அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு சென்று வேலை பார்த்தால் நன்றாக சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம் நம் இளைஞர்கள் இடையே அதிகமாக நிலவி வருகிறது. ஏன், நம் அனைவருக்கும்கூட அமெரிக்கா என்றதும் நினைவிற்கு வருவது கணினி மென்பொருள்கள் தொடர்பான வேலை வாய்ப்புகள்தான். அது ஒரு வகையில் உண்மைதான். ஏனெனில் அமெரிக்காவில் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இருக்கின்றனர்.
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்துறை முன்னணியில் உள்ளது. அங்குள்ள அதிக மக்கள் மோட்டார் வாகன உற்பத்தி, இராணுவத் தடவாளங்கள், மின்சாரம், குளிர்சாதனப் பெட்டி, வேளாண்மை, போக்குவரத்து போன்ற தொழில்களில் ஈடுபட்டு இருக்கின்றனர். எனவே அன்றாடப் பயன் பாட்டுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்கிறார்கள். இந்த வாய்ப்பை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் சீனர்களே. அமெரிக்காவிற்குத் தேவைப்படும் ஆப்பிள் கணினி முதல் விளையாட்டு பொம்மைகள் வரை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவின் மக்கள்தொகை 32 கோடி. பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பெரிய பணக்காரர்களும், வறுமையில் உள்ளவர்களும் சிறிய அளவில் இருக்கிறார்கள். அமெரிக்காவில் மக்கள் அனைவரும் நம் நாட்டு மக்களைப் போல சொத்துகள் சேர்த்து வைப்பது இல்லை. ஒரு கார், ஒரு வீடு என தேவைகளை அளவோடு வைத்துக் கொள்கிறார்கள். அங்கே, ஒரு வீடு இந்த குறிப்பிட்ட அளவில்தான் இருக்க வேண்டும் என்று அரசே தீர்மானிக்கிறது. பொதுவாக அவை அடுக்குமாடி குடியிருப்புகள்தான். அதேபோல் நம்மால் தனியாக நிலம் வாங்கி வீடுகட்ட முடியாது.
அதற்கென இருக்கின்ற நிறுவனங்கள் கட்டிய வற்றைதான் வாங்க வேண்டும். அந்த வீடுகள் அவர்களுக்குப் போதுமான அளவில் இருப்பதால் அனைத்து மக்களும் அதிலே வாழ்ந்து பழகிக் கொள்கிறார்கள். மற்றும் இரண்டாவது வீடு யாரும் வாங்குவது இல்லை. இந்த வாழ்க்கை முறையால் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை நன்றாக செலவு செய்கின்றனர்.
அதனால் பலவற்றை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். அது மற்ற நாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல பலனை தருகிறது. இந்த அரிய வாய்ப்பினை நாமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றுள் ஆயத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
ஆயத்த ஆடைகள்
அமெரிக்காவில் ஆடைகளில் பல வகைகளை இறக்குமதி செய்கிறார்கள். ஆண்கள், பெண்கள் இருவருமே பேன்ட்- சட்டை அணிகிறார்கள். அங்கே ஆறுமாதங்கள் வரை கடுங்குளிர் நிலவுகிறது. அதனால் அந்த குளிர்காலத்தில் கம்பளி ஆடைகள், தோல் பொருட்களால் செய்யப்பட்ட மேலாடைகள் ஆகியவற்றை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அதுவே கோடை காலங்களில் பருத்தி ஆடைகளைத் தேடி வாங்குகிறார்கள்.
அவர்கள் வாங்கும் இந்த பருத்தி ஆடைகள் பெரும்பாலும் வியட்நாம், கம்போடியா, மலேசியா, வங்காள தேசம் மற்றும் இந்தியா ஆகியவற்றின் தயாரிப்புகளாக இருக்கின்றன. இதில் இந்தியாவின் பங்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன்னால், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடை தயாரிப்பில் இரண்டு லட்சம் பேர் ஈடுபட்டு இருந்தனர். அதில் குறிப்பாக பெண்களும் அடங்குவார்கள். தற்போது சில ஆயிரம் பேர்கள் தான் இந்த தொழிலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல காரணங்களைக் கூறுகின்றனர்.
அண்மையில் நான் அமெரிக்காவில் தங்கி இருந்த போது பல நகரங்களுக்கும், கடைகளுக்கும் செல்ல வேண்டி இருந்தது. அங்கு பருத்தி ஆடைகள் அணிந்த பலரைப் பார்க்க முடிந்தது. அவை வியட்நாம், மலேசியா, கம்போடியா தயாரிப்புகளாக இருந்தன. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ஆடைகளும் கடைகளில் தொங்க விடப்பட்டு இருந்தன. விசாரித்த போது, மழைக்காலம் தொடங்கும் போது 50% தள்ளுபடிக்கு விற்பனை ஆகும் என்று கூறினார்கள். அதற்குக் காரணம், 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நீலம், சிவப்பு நிறங்களில் கட்டம் போட்ட சட்டைகள் இன்றளவும் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாம் அனைவரும் முன்பு இருந்தது போல பழைய வடிவமைப்பிலோ அல்லது நிறங்களிலோ இருக்கின்ற ஆடைகளை இன்றைக்கு பயன்படுத்துவது இல்லை. அவற்றை வாங்குவதும் இல்லை. இந்த நிலையில் நாம் ஏற்றுமதி செய்யும் அந்த தயாரிப்புகளின் தரத்திலும், வடிவமைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாமல் இருப்பது நமது வளர்ச்சிக்கு வழி வகுக்காது அல்லவா?.
மனிதர்கள் அனைவருமே புதிய மாற்றங்களை விரும்புகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் நாமும் அவர்களது தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அவர்கள் வாங்கும் படியான தயாரிப்புகளை மற்ற நாடுகளே ஈடுசெய்கின்றன.
நான் இரண்டு ஆடைகள் வாங்கினேன். ஒன்று வியட்நாம் தயாரிப்பு. மற்றொன்று கம்போடியா தயாரிப்பு. அவற்றின் நேர்த்தியும், வண்ணமும், வடிவமைப்பும் அவ்வளவு அழகாக இருந்தன. எனவே தரமான நூல், புதுப்புது வடிவமைப்பு, சிறப்பான தையல் ஆகியவை ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கு மிக முக்கியம். இதில் கவனிக்க வேண்டிய மற்றோன்றும் இருக்கிறது. அமெரிக்கர்கள் பொதுவாக, ஆறடி உயரமானவர்கள். பருத்த நெடிய உடல் அமைப்பை உடையவர்கள். அதற்கு ஏற்ப பெரிய சட்டைகள் தேவை. அங்கே அதிகமாக, L,2L,3L,4L போன்ற அளவுள்ள சட்டைகள் விற்பனை ஆகின்றன.
பெண்களுக்கான ஆடைகள் தேவையான மாற்றங்களுடன் தைக்கப்பட வேண்டும். ஆடைகள் தங்கள் மதிப்பை உயர்த்தும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனமாகவே உள்ளார்கள். இப்படி நுணுக்கமாகக் கவனித்துச் செயல்பட்டால் ஏற்றுமதி வணிகத்துடன், தமிழ்நாட்டின் ஆயத்த ஆடைகள் தொழிலும் வளர்ச்சி அடையும். துணிகளில் புதுப்புது வடிவமைப்பு செய்ய செலவு அதிகம் ஆகும். ஏனெனில் அதற்கென ஆடைவடிவமைப்பு (ஃபேஷன் டெக்னாலஜி) படித்தவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டி இருக்கும். அவர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கும். நூலுக்கு வண்ணம் தீட்டுவதில் தொடங்கி நெசவு, தையல் என அனைத்திற்கும் செலவு செய்ய வேண்டி இருக்கும். கைத்தறி நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களும் இந்த செலவை சுமையாகவே பார்ப்பார்கள்.
எனவே பலர் கூட்டாகச் சேர்ந்து முதலீடு செய்து வடிவமைப்பு நிலையங்களைத் தொடங்கலாம். அல்லது ஆடை வடிவமைப்புக் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதன் மூலம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த வகை ஒப்பந்தங்கள் தற்போது உணவு விடுதிகளுக்கும் உணவக மேலாண்மைக் கல்லூரிகளுக்கும் இடையே ஏற்பட்டு உள்ளதால், பல நகரங்களில் உள்ள உணவகங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இதனை ஆடை ஏற்றுமதியாளர்களும் பின்பற்ற வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ஏற்றுமதியாளர்கள் இந்த ஆடை வடிவமைப்பு நிறுவனங்களுக்கும் நெசவாளர்களுக்கும் பாலமாகச் செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
-நாஞ்சில் செ. நடராசன்