உலகில் மொத்த நிலப்பரப்பு இருபத்தெட்டு விழுக்காடுதான். மீதம் இருக்கும் எழுபத்திரெண்டு விழுக்காடு கடல் என்ற அளவீட்டினை நாம் நாட்டினர் பெரிதாக எடுத்துக் கொள்வதேயில்லை.
இன்றைக்கு இருக்கும் இந்த நிலத்தில் நாம் பயிரிட்டு உணவினை உற்பத்தி செய்து வருகிறோம். இருக்கவும், தொழிலுக்குமான இடத்தைப் பயன்படுத்துகிறோம் என்றால் உலகின் மொத்த கடல் பரப்பில் எவ்வளவு வாய்ப்புகள் இருக்கும் என்பதை பற்றி சிந்திப்பவா்கள் வெகு சிலரே. அளவில்லாத ஒரு காரணியை குறிப்பிட ‘கடல் போல’ என சொல்கிறோம். இதிலிருந்தே கடலில் தொழில் வாய்ப்புகள் எவ்வளவு இருக்கும் என்பது நமக்கு புரிகிறது.
தற்போது இருபது லட்சத்திற்கும் மேலான உயிரினங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டு dள்ளன. மேலும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் நமக்குத் தெரிந்த உணவு பொருட்கள் 0.1 விழுக்காடுதான். மீன், நண்டு, இறால் போன்றவை அதிலேயே அடங்கும். இன்னும் எத்தனையோ வகை உண்ணக்கூடியவைகளும் மற்றும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களும் கடலில் உள்ளன.
நம்மிடையே அறியப்படாத , இல்லை இல்லை, இது வரையில் யாரும் முயலாத கடல் சார்ந்த தொழில் வாய்ப்புகள் எத்தனையோ உள்ளன.
மீன் பிடிப்பு தவிர நிலத்தில் நாம் செய்வதைப் போல கடலிலும் சுற்றுலாத் தொழிலை வெகு சிறப்பாகச் செய்ய முடியும். அருகிலுள்ள இலட்சத் தீவுகள், அந்தமான், போன்றவற்றிற்கும் ஏன் கரையோர கடல் சுற்றுக்கும் நாம் அனுமதியைப் பெற்று படகுகளை இயக்கி பணம் சம்பாதிக்க முடியும். நமது கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என்பதை நாம் அறிவோம். கிழக்கிந்திய கடற்கரையின் நீளம் ஏழாயிரத்தை நூறு கிலோ மீட்டராகும். இதனை சுற்றுலாவிற்கு நாம் பயன்படுத்துவதில்லை மாறாக கேரளத்தினர் கடல் சுற்றுலா தொழிலை மேற்கொண்டு நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.
மேலும், கடலில் நீச்சல் பயிற்சி, சர்ஃபிங் (Surfing) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற அலை சறுக்கு விளையாட்டு போன்றவற்றை நாம் கடற்கரையில் தொழிலாக செய்யலாம். சென்னையில் கோவளம் பகுதியில் கடல் சறுக்கு விளையாட்டுத் தொழிலை சிலர் நடத்தி வருகின்றனர்.
கடல் உணவுத் தொழிலானது நமது கடற்கரையைப் போல மிக நீளமான கூறுகளைக் கொண்டதாகும். மீன் பிடிக்கப் படகுகள் தேவை. அவற்றைத் தயாரிக்க ஒரு தொழில்.
அவற்றிற்கான மரங்கள் இங்கு கிடைக்காது, கேரளத்திலிருந்து எடுத்து வர வேண்டும். எனவே அந்த மரத்தை இறக்குமதி செய்யும் தொழில், படகுகளுக்கான எஞ்சின் தயாரிக்கும் தொழில், அவற்றை பழுது நீக்கும் தொழில், படகுகளில் மின் அமைப்பை உருவாக்கும் தொழில், வலை பாதுகாப்பு கருவிகள், கயிறுகள் போன்றவற்றைத் தயாரிக்கவும், விற்கவுமான தொழில், மீன்களைப் பதப்படுத்த ஐஸ் கட்டிகளைத் தயாரிக்கும் தொழில், பெரிய ஐஸ் பாறைகளை தூளாக்கும் எந்திரம் மற்றும் அதனை செய்யும் தொழில். மீனவர்களுக்கான தண்ணீர், உணவு போன்றவற்றிலுள்ள தொழில் வாய்ப்புகள் என மீனவர்களைச் சுற்றிலும் இன்னும் எத்தனையோ தொழில் வாய்ப்புகள் உள்ளன.
கடலுணவு உற்பத்தியில், நம்மிடையே அதிகம் அறிமுகமில்லாத ஆனால் தற்போது விரைவில் செயல்படவுள்ள கடல் வேளாண்மை என்னும் தொழில் வாய்ப்பு நமக்கு மிகுந்த லாபத்தை அளிக்க கூடிய தொழில் வாய்ப்பாகும். கடலில் நமக்கு தேவையான இடத்தினை அரசிடம் அனுமதி பெற்று வலைகட்டி அதில் நாம் மீன் குஞ்சுகளை இட்டு வளர்த்து விற்கலாம். இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமியர்கள் இந்த தொழிலில் சிறப்பாக லாபம் ஈட்டி வருகின்றனர். இப்போது இந்தத் தொழில் தொடர்பான பயிற்சிகள் சென்னையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த கடல் வேளாண்மையில் இருபது கிலோவிற்கும் மேல் வளர்கின்ற மீனை நாம் பெற முடியும். இந்த தொழிலுக்கு நமது அரசாங்கம் மானியமும் உள்ளது. நமது நாட்டிற்கு ஆண்டிற்கு சுமார் பதினைந்து கோடி வரையிலான அந்நியச் செலவாணி, தற்போது மீன் ஏற்றுமதி மூலம் கிடைக்கின்றது. மேலும் அது உயர்ந்து கொண்டும் வருகிறது.
மேலும் நமக்குத் தெரிந்த மீன் வகைகளைத் தவிர்த்து பார்த்தோமேயானால் ஆளி, மட்டி, சங்கு மடக்கிரால், கடமா, ஜெல்லி மீன், சுறா பீலி, களி நண்டு போன்றவை வெளிநாடுகளில் பெரிய அளவிற்கு விலைபோகின்றன. ஆளி, மட்டி, சங்கு போன்றவற்றிலுள்ள சதை பகுதிகளை உண்ணும் வழக்கத்தினை நாம் கொண்டிருக்கவில்லை. அதனால் அவற்றின் அருமை நமக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அவை அதிக அளவில் விரும்பி உண்ணப்படுகின்றன. சங்கு கொல்கத்தாவில் அதிக அளவில் வாங்கப்படுகிறது. அதனைக் கொண்டு அலங்காரப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு உள் நாட்டிற்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதியில் வெகு சிலரே இதனை செய்கின்றனர்.
இங்கு ‘சொரிமீன்’ என அறியப்படுகின்ற ஜெல்லி மீன் வெளிநாடுகளில் மதிப்புமிக்க உணவுப் பொருளைத் தயாரிக்க பயன்படுகிறது. மற்றும் சுறா பீலி எனப்படுகின்ற சுறா மீனின் துடுப்பு பகுதியிலிருந்து தயாரிக்கப்படும் சூப் விலை மதிப்பான உணவு வகைகளில் ஒன்றாகும். மடக்கிரால் என்னும் இரால் வகை பார்ப்பதற்கு கொஞ்சம் பெரியதாகவும், வால் பகுதி முன்புறமாக வளைந்தும் காணப்படும். அதில் செய்யப்பட்ட உணவு வியட்நாமில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.
நம்மிடையே பேய்க்கடமா என்று அழைக்கப்படும் முள் இல்லாத மீனில் செம்புச்சத்து அதிகம் உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் அந்நியச் செலவாணி மிக அதிகம். முள் இல்லாத காரணத்தினால் வெளிநாடுகளில் இதனைக் கொண்டு உயர்தர மீன் உணவுகளை உருவாக்கின்றனர். நமக்கு நன்னீரிலும், கடலிலும் கிடைக்கும் களி நண்டு mud crab) மிகுந்த ஏற்றுமதித் தரம் வாய்ந்த ஒரு நண்டு வகையாகும். அவை கிலோவிற்கு நானூரில் இருந்து ஐந்நூறு வரையில் விலை போகின்றது. இது தவிர வண்ண மீன்கள், அதற்கான பவழப்பாறைகள் பெரிய அளவுக்கு விலை போகின்றன.
பல வகையான உணவுப் பொருட்களைத் தயாரிக்க பயன்படும் கடல்பாசியை நாம் அதிகம் கண்டு கொள்வதில்லை. மொத்தம் பதினெட்டு வகையான கடல்பாசிகள் உள்ளன. இந்தியாவை தவிர மற்ற ஆசிய நாடுகளில் முக்கிய துணை உணவுப் பொருளாக இந்த கடல் பாசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள் உள்ளன.
அது தவிர மீன் பிஸ்கட், மீன் ஊறுகாய், மீன் கட்லெட் போன்று வெளிநாட்டவர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளை நமது மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி எளிதாகத் தயாரிக்க முடியும். மற்ற நாடுகளில், கடலுணவு மற்றும் கடலிலிருந்து பெறும் பொருட்களை அப்படியே ஏற்றுமதி செய்வதில்லை. கடலுணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழில் வாய்ப்புகளில் தான் லாபம் அதிகம் ஈட்டப்படுகிறது.
அக்வா கல்சர் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகளில் ஒருவராக வியட்நாமிற்குச் சென்று அங்கு சிறப்பு பெற்றுவரும் கடல் உணவுத் தொழில்களை ஆராயும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வியட்நாம் மிக குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்த ஒரு ஆசிய நாடாகும். அவ்வாறு அந்நாட்டின் பொருளாதாரம் உயர்ந்ததற்கு அங்குள்ள கடல் உணவுத் தொழில்களும் முக்கிய காரணம். கடலிலேயே மீன் வளர்ப்புத் தொழிலை செய்கிறார்கள்.
அங்குள்ள ஒரு மீன் சந்தைக்கு நான் சென்ற போது அங்கே எந்த நாற்றமும் இல்லை. அவர்கள் கடலுணவுப் பொருட்களை முறையாக பதப்படுத்தியும் , உடனடியாக சமைப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றை தரம் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களாகவும் தயாரித்து விற்கின்றனர். கழிவுகளை நீக்கி உரிய காற்று புகாத பைகளில் அடைத்து விற்கின்றனர். அங்கு கல்வியறிவு பெற்றவர்கள் கடல் உணவுத்தொழிலில் பெருமளவு இறங்கியுள்ளனர். ஆண்களை விட பெண்கள் தலைமையில் நடக்கும் இத்தொழில்கள் அங்கு ஏராளம்.
கடலுணவு சார்ந்த தொழில் வாய்ப்புகளைப் பற்றி படித்த இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மீனவர்கள் மரபுவழி திறனோடு தனது சந்ததிகளின் கல்வியறிவையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடலில் தொழில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இது மீனவர்களுக்கான தொழில் என நினைப்பதும் ‘மீன்காரன்’ என தாழ்வுப்படுத்துவதும் நம் நாட்டில் மட்டும் தானே தவிர மற்ற நாடுகளில் கடலை சார்ந்து தொழில் புரிபவர்கள் பெரும் பணக்காரர்களாக விளங்குகின்றனர். நவீன தொழில் நுட்ப அறிவைப் பெற்று மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதித் தரத்தில் உருவாக்கி வளர்ந்து வருகின்றனர்.
இது தொடர்பான தொழில் வாய்ப்புகளை நம்மவர்கள் அறிய முயல வேண்டும். இதற்கு உதவ, வழிகாட்ட பல அரசு அமைப்புகள் உள்ளன. MPEDA (Marine Products Exports Development Authority) என்னும் மத்திய அரசின் கடலுணவு ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்தை அணுகி கடல் சார்ந்த உணவு மற்றும் இதர கடல் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலைத் தொடங்கவும், வளர்க்கவுமான தகவல்களையும், உதவிகளையும் பெறுவதற்கான வழிகாட்டல்களையும் பெறலாம். (CMFRI) Central Marine Fishers Reserch Institute) என்று அழைக்கப்படும் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தையும் அணுகலாம். இது போன்று அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களின் தமிழக கிளைகளைப் பயன்படுத்தி இங்கு கடல் சார்ந்து அறிமுகமாகியுள்ள புதிய தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகளையும், வழிகாட்டல்களையும் பெறலாம்.
– ‘கடலார்’ க.வேலாயுதம்.