கடன் நிர்வாகம்
கல்வி கற்க பள்ளிக்கும், உடலை நோயில் இருந்து பாதுகாக்க மருத்துவரிடமும், வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ள வாகன பள்ளிக்கும் எதெல்லாம் நமக்கு தெரியாதோ அதை தெரிந்தவர்களிடம் சென்று அதை கற்றுக் கொள்கிறோம்.
பணம்-கடன் தொடர்பான நிர்வாகம் கடைசிவரை கற்றுக் கொள்வதும் இல்லை, நிதி ஆலோசகரிடம் கேட்பதும் இல்லை. அதனால் கடன் அளவு சேர்ந்து கொண்டே போகுமே தவிர கடைசி வரை கடனுக்காகவே வாழவேண்டிய சூழல் வரும். இதற்கு எடுத்துக் காட்டு ஒன்றைபார்த்து விட்டு அடுத்து செல்வோம்.
பல நாடுகளில் உள்ள நடைமுறை என்பது வங்கிக்கு சென்று வீட்டு கடன் கேட்டால் வங்கி அதிகாரி உங்களை நிதி ஆலோசகரிடம்(Financial Advisor) இருந்து சான்றிதழ் வாங்கி வர சொல்லுவார்.
நீதி ஆலோசகர் உங்கள் வருமானம், கடன் அளவு, சேமிப்பு, எதிர்காலத்தில் உயரும் வருமானம், குடும்ப சொத்து, பிள்ளைகள் படிப்பு, திருமண செலவு என்று அனைத்துவிதங்ளிலும் ஆராய்ந்து எதை எப்பொழுது செய்ய வேண்டும், எதை தள்ளிப்போட வேண்டும், எதை செய்ய வேண்டாம் என்று உங்களுடைய பொருளாதார நிலையை அறிக்கையாக கொடுப்பார். இந்த அறிக்கையில் நம் நிதி நிலைமை எப்படி உள்ளது என்று தெரியவரும். அதை பார்த்து வங்கி கடன் கொடுப்பார்கள்.
இந்தியாவில் இதுவரை அப்படி எந்த நிதி விதிமுறையும் இல்லை. வீட்டு கடன் வேண்டுமென்றால் நேரடியாக வங்கியில் கேட்கலாம் அவர்கள் ஒரு நிதி ஆலோசகர் அளவுக்கு உங்கள் பொருளாதார நிலையை பார்க்கமாட்டார். வருமான உள்ளதா என்று பார்த்து வீட்டு கடன் கொடுப்பார். இப்படி கடன் ஒருவருக்கு கிடைப்பதால் ஒருவரின் கடன் அளவு சேர்ந்து கொண்டே போவதற்கே வாய்ப்புகள் அதிகம்.
ஒரு கடன் வாங்கிவிட்டால் போதும் அடுத்த சில வருடங்களில் கிரடிட் கார்ட் கடன், வாகன கடன், தனிநபர் கடன்(Personal Laon) என்று கூடி கொண்டே செல்லும். அப்படித்தான் இன்று சென்னை போன்ற மாநகரங்களில் பெரும்பாலானோர் உள்ளனர்.
வேலைக்கு சேர்ந்த அடுத்த வருடத்திலேயே வீட்டு கடன் வாங்க தொடங்குகிறார்கள். இவர்கள கடன் வாங்க முயற்சி செய்யவில்லை என்றாலும் வங்கி தொடர்ந்து இவர்களை கடன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று நச்சரித்து கொண்டே இருப்பார்கள். ஆக அடுத்த வருடமே வீட்டு கடன் வாங்கி விடுவார்கள்.
ஒரு கடன் என்பது குறுகிய-நடுத்தர காலம் கடனாக இருக்க வேண்டும். வீட்டு கடன் என்பது 15 வருடம், 20, 25 வருடம் கடன் கட்டும் காலமாக இருக்கும். உங்கள் வாழ்க்கை முழுவதும் கட்டிக் கொண்டு இருப்பபீர்கள்.
ஒரு உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு கடன் வாங்கிய அடுத்து ஆறு மாதம் ஆர்வமாக கட்டுவோம். பிறகு கட்டுவதில் தொய்வு ஏற்படும். காரணம் இன்னும் பல ஆண்டுகள் கடன் கட்ட வேண்டும் என்ற எண்ணம் நம் மூளையை சோர்வு அடைய வைக்கும்.
கடன் கட்டும் காலம் குறுகிய காலமாக இருக்க வேண்டும். 5 அல்லது 7 ஆண்டுகள் இருந்தால் நல்லது. ஆனால் வீட்டு கடன் தொகை அதிகம் என்பதால் குறுகிய காலத்தில் கட்ட முடியாது. ஆனாலும் வீடு அனைவருக்கும் தேவை என்பதனால் இங்குதான் நாம் நிதி ஆலோசகர் ஆலோசனையை பெற வேண்டும். அவர் உங்கள் நிதி நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்து எப்பொழுது வீடு வாங்க வேண்டும் என்பதை தெரிவிப்பார். அவ்ருடைய ஆலோசனைப்படி செய்ய தொடங்கினால் பண சிக்கல் இல்லமால் கடனை கட்டி முடிக்கலாம்.
இன்றைய சூழலில் கடன் வாங்குவது எளிது. வீட்டு கடன் கொடுக்க வங்கி, தனியார் நிதி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளது. ஒரு வங்கி கடன் கொடுக்கவில்லை என்றால் நிதி நிறுவனங்கள்உங்களுக்கு கடன் கொடுப்பார்கள். ஆனால் வட்டி கொஞ்சம் உயர்வாக இருக்கும்.
பொதுத்துறை வங்கியைவிட தனியார் வங்கி, நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் வீட்டிற்கே வந்து ஆவணங்களில் கையெழுத்து வாங்கி செல்வார்கள். நமக்கும் நம்முடைய வேலைகளுக்கிடையே இது சுலபமாக இருக்கும். ஆனால் இவ்வளவு சுலபமாக கிடைக்கும் கடன் எப்படி செயல்படுகிறது என்று பார்க்க வேண்டும்.
பொதுத்துறை வங்கியில் தாமதமாகும் அதில் மாற்று கருத்துக்கள் இல்லை. ஆனால் உங்களால் ஒரு மாதம் கடன் தொகை கட்ட முடியவில்லை என்றால் அல்லது தாமதமாக கட்ட முடிந்தால் தனியார் வங்கி, நிதி நிறுவன ஊழியர்கள் தொடர் போன் செய்து பேசிக் கொண்டே இருப்பார்கள்.
அப்படியும் உங்களால் கட்ட முடியாத நிலை இருந்தால் வீட்டுக்கு வர தொடங்குவார்கள். நமக்கு அது அசிங்கமாகி விடும். இன்னும் பல இடங்களில் சண்டை செய்வது, மிரட்டுவது நாம் கேள்விப்பட்டு இருப்போம். இது தவிர தாமதமாக கட்டியதற்கு அபராதம் செலுத்த வேண்டும். நிச்சயம் இவை கூடுதலாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
ஆனால் பொதுத்துறை வங்கியில் கடன் வாங்க தாமதமானாலும் இந்த சிக்கல்கள் அதிகம் இருக்காது. வங்கி ஊழியர் பேசுவார், ஆனால் தனியார் வங்கியில் அதற்கென்று பணியில் இருப்பவர் பேசுவார். நாம் நேரிடையாக பொதுத்துறை வாங்கி மேலாளரை சந்தித்து பேச முடியும். தனியார் வங்கியில் அப்படி எந்த வங்கிக்கும் சென்று மேலாளரை சந்தித்து பேச முடியாது காரணம் அவர்களுக்கும் கடனுக்கும் சம்மந்தம் இருக்காது.
ஒரு உணர்வுபூர்வமான உறவு முறை நமக்கு தனியார் வங்கிக்கும் இருக்காது. கடன் கொடுத்தவர், கடன் வசூலிப்பவர், நம்மிடம் பேசுபவர் எல்லோரும் வேறு வேறாக இருப்பார்கள். அதனால் முடிந்தளவு வீட்டு கடன் வாங்க பொதுத்துறை வங்கியில் வாங்க முயற்சி செய்யுங்கள். தாமதமானாலும் முயற்சி செய்யுங்கள்.
மிக நீண்ட ஆண்டுகள் கட்ட கூடிய வீட்டு கடன் என்பதால் நமக்கும் வங்கிக்கும் இணக்கமான உறவு முறை இருந்தால் நல்லது. சில முறை உங்களால் ஒரு மாதம் கட்ட முடியாத, தாமதமாக கட்ட முடிக்கிற கடன் தொகைக்கு பொதுத்துறை வங்கி மேலாளரை சந்தித்து பேசி நம் நிலைமையை சொல்லாம். என்றைக்கும் அப்படி தனியார் வாங்கி ஊழியர்களை சந்தித்து பேச முடியாது. பேசலாம் ஆனால் அந்த நபர்கள் மாறி கொண்டே இருப்பார்கள். அனைவரிடமும் மீண்டும் முதலில் இருந்து சொல்ல வேண்டும்.
கடன் வாங்கும் முன்பு ஒரு நிதி ஆலோசகரை சந்தித்து பேசுங்கள். குடும்ப மருத்துவர் என்பது போல் அவரை குடும்ப நிதி ஆலோசகர் என்று நினைக்க தொடங்குங்கள். தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் நிதி ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.
பெரிய கடன் தொகை, மிக நீண்ட கடன் கட்டும் காலம் போன்றவற்றுக்கு பெரும்பாலும் பொத்துறை வங்கியில் கடன் வாங்க முயற்சி செய்யுங்கள். அப்படி முடியவில்லையென்றால் தனியார் வங்கிக்கு செல்லுங்கள். ஆனால் நிதி நிறுவனக்ளுக்கு மட்டும் செல்லாதீர்கள் இங்கு வட்டி மிக அதிகமாக இருக்கும் வாழ்க்கை முழுவதும் கடன் கட்டவே சரியாக இருக்கும்.
இதே நிலையை தொழில் தொடங்கிய பெரும்பாலானோர் பல இடங்களில் கடனை வாங்கி விடுவார்கள். இன்னும் நண்பர்களுக்கும் வாங்கி கொடுப்பார்கள்.
கடன் சிக்கல்
ஒரு வாடிக்கையாளர் தொடர்பு கொண்டு வங்கியில் முத்ரா கடன் வாங்கும் முறைகளை கேட்டார். அவர் பெரிய தொழில் செய்பவர், நீண்ட அனுபவம் தொழிலில் உண்டு. பல லட்சங்களில் வியாபாரம் செய்பவர். அவருக்கு எதற்கு முத்ரா கடன் என்று யோசித்தால் இவருடைய நண்பர் செய்யும் தொழிலுக்கு இவர் கடன் வாங்கி பல லட்சம் கொடுத்து உள்ளார். அந்த கடனை நண்பரால் திருப்பி செலுத்த முடியவில்லை. அதற்கு சரியான காரணம் இருந்தாலும் மாதம் வட்டி ஏறிக் கொண்டு போகும் என்பது உண்மை
முத்ரா கடன் சிறு தொழில் செய்பவர்களுக்கு குறிப்பாக தெரு ஓரமாக தொழில் செய்யும் மாவு விற்பவர், டீ கடை நடத்துபவர், செருப்பு தைப்பவர் இதுபோல் தொழில் செய்பவர்களுக்கு எந்தவித அடமானமும் இல்லாமல் கடன் கொடுக்க அரசு உருவாக்கிய கடன் திட்டம் ஆகும்.
இந்த கடன் திட்டத்தில் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் முதல் அதிகபட்சம் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. எடுத்தவுடன் நேரடியாக 10லட்சம் கடன் கொடுக்க மாட்டார்கள். ஐம்பதாயிரம் அல்லது 1 லட்சம் கொடுப்பார்கள் அதை எப்படி திருப்பி செலுத்துகிறீர்கள் என்று பார்த்து அடுத்து உயர்த்துவார்கள்..
ஒரு கட்டத்தில் இவர் தொழிலும் ஏற்றம் பெறவில்லை. நண்பருக்கு வாங்கிய கடனுக்கு இவர்தான் முழு பொறுப்பு. இவர் பெயரில்தான் வாங்கி கொடுத்து உள்ளார். கடன் தொகை பெரியது. மாதம் வட்டி இவர் கொடுத்து வருகிறார். எவ்வளவு நாள் அப்படி கொடுக்க முடியும். இப்பொழுது சிக்கலில் உள்ளார்.
நண்பர் நல்லவர் ஆனால் அவரிடம் பணம் இல்லையே. இவராலும் திருப்பி கொடுக்கும் அளவு தொழில் நடக்கவில்லை. இதற்குதான் முத்ரா கடன் கேட்டார். உங்களுடைய கடன் அளவுக்கு எப்படி முத்ரா கடன் தொகை போதும் என்று கேட்டேன்?
பல நபர்கள் பெயரில் வாங்கலாம் என்று சொன்னார். அவரிடம் தெளிவாக சொன்னேன். அப்படி வாங்க முடியாது. சுலபமாக வங்கி கண்டுபிடித்துவிடுவார்கள். ஏன் நீங்கள் கணக்கு வைத்து உள்ள வங்கியில் முத்ரா கடன் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பினேன்.
அவர் தனியார் வங்கியில் கணக்கு வைத்து உள்ளர். இதுவரை எந்த சிக்கலும் வங்கிக்கும்-இவருக்கும் இல்லை. ஆனால் தனியார் வங்கி இவர் கேட்ட முத்ரா கடன் நாங்கள் கொடுப்பதில்லை என்று ஏதேதோ காரணகள் சொல்வதாக சொன்னார்.
கடைசியாக என்ன சொன்னார்கள் என்று கேட்டதற்கு நீங்கள் சரியாக ஆவணங்கள் கொடுத்தாலும் ஆவணம் சரியில்லை என்று திருப்பி கொடுத்து விடுவோம் என்று அந்த தனியார் வங்கி அதிகாரி சொன்னதாக சொன்னார்.
பல ஆண்டுகள் கணக்கு வைத்து எந்த சிக்கலும் இல்லாத வங்கியில் ஒரு முத்ரா கடன் வாங்கவே இவ்வளவு சிக்கல் இருக்கும்பொழுது எப்படி பல முத்ரா கடன் வாங்க முடியும் என்று கேட்டேன். அதுவும் முத்ரா கடன் விளிம்புநிலை மக்கள் தொழிலை மேம்படுத்தும் கடன் திட்டம்.
இந்த சிக்கலுக்கு ஆணிவேரை பார்ப்போம்.பல வீடுகளில் இது போல் நடைபெற்று இருக்கும்.
கடன் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வை எடுத்துக் கொள்ளலாம்.
கடன் என்பது மிக கூர்மையான கத்தியை கையில் வைத்து இருப்பதற்கு சமம். நாம்தான் வைத்து உள்ளோம் என்றாலும் யாரவது அசக்கினாலும் அவை நம்மையும் பதம் பார்த்து விடும். இவருக்கு நடந்து உள்ளதும் இதுதான்.
நண்பர் கடன் கேட்டார் என்று தம் பெயரிலேயா வாங்கி கொடுப்பது?. சிறு கடன் என்றாலும் பரவாயில்லை. பல லட்சம் ரூபாய் கடன். கடன் நிர்வாகம் இல்லாத நிலையே இது காட்டுகிறது.
இவர் இவ்வளவு ஆண்டுகள் கணக்கு வைத்து உள்ள வங்கி இவரின் அண்மைய கணக்கில் பண வரவு இல்லாததால் இவருக்கு எப்படி கடன் கொடுப்பது என்று யோசித்து தள்ளிப் போட்டு வந்து உள்ளது.
ஒருவரிடம் தனிப்பட்ட பழக்கம், தொழில் உறவு என்பது முற்றிலும் வேறு வேறு ஆக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் தனிப்பட்ட பழக்கத்தை கொண்டு தொழிலிலும் அப்படியே செய்யல்படுவதின் விளைவு இது ஆகும்.
தொழிலுக்கு கடன் வாங்கி கொடுக்க வேண்டுமென்றால் அவர் பெயரிலேயே வாங்கி கொடுத்து இருக்க வேண்டும். அப்படி நண்பர் பெயரில் வாங்க அணைத்து முயற்சியும் அவருக்காக நீங்கள் எடுக்கலாம். கடைசியாக உங்கள் பெயரில் தான் கடன் வாங்க முடியும் என்ற சூழல் உருவானால் அந்த கடனை நண்பர் கட்ட முடியவில்லையென்றால் உங்களால் கட்டும் நிதி நிலைமை இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நிச்சயம் இந்த செயலில் இருந்து விலகி விட வேண்டும்.
தொழில் என்றால் உணர்ச்சிக்கு இடம் கொடுக்க கூடாது. பல லட்சங்கள் பரிமாறும் இடம் என்பதால் தொழில் முறையில்தான் செயல்பட வேண்டும். கடன் மேலாண்மை தொழிலுக்கு மட்டுமே என்று நினைக்காதீர்கள் வீட்டுக்கும் கடன் மேலாண்மை உண்டு
-செழியன் ஜானகிராமன்