கடன் வாங்கிய இவர்கள் ஏன் திண்டாடினார்கள்?
தங்கள் வணிக வளர்ச்சிக்காக கடன் வாங்கி தொழில் செய்து வந்த தொழில் முனைவோர் சிலர் கடனை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் திண்டாடிய போது, அவர்கள் எந்த இடத்தில் தவறு செய்திருக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தேன். அப்போது சில காரணங்களை கண்டறிய முடிந்தது.
அவை,
கடைகளுக்கு சமையல் எண்ணெய் சப்ளை செய்யும் ஒரு வியாபாரி .மிகக் கடின உழைப்பாளி. எங்கள் நிறுவனத்தில் எழுபது லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்தார்.அவரை அணுகிய போது, பொருளை சப்ளை செய்து விட்டு கடைக்காரர்களிடம் சரியாக வசூலிக்கத் தெரியாமல் கோட்டை விட்டது தெரிய வந்தது. இந்த எண்ணெய் வியாபாரி ஏமாற்றப் பட்டிருந்தார்
ஒரு வணிக நிறுவனத்தில் வியாபாரம் நன்கு நடைபெற்றது. ஆனால் அவரால் லாபம் ஈட்ட முடியவில்லை. அது பற்றி ஆராய்ந்த போது, அவர் கணக்கு – வழக்கு பார்க்காத வியாபாரி என்பது தெரிய வந்தது. வருவாய் வந்தது, அதைவிட அங்கு செலவு கூடுதாலாக இருந்தது. மீண்டு வர முடியாத கடனுக்குள் இருந்தார். வரவு-செலவை பார்த்து செயல்படாததால் வந்த வினை.
ஒரு பல் மருத்துவர் நிறைய கடன் வாங்கி நவீன கருவிகள் போட்டு பல் மருத்துவ கிளினிக் தொடங்கினார். நோயாளிகள் வரவில்லை. கடனுக்காக மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இப்போது கிளினிக்கை மூடிவிட்டு மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு போகிறார். கடனை எப்படி அடைப்பாரோ? இவரிடம் சரியான திட்டமிடல் இல்லை.
ஒரு பிரபல கண்மருத்துவர் தன் சக்திக்கு மீறி ஏகப்பட்ட கடன் வாங்கியதால் குடும்ப நிம்மதியை இழந்தார். கடன்காரர்களுக்கு அஞ்சி மனைவி பிரிந்து தனியாக போனார். கடன்தொல்லையால் மருத்துவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தொழில் திறனையும் இழந்து விட்டார். ஒரு வழியாக கடன் சிக்கலில் இருந்து அவரை வெளியே கொண்டு வந்தோம்.
வணிக வளர்ச்சிக்கு கடன் அவசியம். ஆனால், கண்டிப்பாக திருப்பிச் செலுத்தும் திறன் அறிந்தே கடன் வாங்க வேண்டும்.
– நிதியியல் வல்லுநர் திரு. ஆ. சிவசங்கர்