திருமணம் வருகிறது. விருந்து சமைக்க வேண்டும். அதற்கு சமையல் வல்லுநர்களை அழைப்போமா? அல்லது தெரிந்தவர் என்பதற்காக சமையலில் அடுப்பு கூட சரியாக பற்ற வைக்கத் தெரியாதவரை அழைப்போமா? பணத்தைக் கொட்டி, தொழில் முனைவோராக இருப்பவர்கள் எல்லோருமே, தானே மேலாண் இயக்குநராக இருப்பது சரியா, இல்லையா என்ற கலந்தாய்வு எல்லா மட்டங்களிலும் நடந்து கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு ஜவுளித் துறை குடும்பத் தொழிலாக இருக்கலாம், 4 – 5 தலைமுறைகளாக அந்த ஜவுளித் துறையில் கொடிகட்டிப் பறக்கலாம்.
ஆனால், அவருக்கு, மின்னணுக் கருவிகள் தயாரிக்கும் தொழில் செய்ய ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால், அவருக்கு அந்த தொழிலைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாத பட்சத்தில், தானே மேலாண் இயக்குநராக இருப்பேன் என்பது சரியா என்பதுதான் கேள்வி.
சில கோடி பணம் போட்டுத் தொடங்கிய நிறுவனம், வளமான வாய்ப்புகள் உள்ள தொழில். இதைப் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு இல்லாத பட்சத்தில், சந்தை முதல் மனிதவள மேம்பாடு வரை தொழிலின் முக்கிய அம்சங்கள் எல்லாவற்றையும் அறிந்து இருக்க வேண்டும்.
சிறிய சிக்கல் முதல் பெரிய சந்தேகம் வரை அனைத்தையும் சமாளிக்கும் நுட்பம் தெரிந்து இருக்க வேண்டும். எப்படி சமையலைப் பற்றி அனைத்தும் தெரிந்தவரை திருமண விருந்து சமைக்க அணுகுகிறோமோ, அதுபோலத்தான், இந்த புதிய தொழிலில், அனைத்தையும் தெரிந்தவர்தான் மேலாண் இயக்குநராக அல்லது முக்கிய நிர்வாகியாக இருக்க முடியும்.
தொழில் முனைவோர் எல்லாருமே நல்ல நிர்வாகியாக இருக்க முடியுமா? தொழில் முனைவு வேறு, நிர்வாகம் என்பது வேறு. அவை ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தொழிலை சிறப்பாக நிர்வகிக்க, தொழில்முறை மேலாண் இயக்குநரே தேவைப்படுகிறார். தொழில் முனைவோரே நல்ல நிர்வாகியாக அமைந்தால் சிறப்பு.
ஆனால், மேற்கண்ட ஜவுளிக் கடை உரிமையாளர், மின்னணுக் கருவிகள் தயாரிப்பு நிர்வாகத்தில், போதிய நிர்வாகத் திறமை இல்லாத பட்சத்தில், நல்ல நிர்வாக வல்லுநர்களை பணிக்கு அமர்த்திக் கொண்டு, புதிய தொழிலில் அடியெடுத்து வைக்கலாம். தொழில் தொடங்க பணம், துணிச்சல் இருந்தால் மட்டும் போதாது. தொழிலை திறம்பட நிர்வகிக்கவும் வேண்டும். தொழிலின் நெளிவு சுளிவுகள், சந்தையின் சந்து பொந்துகளை அறிந்து இருக்க வேண்டும்.
பல தொழில் முனைவோர்கள் தொடக்கத்தில், நல்ல வல்லுநர்களின் துணை உடன் தொழிலைத் தொடங்கிவிட்டு, நன்றாக கற்றறிந்த பின்பு, நிர்வாகத்தையும் தானே ஏற்று நடத்தி, வெற்றி பெறுகிறார்கள். ஆனால், அந்த தொழில் முனைவர், நிர்வாகத்திற்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது, நம்பிக்கை, நாணயம் கொண்டவர்களையே பணிக்கு அமர்த்த வேண்டும்.
அப்படி நம்பிக்கை கொண்டவர்கள் கூட பிற்காலத்தில் மாறிவிட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த நபர்கள் மீது கண்காணிப்பு வைத்து இருக்க வேண்டும். தொழில் முனைவோர் விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்மூரைப் பொறுத்தவரை, நிர்வாகம் தெரியாத தொழில் முனைவோரால் கெட்ட தொழில்களும் உண்டு; அல்லது நம்பிக்கைக் துரோகம் செய்பவர்களை நிர்வாகத்தில் அமர்த்தி, கெட்ட தொழில்களும் உண்டு. நம் தொழில் எங்கு பயணிக்க வேண்டும் என்பதை ஒரு தொழில் முனைவோராய் திட்டமிடுங்கள். நம்பிக்கையான நிர்வாக ஆட்களை பணிக்கு அமர்த்துங்கள். அந்த நிர்வாகிகளைத் தொடர்ந்து கண்காணியுங்கள். தொலை நோக்குத் திட்டங்களைத் தீட்டுங்கள். அதை அடையும் பொறுப்பை அந்த நிர்வாக வல்லுநர்களிடம் விட்டுவிடுங்கள்.
– ஆலன்பாரி