் ஈட்ட முடியும். அச்சில் வரும் சிறு பத்திரிகைகள் இனி இணையத்திலும் வெளிவந்து வருவாய் ஈட்ட முடியும்.


சிறுதொழில் செய்பவர்களும் தளங்கள் அமைத்து விளம்பர வருமானம் பெற முடியும். தளத்தில் எப்படி இணைப்பது என்பது தொடர்பான நுட்ப வழிகாட்டலுக்கு tech.neechalkaran.com /2018/03/ adsense.html பக்கத்தைப் பார்க்கலாம். ஆட்சென்ஸ் அலுவல் முகவரி google.com/adsense.

-நீச்சல்காரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here