தமிழ் நாட்டின் சில்லரை வணிகம் என்பது தெற்கு மாவட்ட மக்களால் செழுமைப் படுத்தப்பட்ட ஒன்று. கடந்த அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் இந்த பணி தொடங்கியது. இதற்கு அவர்கள் பெரிய முதலீட்டை நம்பவில்லை. தங்கள் உழைப்பை யும், சிக்கனமான வாழ்க்கையை மட்டுமே நம்பினார்கள்.
தெற்கு மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக் குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களில் ஒரு சிலர் முதலில் சென்னைக்கு வருவார் கள். கையில் இருக்கும் பணத்தை வைத்து ஒரு மளிகைக் கடை அல்லது விறகுக் கடை அல்லது பாத்திரக் கடை போடுவார்கள். அதை விடவும் குறைவான பணம் வைத்து இருப்பவர்கள் ஒரு காய்கறிக் கடையைத் தொடங்குவார்கள். தங்களுக்கான சோற்றை தாங்களே பொங்கிக் கொள்வார்கள். வியாபாரம் கொஞ்சம் சூடு பிடித்ததும் ஊரில் இருந்து மனைவியை வர வைத்துக் கொள்வார்கள். பிறகு இருவருமாக சேர்ந்து கடையை நடத்துவார்கள். கடை விற்பனை அதிகரிக்கும்.
வேலைக்கு இன்னொரு ஆள் தேவைப்படும் காலம் உருவாகும். தங்கள் உறவினர்களில் இருந்து ஒரு இளைஞரை வர வைப்பார்கள். அவர் எல்லா வேலைகளையும் எந்த முகச் சுளிப்பும் இல்லாமல் செய்வார். காலையில் கடையைத் திறப்பது முதல், இரவு கடை மூடும் வரை உற்சாகமாக வேலை பார்ப்பார். முதலாளி வீட்டில் இருந்தே சாப்பாடு வந்து விடும். கடையின் ஒரு பகுதியிலேயே படுத்துக் கொள்வார். சில ஆண்டுகளில் தொழில் நன்கு பழகி விடும். அவருக்கு திருமணம் நடக்கும் காலம் வரும்போது, அதுவரை அவர் கணக்கில் சேர்ந்த பணத்தைக் கொண்டு அவருக்கு ஒரு கடையை முதலாளியே தொடங்கிக் கொடுப்பார். அல்லது அந்த வேலை பார்த்தவருக்கே தனியாக கடை போட வேண்டும் என்ற விருப்பம் வந்தாலும், அதற்கு முதலாளியும் ஒத்துழைப்பு கொடுப்பார்.
இதனாலேயே இன்றும் சில்லரை விற்பனைக் கடைகள் நடத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் தெற்கு மாவட்ட மக்களாகவே இருக்கிறார்கள்.
முதலில் சென்னை நோக்கி மட்டுமே வந்தவர்கள், பின்னர் கோவை, மும்பை, டெல்லிக்கும் செல்லத் தொடங்கி இதே முறையில் அங்கும் வளர்ந்தார்கள். மொழி அவர்களுக்கு ஒரு தடையாக இருக்க வில்லை. சென்ற சில மாதங்களிலேயே தங்கள் வியாபாரத்துக்குத் தேவையான அளவுக்கு இந்தி பேசப் பழகிக் கொண்டார்கள்.
நான்கைந்து ஆண்டுகளில் குறிப்பிட்ட தொகை சேர்ந்த உடன் அதை வைத்து தங்கள் பட்ஜெட்டுக்குள் ஒரு சொந்த வீட்டை வாங்கி விடுவார்கள்
இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தோன்றிய புதுமையாக சிந்தித்த சிலர், புதிய முறைகளை அறிமுகப்படுத்தினார்கள். அவர்களில் ஒருவரான திரு. செல்வரத்தினம், ‘கடையில் பொருட்களை குவித்து வைப்பேன்; மற்ற கடைகளை விட விலை சிறிது குறைவாக இருக்கும்; வாடிக்கையாளர்களே தங்களுக்குத் தேவையான பொருள்களை தேர்வு செய்து பில் கவுன்டரில் பணம் செலுத்தி எடுத்துச் செல்லலாம்’ என்னும் முறையை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை தியாகராய நகர், அரங்கநாதன் தெருவில் அறிமுகப்படுத்தினார். பெரிய வரவேற்பு கிடைத்தது. கூட்டம் குவிந்தது. கடை மிகவும் பெரிதாக வளர்ந்தது. அதுவரை இந்த மாதிரியான ‘ஷாப்பிங் அனுபவம்’ மிகையான வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது.
திரு. கிஷோர் பியானி என்ற வடநாட்டு வணிகர் இந்த கடைக்கு தொடர்ந்து வந்து ஆய்வு செய்து, இதைப் போலவே பிக் பசார் என்ற வணிக மையத்தை தொடங்கினார். இதை அவர் தான் எழுதிய ‘இட் ஹேப்பண்ட் இன் இந்தியா’ நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்த கட்ட வளர்ச்சியாக இத்தகைய பெரிய கடைகள் சென்னையின், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் தொடங்கப் பட்டன.
இத்தகைய முயற்சிகளைப் பார்த்த வேறு மாவட்ட மக்களும், நாமும் ஏன் இப்படி வணிக முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்று எண்ணியதன் விளைவு, இப்போது எல்லா மாவட்ட மக்களையும் சில்லரை வணிகத்தில் பார்க்க முடிகிறது. இருப்பினும் தெற்கு மாவட்ட மக்களே முன்னிலை வகிக்கிறார்கள்.
பெரிய அளவில் தொழில் நுட்பங்களில் ஏற்பட்ட மாற்றம் இன்று சில்லரை வணிகத்தை வேறு லெவலுக்கு உயர்த்தி இருக்கிறது. தொழில் நுட்பம் நிறைய வேலைகளை எளிதாக்கித் தந்து இருக்கிறது. பில் போடும், கணக்கை பராமரிக்கும் வேலைகளை கணினி எளிதாக்கி இருக்கிறது. கண்காணிப்பு பணிகளை சிசிடிவி எளிதாக்கி இருக்கிறது.
கடைகள் வடிவமைப்பு என்பது இன்றைக்கு மாற்றத்தை சந்தித்து வருகிறது. தங்கள் கடை சிறிதோ, பெரிதோ அவற்றை எப்படி இன்றைய காலக் கட்டத்துக்கு ஏற்ப வடிவமைக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டப்படுகிறது.
சாதாரணமாக குறைந்த முதலீட்டில் வணிகம் தொடங்கிய பலரிடம், இப்போது பெரிய அளவுக்கு வணிகங் களில் ஈடுபடும் அளவுக்கு முதலீடு இருப்பதால் அவர்கள் இப்போது பெரிதாக கடைகளை விரிவாக்குவது பற்றி சிந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா வந்து அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போட்டு விட்டது. இந்த நோய்த் தொற்றுக் காலம் எப்படியும் ஒரு முடிவுக்கு வந்தே தீரும். அதன் பிறகு தமிழ் நாட்டின் ரீடெய்ல் பிசினஸ் வேகமாக வளர்வதை உறுதியுடன் காண முடியும்.
இந்த சூழ்நிலையில் அமேசான் போன்ற நிறுவனங்களைப் பின்பற்றி ஆன்லைன் பிசினசை சில உள்ளூர் நிறுவனங்கள் கட்டமைத்து வருகின்றன. மக்களும் ஆன்லைனில் பொருட்களுக்கு ஆர்டர் தந்து, பணத்தையும் ஆன்லைன் வழியாகவே தரும் முறைக்கு படிப்படியாக மாறி வருகிறார்கள். இதனால் மோட்டார் சைக்கிள்களில் பறக்கும் டெலிவரி எக்சிக்யூட்டிவ்களை எங்கெங்கும் காண முடிகிறது.
– க. ஜெயகிருஷ்ணன்