எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது, ஒருநாள் ஆசிரியரிடம் சென்று, கூட படித்த ஒருவனை பற்றி புகார் சொன்னதும், “எங்கே நீ சொன்னதை அப்படியே ஆங்கிலத்தில் சொல்லு” என்றார். நான் அதற்கு முன்னர் ஆங்கிலத்தில் பேசிப் பழக்கமே இல்லை. தட்டுத் தடுமாறி திக்கித் திணறி தப்பும் தவறுமாக நான் சொல்ல வந்ததை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னேன்.
பத்தாம் வகுப்பில் நானும் வகுப்புத் தோழன் ஒருவனும் வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த வழியில் “டேய் நாம இனிமேல் நமக்குள்ள இங்கிலிஷ்ல பேசிக்கலாம்டா” என்றான். “வேண்டாம்டா மத்தவனுக நம்மளை பீட்டர் வுடுறியானு நக்கல் பண்ணுவானுக” என தவிர்த்து விட்டேன்.
கல்லூரிக்கு போனால் ஆங்கிலம் பேச வேண்டி வரும் எனக் கருதி பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’ வகுப்புக்கு நானும் நண்பன் ஒருவனும் சென்றோம். தினமும் எங்களுக்குள் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொள்வோம். ஒருநாள் வேறொரு நண்பனோடு பிணக்கு ஏற்பட, ஆங்கிலத்திலேயே உரையாடிக் கொண்ட எங்களைப் பார்த்து கடுப்பான நண்பன் “என்னத்துக்குடா இப்போ நீங்க ரெண்டு பேரும் இங்கிலிஷ்ல பேசி சீன் போட்டுக்கிட்டு இருக்கீங்க” என சொல்ல அன்றோடு அந்த முயற்சியும் முடிவுக்கு வந்தது.
கல்லூரி சேர்ந்ததும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆங்கிலத்தில் பேசினேன். குறிப்பாக ஆங்கிலப் பேராசிரியரிடம். ஒருமுறை அவர் வீட்டுச் சென்ற பொழுது ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவர் மகள் சிறப்பாக ஆங்கிலம் பேசினாள். தயங்கிய என்னிடம் “குழந்தைங்க தப்புத்தப்பா உச்சரித்து, மெல்ல பேச கற்றுக் கொள்வது போலத்தான். ஆங்கிலத்தை தப்பா கூட பேசிப் பழகலைனா எப்போ சரியா பேசுவ” என்றார். என் தயக்கத்தை உடைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன்.
முதல் வேலையில் சேர்ந்ததும் என் மேலாளர் சொன்ன முதல் கட்டளை “அலுவலகத்தில் ஆங்கிலம் மட்டும்தான் பேசனும். நல்லா பேசிக் கற்றுக் கொள்”.
காரணம், அந்த வேலையில் வியாபார காரணங்களுக்காக நான் இந்தியா முழுக்க சுற்றி, பல நிறுவனங்களில் எங்களின் தொழில்நுட்ப தீர்வுகளை பற்றி விளக்கம் சொல்ல வேண்டும்.
அதன் பின்னர் மூன்று நிறுவனங்கள் மாறினேன். ஆனால் எல்லா இடங்கலும் ஒரு விதி வைத்து இருந்தேன். இயன்ற அளவில் எல்லோரிடமும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவது என்பதுதான் அந்த விதி.
அந்த ஐரோப்பிய நிறுவனத்தில் என்னுடைய மேலாளர்கள் தமிழர்கள்தான். சில சமயம் என்னிடம் அவர்கள் தமிழ் பேசினாலும் நான் ஆங்கிலத்தில் மட்டுமே பதில் சொல்வேன். என் எண்ணமெல்லாம் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்துவது மட்டுமே.
ஐரோப்பாவில் சில காலம் வேலை பார்ப்பதற்காக நாங்கள் ஐந்து பேர் அனுப்பி வைக்கப்பட்டோம். நான் அந்த குழுவை ஒருங்கிணைத்து செயல்பட்டேன். ஆறு மாதங்கள் முடிந்த பொழுது ஒரு முறை ஐரோப்பிய மேலாளரிடம் எங்கள் குழு பற்றி கருத்துக் கேட்டேன். ஒவ்வொருவரின் நிறை குறை எல்லாம் சொன்னார்.
என்னைப் பற்றிக் கேட்டதும் “நீ பொறுப்பாக வேலை பார்க்கிறாய். தகவல்களை வெளிப்படையாகவும் குறித்த நேரத்திற்கும் கொடுக்கிறாய். உன்னோட ஆங்கிலம் பேசும் திறமை அருமையாக இருக்குகிறது” என்றதும் பத்து ஆண்டுகள் தொடர்ந்த ஈடுபட்ட முயற்சிக்கு ஆங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி.
இன்றைய உலக மயமாக்கல் சூழலில் ஆங்கிலத்தில் பேசும் திறமை, மிகத் தேவையான திறமை.
– கபிலன் காமராஜ்