டிரேட் மார்க்குக்கு வணிக உலகில் மிகவும் முதன்மாயான ஒரு இடம் உண்டு. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு டிரேட் மார்க் அதிக அளவில் பயன்படுகிறது. பொதுவாக டிரேட் மார்க் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அந்த நிறுவன விளம்பரத்தில் அந்த டிரேட் மார்க் நிச்சயம் இடம் பெற்று இருக்கும். டிரேட் மார்க் இல்லாமல் விளம்பரம் இருக்காது.
ஒருவர் சோப் வாங்குகிறார் என்றால் அவர் வெறுமனே சோப் கொடுங்கள் என்று கேட்க மாட்டார். லக்ஸ் கொடுங்கள், மைசூர் சாண்டல் கொடுங்கள், சிந்தால் சோப் கொடுங்கள், என்று அந்த சோப்புகளின் டிரேட் மார்க் சொல்லித்தான் கேட்பார்கள். அதைப் போலவே மற்ற பொருட்களாக இருந்தாலும் லயன் பேரீச்சம்பழம் கொடுங்கள்; இதயம் நல்லெண்ணெய் கொடுங்கள் என்றுதான் கேட்பார்கள். இந்த பெயர்கள்தான் அந்த நிறுவனங்களின் டிரேட் மார்க்குகள்.
மேலும் ஒரு குறிப்பிட்ட டிரேட் மார்க்கோடு தொடர்ந்து விற்பனை செய்யப்படும், விளம்பரப்படுத்தப்படும் பொருள்கள் நுகர்வோரின் மனதில் அழுத்தமாக பதிகின்றன.சான்றாக ஃபோட்டோ காப்பியர் நிறுவனம் ஒன்றின் பெயர், செராக்ஸ். பொருளின் பெயர் அது அல்ல. சோப்புக்கு எப்படி லக்ஸ், சிந்தால் என்று பெயரோ அப்படி நகல் எடுக்கும் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் டிரேட் மார்க் செராக்ஸ். ஆனால் இன்று நடைமுறையில் வேறு கம்பெனியின் நகல் எடுக்கும் எந்திரங்களையும் செராக்ஸ் எந்திரம் என்றே குறிப்பிடுகிறார்கள். இப்படி எல்லா ஃபோட்டோகாப்பியர்களையும் செராக்ஸ் என்று சொல்லக்கூடாது என்று செராக்ஸ் நிறுவனம் பல வகைகளிலும் முயற்சித்தாலும் அந்த நிறுவனத்தால் முழு வெற்றி பெற முடியவில்லை. ஒரு பொருளின் உண்மைப் பெயரையே மறக்கச் செய்யும் அளவுக்கு செராக்ஸ் டிரேட் மார்க்குக்கு வந்து விட்டதைக் காண முடிகிறது.
சில நிறுவனங்களுக்கு இருக்கும் நல்ல பெயரை நம்பி, அந்த டிரேட் மார்க் உள்ள பொருள்களை நுகர்வோர் கண்ணை மூடிக் கொண்டு வாங்குவதையும் பார்க்க முடியும். அணில் சேமியா, ஆச்சி மசாலா, அம்பிகா அப்பளம், மாருதி கார் போன்ற டிரேட் மார்க்குகளை இதற்கு சான்றுகளாகக் கூறலாம். இப்படி நிறைய டிரேட் மார்க்குகள் உள்ளன. இந்த செய்திகளில் இருந்து டிரேட் மார்க் எந்த அளவுக்கு விற்பனைக்கு உதவுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பேரீச்சம்பழம், பருப்புகள் போன்றவற்றைக் கூட பாக்கெட்டுகளில் அடைத்து பிராண்டுகள் ஆக்கி விற்பனை செய்ய உதவுவது டிரேட் மார்க்குகள்தான்.
ஒரு நிறுவனம் உருவாக்கி உலவ விடும் டிரேட் மார்க்கை, வேறு போட்டியாளர்கள் பயன்படுத்தி இடைஞ்சல் செய்யக்கூடும். இதனால் தகுந்த பாதுகாப்பைக் கருதி டிரேட் மார்க்குகளை டிரேட் அண்ட் மெர்க்கன்டைல் மார்க்ஸ் சட்டம் 1958-ன் படி பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. பதிவு செய்து கொண்ட பிறகு அந்த பெயரை பிறர் பயன்படுத்த முடியாது.
டிரேட் மார்க்குகளை கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் இல்லை. தகுந்த பாதுகாப்பினைக் கருதியே பதிவு செய்து கொள்ளப்படுகிறது. ஏனென்றால் தகவல் தொடர்பு சாதனங்களான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைத் தளங்களில் ஒரு நிறுவனத்தின் டிரேட் மார்க் நிறைய செலவு செய்து விளம்பரப்படுத்திப் படுகிறது. இதன் பயனை வேறு யாரும் கள்ளத் தனமாகவோ, தெரியாமலேயோ அடையாமல் இருக்க டிரேட் மார்க் சட்டப் பதிவு உதவுகிறது.
பெயர்கள், எம்பளம் எனப்படும் அடையாளச் சின்னங்கள், தனித்து உருவாக்கப்படும் எழுத்துகள், டிசைன்கள் போன்றவற்றை டிரேட் மார்க் சட்டவிதிகளுக்கு உட்பட்டு பதிவு செய்து கொள்ளலாம்.
பதியப்பட்ட ஒரு டிரேட் மார்க்குக்கு, அந்த டிரேட் மார்க்கின் மீது அதன் உரிமையாளருக்கு சொத்துரிமை வந்து விடுகிறது. எனவே ஒரு டிரேட் மார்க் அசையும் சொத்து ஆகவே கருதப்படுகிறது. இதனால்தான் கூட்டு நிறுவனங்களின் பங்காளிகளுக்குள் பாகப் பிரிவினை ஏற்படும்போது பதிவு செய்யப்பட்ட டிரேட் மார்க் ஒரு ஆடிட்டரால் மதிப்பீடு செய்யப்பட்டு, ஏதாவது ஒரு பங்காளியினால் அந்த டிரேட் மார்க்கின் சொத்துரிமை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளப்படுகிறது. தற்போது டிரேட் மார்க்கை ஆன்லைனிலேயே பதிவு செய்யும் வசதியும் வந்து விட்டது.
– வழக்கறிஞர் பி. சி. என். ரகுபதி