- Advertisement -
2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன்.
உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று, வாடகை கொடுப்பேன். பிறகு, அவர்கள் கொளத்தூரில் ஒரு அடுக்குமாடி புதிய வீட்டில் குடியேறினார்கள். அங்கே சென்று கொடுத்து வந்தேன்.
ஆறு மாதங்கள் கடந்தன. ஒருநாள் அவர் என்னிடம், தம்பி இந்த வீட்டை நான் விற்கப் போகின்றேன். 7 இலட்சத்திற்கு வாங்கினேன். 10 இலட்சத்திற்குக் கேட்கின்றார்கள். உங்களுக்கு ஒரு இலட்சம் குறைத்து, 9 லட்சம் ரூபாய்க்குத் தருகின்றேன்.வாங்கிக் கொள்கின்றீர்களா? என்று கேட்டார்.
எனக்கு வியப்பாக இருந்தது. புது வீட்டில் குடியேறி, ஆறு மாதங்கள்தானே ஆகின்றது. அதற்குள் ஏன் விற்கின்றீர்கள்? என்று கேட்டேன்.
அவர் சொன்னார்.
தம்பி, என் கணவர் நடுவண் அரசின் ஒரு துறையில் எழுத்தர். 35 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. சென்னைக்கு வந்தேன். நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்து இருக்கின்றேன். முதலில் ஒரு வீடு வாங்கினோம். இரண்டு ஆண்டுகளில் அந்த வீட்டை விற்று விட்டோம்.
அதில் கொஞ்சம் பணம் கிடைத்தது. அதன்பிறகு, நான் வேறு வீடு வாங்கினேன்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்த வீட்டை விற்றேன். அதன்பிறகு, நான் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரு வீட்டில் குடியிருந்தது இல்லை. இப்படியாக, வீடு வாங்கி விற்று வந்ததில், மேலும் மூன்று வீடுகளை சொந்தமாக வாங்க முடிந்தது. அவற்றை, என் மகனுக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் எழுதிக்கொடுத்து விட்டேன்.
இப்போது என்னிடம் மூன்று வீடுகள் உள்ளன. இந்த வீட்டை நான் ஏழு இலட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். ஆறு மாதங்களில் எனக்கு இரண்டு இலட்சம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கின்றது. எனவே, இதை விற்றுவிட்டு, வேறு குடியிருப்பில் வீடு வாங்குவேன் என்றார்.
ஐந்தாம் வகுப்பு படித்த அந்தப் பெண்மணி, அவரது கணவர் வாழ்நாள் முழுமையும் அரசு வேலை பார்த்துக் கிடைத்த வருமானத்தை விட, எத்தனையோ மடங்கு பணம் ஈட்டினார். எத்தனையோ புதிய வீடுகளில் ரசித்து வாழ்நதார்.
காரணம், அவர் வீடு வாங்கி விற்றது.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வீடு மனை விற்பது அன்றாடத் தொழில்.
2000 ஆம் ஆண்டில், அமெரிக்கா சென்றபோது பார்த்தேன். அங்கே, வெள்ளிக்கிழமை வரை லாஸ் ஏஞ்செல்ஸ் அல்லது சான் பிரான்சிஸ்கோவில் இருப்பார்கள். அது அமெரிக்க நாட்டின் மேற்குக் கரை. திங்கட்கிழமை, ஃபுளோரிடா, நியூ யார்க் அல்லது
நியூ ஜெர்சிக்கு வந்து விடுவார்கள். இது, அமெரிக்க நாட்டின் கிழக்குக் கரை.
இரண்டுக்கும் இடைப்பட்ட தொலைவு எவ்வளவு தெரியுமா? 5000 கிலோ மீட்டர்.
அதாவது, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் போய், அதற்கும் மேலே 2000 கிலோமீட்டர் தள்ளி இருக்கின்ற ஊர்கள்.
மேற்கே இருக்கின்ற வீட்டை, இணையம் வழியாகவே விற்றுவிடுவார்கள். அதேபோல, கிழக்குக் கரையில் ஒரு வீட்டை, இணையம் வழியாகவே படம் பார்த்து வாங்கி விடுவார்கள். பணப்பரிமாற்றம், பத்திரப்பதிவு நடைமுறைகள் அனைத்தும் இணைய வழியில்தான். இடைத்தரகர் இல்லை. ஏமாற்று வேலை எதுவும் இல்லை.
அமெரிக்காவில், 5000 கிலோ மீட்டர் கடந்து இடமாற்றம் என்பது, மிகமிக எளிதாக நடைபெறுகின்றது.
ஆனால், தமிழ்நாட்டில் என்ன நிலைமை?
மதுரையில் இருந்து அரசு ஊழியர் ஒருவரை, திருச்சிக்கு மாற்றி விட்டால், உடனே அந்த ஊழல் பேர்வழி, பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வருவார்.
அரசியல்வாதிகள், அதிகாரிகளைப் பார்ப்பார். எப்படியாகிலும் அந்த இடமாற்றத்தை நீக்க முயற்சிப்பார். இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட பயண நேரம் இரண்டு மணிதான்.
கன்னியாகுமரியில் இருக்கின்ற ஒருவரை தருமபுரிக்கு மாற்றிவிட்டால், ஏதோ உலகத்தின் மறு எல்லைக்கு மாற்றி விட்டதுபோலத் துடிப்பார்கள்.
ஆயிரம் காரணங்களை உருவாக்கிச் சொல்லிப் பரிதவிப்பார்கள்.
கிராமங்களில் பெரிய பண்ணைகள் இருப்பார்கள். நன்றாக வாழ்ந்தவர்கள், மழை, விவசாயம் இல்லை என்றால், நலிவு அடைவார்கள். வீட்டுக்கு வெள்ளை அடிக்கப் பணம் இருக்காது. ஆனாலும், அந்த ஊரை விட்டு வெளியேற மாட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் பார்க்க மாட்டார்கள்.
ஆனால் இந்த ஐந்தாம் வகுப்பு படித்த பெண்மணி, வீட்டின் மீது எந்த சென்டிமென்டும் வைத்துக் கொள்ளாமல் வாங்கி விற்று, வாங்கி விற்று எத்தனை வீடுகள் வாங்கி பணக்காரி ஆகி இருக்கிறார் பாருங்கள்.
-அருணகிரி
9444 39 39 03
You, So Balu, Arunagiri Sankarankovil and 55 others
7 Comments
13 Shares
Like
Comment
Share
- Advertisement -