பிசினஸ் என்பது எதிர்பாராததையும் எதிர்பார்த்து ரிஸ்க் எடுப்பதுதான். அத்தோடு மாறிவரும் சமுதாயத்தில் தனிமனித உழைப்பு மட்டுமே வெற்றி பெறாது. கூட்டு உழைப்பு, நாணயம், நம்பிக்கை ஆகியவை மிக முதன்மையான அடிப்படைக் கூறுகள் ஆகும்.
அது இல்லை; இது இல்லை என்று நினைக்கக் கூடாது. இப்படி வசதி இருந்தால் இப்படி செய்வேன் என்ற மனக் கணக்கும், கனவும் கூடாது. தொழில் முனைவோர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மிகவும் முக்கியமானது. நாம் உறுதியாக நம்பினால் ஒழிய வெற்றி பெற முடியாது. வெற்றி என்பது ஒரு நீண்ட காலத் திட்டம். செய்வதை திட்டமிட வேண்டும்; திட்டமிட்டதை செய்ய வேண்டும். கடுமையான உழைப்பும், தியாக உணர்வும் மிகமிகத் தேவை.
மறைந்து இருக்கும் செல்வங்களை வெளிக் கொணர்வதும், பல்வேறு திறமைகளை ஒன்றிணைத்து குழுவாக நடத்திச் செல்வதும் தொழில் முனைவோரின் கடமை ஆகும். மாறி வரும் உலகத்திற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ‘வாடிக்கையாளர் சொல்வதே சரி’ என்பதை என்றும் நினைவில் வைத்து இருக்க வேண்டும்.
இருக்கின்ற குறைந்த வசதிகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். கிடைக்கின்ற வசதியை வைத்துக் கொண்டு முன்னேறுவதுதான் நம் திறமை. தொடக்க காலத்தில் மிகவும் கஷ்டப்பட வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டு விடக் கூடாது.
தனியாக தொழில் நடத்துவது என்பது கடலிலே படகை ஓட்டிச் செல்வது போல. வேலை செய்வது என்பது கப்பலிலே பணி புரிவது போல. படகை ஓட்டுபவர்களுக்கு அடுத்து எந்த அலையை எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்று தெரியாது. எந்த சுறா மீனைக் கடக்க வேண்டி இருக்கும் என்பது தெரியாது. நம்பிக்கையையும், உழைப்பையும் நம்பி பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.
சரியான தொழிலை தேர்ந்து எடுத்த பின் நம் திட்டங்களை நடைமுறைப்படுத்த நல்ல திறமையான பணியாளர்கள் தேவைப்படுவார்கள். பணிபுரிபவர்களின் ஈடுபாடும் மிகவும் தேவை. அவர்களின் ஆலோசனைகளுக்கும் செவி கொடுக்க வேண்டும். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களின் ஆலோசனைகளையும் பெற வேண்டும்.
வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும்போது ஏற்படும் வேலை பளுவைக் குறைக்க புதிய தொழில் நுட்பம் உள்ள எந்திரங்களையும், கருவிகளையும் நிறுவ வேண்டும். பல தொழில் அதிபர்களுடன் பழகும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
– வி. கே. ரங்கநாதன்